Monday, December 10, 2012

சாம்பல் நிலவு


கோப்பைகளில் நிரம்பி
வழிந்தோடும் மதுவில்
நம்முடைய முகங்கள்
சிதறி உடைகின்றன

குளிர்ந்த மாமிசத்தின்
மணம் கண்டு வந்த
குருட்டு பூனை
அறைக் கதவை
விடாது தட்டிக் கொண்டிருக்கிறது

நான்
மீண்டும் கோப்பைகளை நிரப்புகிறேன்

திரவமென ஊர்ந்து வந்த
பழைய ஞாபகங்களின்
அத்தனை குற்றச்சாட்டுகளும்
போதையில் நூல்போல்
திரிந்து புழுத்த நாற்றம்
உண்டு பண்ணுகின்றன
O
ஆடைகள் கலைந்து
நிர்வாணத்தின்
ரணமானத் தழும்புகளில்
மாறிமாறி முத்தமிட்டு கொள்கிறோம்

ஈரம் வற்றிபோன
எனது கண்களிலிருந்து
வழியும் காமத்தின் கொடுநஞ்சை
நீலம் பாரித்த உனது உதடுகளால்
உறிந்தெடுக்கிறாய்

உனது செழித்த முலைகளில்
நான் முகம் புதைக்க
என் கண்ணீரின் வெம்மை
உன் அடிவயிற்றில் படர்கிறது

உடல்களின் ரகசியங்களை திறந்து
நாம் பயணிக்கையில்
மரணத்தின் வாசம் முகர்ந்து
நடுங்குகின்றன
இரவின் தாழ்கள்
O
இருட்டிற்குள் தொலைந்து
வெகுதூரம் சென்று
மீண்டும் பேய்க்கூச்சல் ஒலிக்கும்
இருளையே கண்டடைகிறோம்

புணர்ச்சிக்கு பின் முத்தம் கொடுக்க
நீ நெருங்குகையில்
என் பலம் மட்டும் கொண்டு
உன் கண்ணத்தில் ஓங்கி அறைகிறேன்
வெறிகொண்டெழும் நீ
என் முகத்தில் எட்டி உதைக்கிறாய்

இரண்டு ராட்சஸ வனவிலங்குகள்
மூர்க்கமாய் மோதிக் கொள்ள
அவற்றிற்கு சாராயத்தை
ஊற்றிக்கொடுத்து
வேட்டையாடி சதையறுக்கிறான் கடவுள்
O
நன்றி: மலைகள்

பிறழ்வு

அருண் மதியம் பார்த்த ரயில் நிலையம் இதுவல்ல.எரிந்துக் கொண்டிருந்த தண்டவாளங்களும் இறுகிப் போய் மூச்சழுத்தி திமிறிய ரயிலும் வண்ணங்களழிந்த முகங்களுமாய் அடிமனதை புரட்டிய ரயில் நிலையம் கூடடையும் பறவைகளின் வானத்தில் கரும்புள்ளியாய் தொலைந்து போய்விட்டிருக்க வேண்டும்.  பகல் பொழுதின் அனல் கோடுகள் உண்டாக்கிய இறுக்கம் முற்றிலுமாக தளர்ந்து போக இதமாக வீசி  வருடியது நள்ளிரவின் மென்காற்று.சப்தங்கள் வடிந்து போன இந்த இடம் அவன் கற்பனையே செய்திராத அளவிற்கு ரம்மியமாக இருந்தது.கழுத்தை திருப்பி கண்களை அங்குமிங்கும் மேயவிட்டவன் தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் மங்கலாய் நீண்ட இருளை ஊடுருவி பார்க்க முயற்சித்தான்.ரயில் நிலையத்தினிலிருந்து இறங்கி சாலைக்கு போகும் வழியில் மின்கம்பம் பக்கமாய் ஒரு  வண்டிக் குதிரை  வெம்மையாய் மூச்சுவிட்டு நின்றுக் கொண்டிருந்தது. வெள்ளை ரோமங்களின் மேல் பூசியது போலிருந்த பழுப்பு கோடுகள் அதன் உடல்வாகிற்கு கொஞ்சமும் பொருந்தமில்லாமல் அந்நியமாய் துருத்திக் கொண்டிருந்தன.குதிரைக்கு பின்னிருந்த பழைய வண்டியில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான் அதன் வண்டிக்காரன். குதிரைக்கருகே சாலை விரிவாக்கத்தில் இடிந்துப்போன ஒரு பழைய கட்டிடம் ஒடிந்து பெயர்ந்த செங்கற்களுக்கும் வளைந்த கம்பிகளுமாய் பார்க்க பரிதாபமாய் காட்சி தந்துகொண்டிருந்தது.சாய்ந்து கிடந்த சுவரில் கை ஊன்றி சமதளத்தில் நீளமாய் படிப்போலிருந்ததின் மேல் அருண் உட்கார்ந்துக்கொண்டான்.

அறைக்கு செல்லக்கூடாது என முடிவெடுத்ததும் அருண் முதலில் கடற்கரைக்குதான் செல்ல நினைத்தான்.அவன் ரயில் நிலையத்திற்கு வந்தபோது மணி மதியம் மூன்று.அப்பொழுது கிளம்பியிருந்தாலும் ஆறு ஆறரைக்கெல்லாம் கடற்கரைக்கு போய் சேர்ந்திருக்கலாம். இன்றைக்கு பௌர்ணமி வேறு.கடல் தேவ உருவாய் அலைகளை எழுப்பிக் கொண்டிருக்கும்.நிலவுக்கு கீழே நீல சமவெளியென நர்த்தனம் புரியும் கடல்தான் எவ்வளவு அழகு.ஆனால் அவனுடைய அனுபவம் வேறு மாதிரியானதாக இருந்தது.முன்னரொரு ஞாயிற்றுக்கிழமை பெசன்ட் நகர் கடற்கரையில் நின்று அவன் முழுநிலவை பார்க்க ஒரு நூற்றாண்டின் துயரம் மொத்தமாய் அவனை சூழ்ந்துக்கொண்டு நெருப்பில் நெளியும் புழுவாய் துடிக்க வைத்தது.ஒரு நூற்றாண்டு துயரத்தை ஒரே தினத்தில் ஒற்றை ஆளாய் சுமக்க நேர்வதன் அவலத்தை அதன் வலியை  அநுபவித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.அந்த கடற்காற்றிலும்கூட அவனுக்கு அப்படி வியர்த்துவிட்டது. தோலில் கைப்பையை  மாட்டிக்கொண்டு கால் அழுத்த நடக்கும் குடும்ப தலைவிகள், செல்போனில் கடற்கரையை படமெடுத்துக் கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள், வேகமாய் ஓடி தடுக்கி விழும் சிறுபிள்ளைகள், அதிர்ந்து சிரிக்கும் யுவன்கள்,பிதுங்கி வழியும் உடல் கொண்ட சுடிதாரில் பாந்தமாய் பொருந்தும் உடல் கொண்ட குச்சி போன்ற ஒல்லியான உடல் கொண்ட உடல் கொண்ட உடல் கொண்ட யுவதிகள் யுவதிகள் என தான் கண்ட அனைவருமே சந்தோஷமாயிருந்தது அவனை இன்னும் அதிகமாய் எரிச்சல் கொள்ள செய்தது. தனக்கு மறுக்கப்பட்ட ஏதோ ஒன்றால் எல்லோரும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தால் மனதளவில் புழுங்கி தவித்தான்.அதிலும் குறிப்பாக இளம்பெண்களின் ஆனந்தம்தான் அவனை தன்னை மிஞ்சிய சித்திரவதைக்கு ஆளாக்கியது.அந்த சிவப்பு நிற சல்வாருக்கு என்ன அப்படியொரு இளிப்பு?இங்கிருக்கும் அத்தனை பெண்களையும் கடற்கரையிலேயே வைத்து வன்புணர்ச்சி செய்ய வேண்டும்  என்று நினைக்கிற அளவிற்கு அவனது மனம் சடுதியில் வன்மம் கொண்டது. இந்த பெண்கள் எல்லோரும் வலியில் அலற அதன் எதிரொலி கடலிலிருந்து வெளிப்பட்டால் எப்படியிருக்குமென யோசித்து பார்த்தான்.சட்டென்று தான் ஏன் இப்படி வக்கிரம் பிடித்தவனாக மாறினோம் என்ற கேள்வி மனதுள் எழுந்து அவனை கழிவிரக்கம் கொள்ளச் செய்தது. எல்லாவற்றிற்கும் காரணம் இந்த கடல் தான்.கடலும் அதன் ஈரநிலமும் அவனது மனதை சாக்கடையாக்கி நாற்றமெடுக்கச் செய்தன. நடுக்கடலில் நின்று மூத்திரம் பெய்தாலொழிய இப்பொழுதிற்கு தன் ஆத்திரம் தீராது என்று தோன்றியது அவனுக்கு.

மதியம் தொடங்கி இரவின் இந்த கணம் வரை அங்கேயும் இங்கேயுமென வெறுமனே அலைந்து கொண்டிருந்ததிலேயே நேரம் தீர்ந்துவிட்டது. காலையில் கல்லூரிக்கு சென்றபோது சாதாரணமாக என்றைக்கும் செல்வதைப் போல்தான் கிளம்பினான்.கொஞ்சம் நஞ்சமென்றில்லாமல் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது உச்சிவெயில்.மதியம் சாப்பாட்டு இடைவெளியின் போது எல்லோரும் கேன்டீனுக்கு போய்விட இவன் மட்டும் தனியாய் வகுப்பிலேயே உட்கார்ந்து கொண்டான். என்னென்னவோ சிந்தனைகளில் உழன்று மனம் பித்து பிடித்தது மாதிரி அரற்றிக் கொண்டிருந்தது. கரும்பலகையில் சுருக்கங்களை உடைய அப்பாவின்  முகமும் எப்பொழுதும் கோபித்துக் கொண்டேயிருக்கும் அம்மாவின் முகமும் பூதாகரமாய் விரிந்து பயமுறுத்தின.கால்களை எழுத்து மேஜையின் இரும்பு கம்பியில் பிணைத்துக் கொண்டு இரு கைகளாலும் இருக்கையை மூர்க்கமாய் குத்தத் தொடங்கியவனின் வலது காது மடல் சிவந்துப் போய் நடுங்கி கொண்டிருந்தது. அப்பொழுதுதான் கிரி வகுப்பிற்குள் நுழைந்தான். தனக்கு அருகில் வந்து தனது தோல்களை அதிர்ச்சியோடு பற்றிய கிரியை தள்ளிவிட்டு அவன் சுதாரிப்பதற்குள் முகத்தில் ஒரு அறை விட்டான் அருண். இப்பொழுதுவரை கிரியை ஏன் அடித்தோம் என்பது அருணுக்கு தெரியாது.இன்னமும் கூட அந்த நிகழ்வு யாரோ மூன்றாவது மனிதருக்கு நடந்தது மாதிரியும் அதை எவனோ தன்னிடம் சொல்ல கேட்டது மாதியும்தான் இருக்கிறது.

குதிரை லேசாய் கனைத்தது.யாரோ நகரும் ஓசை கேட்டது.குதிரை வண்டிக்காரன் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். கசங்கிய லுங்கியும் அதற்கு சம்பந்தமேயில்லாத அடர் நீல சட்டையுமாய் காண்பதற்கே விசித்திரமாக இருந்தவன் நிச்சயமாக இந்நேரத்தில் அருணை இந்த இடத்தில் எதிர்பார்த்திருக்க மாட்டான். சொல்லபோனால்,அவன் எந்த வகையிலுமே இன்னொரு மனிதனின் இருப்பை அங்கே எதிர்பார்த்திருக்க மாட்டான்.அது சரி,அருண் மட்டும் இங்கொரு குதிரையையும் பைத்தியக்காரத்தனமாய் ஆடை உடுத்தியிருக்கும் அதன் வண்டிக்காரனையும் எதிர்பார்த்தானா என்ன?எல்லாம் விதி.வண்டிக்காரன் அருண் அருகே வந்தமர்ந்தான்.

- இந்நேரத்துல இங்க என்ன நைனா பண்ணுற?

- …..

-பதில் சொல்லாக்காட்டி எப்புடி? வூட்ல எதுனா ப்ராப்ளமா?ஓடியாந்துட்டியா?

சாராய வீச்சம் அருணை வெறுப்புற செய்தது.எதையும் கண்டுகொள்ளாத மாதிரி அமைதியாய் தன் பாட்டிற்கு கண்களை மூடிக்கொண்டான்.

சட்டென்று ராஜலட்சுமியின் ஞாபகம் வந்தது அவனுக்கு. அவன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தபோது உடன் பயின்றவள் ராஜலட்சுமி.அவள் மீது அவனுக்கு பிரத்யேக கவனம் என்று எதுவும் கிடையாது. சிறுநகரத்தின் வழமையான முகமும் வாளிப்பற்ற உடலும் கொண்டவளின் கண்கள் சின்னதாய் இருக்கும்.அந்த வருடம்தான் அவன் படித்துக்கொண்டிருந்த பள்ளியில் வந்து புதிதாய் சேர்ந்திருந்தாள் .எப்பொழுதும் சாதாரணமாய் இருப்பவள் திடீரென ஒரு நாள் காலை இடைவெளியின் போது ரிக்கியைப் போட்டு செமத்தியாக அடிக்க துவங்கிவிட்டாள்.சைக்கிள் கேரியரில் புத்தக பையை இறுக்கிக்கட்ட பயன்படும் எலாஸ்டிக் கயிறால் ரிக்கியின் கழுத்தை சுற்றிவிட்டு ரௌத்திரம் தெறிக்க தனது கையிலிருந்த இயற்பியல் புத்தகத்தினாலேயே அவனை அவள் சாத்தி எடுத்ததை பார்த்த சக மாணவர்கள் எல்லோரும் அரண்டே போனார்கள். யாருக்குமே எதுவுமே புரியவில்லை.சர்க்கஸில் பழக்கப்பட்ட யானை எதிர்பாராவிதமாக மதம் கொண்டு பார்வையாளர்களை தாக்க முற்பட்டால் எப்படியிருக்கும்? சில நொடிகளில் சாமியாடி ஓய்ந்த பெண்ணைப்போல் சரிந்து விழுந்தவள் கண்களில் நீர்த்துளிகள் மின்ன புத்தகத்தை வாசற்பக்கம் வீசியெறிந்தாள்.

கிரி கன்னத்தை தடவியபடியே எழுந்திருத்தபோது பாலாஜியும் இன்னும் மூன்று பேரும் வகுப்பிற்குள் வந்துவிட்டிருந்தார்கள்.அருணுக்குள் கோபம் சிகரெட்டில் எரியும் புகைப்போல் கசப்பாய் தகித்துக்கொண்டிருந்தது. நிலைமையை ஊகித்துக்கொண்ட  பாலாஜி உடனடியாக அருணை வயிற்றோடு சேர்த்து பிடித்துக்கொண்டான்.அவன் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்குள் அருண் அவனை எக்கித்தள்ளி வாசற்பக்கத்தில் இருந்த நீளமான கட்டையை கைகளில் பற்றிக்கொண்டு விலங்கிடப்பட்ட மிருகம்போல் உறுமினான்.முகமெங்கும் கருப்பாய் சிரிப்பு படர கட்டையை அவர்கள் பக்கம் வெறித்தனமாக அவன் வீசத் தொடங்கியதில்,நரேனுக்கு தாடையில் விழுந்தது அடி.பொறுத்து பொறுத்து பார்த்தவர்கள் இனியும் மாளாதென்பதை கிரகித்துக்கொண்டதும் காட்டுத்தனமாய் நடந்துக் கொண்டிருந்த அருணை சேர்ந்தாற்போல் ஒன்றாய்  அழுத்தி கட்டையை பலவந்தமாய் பிடுங்கி தூர அடித்தார்கள். திமிறிக்கொண்டிருந்த அருணின் முகத்தில் பளீரென அறைந்தான் முகுந்த். சாம் நெற்றியில் அடித்ததில் மோதிரம் கீறி ரத்தம் சொட்டியது.சூடுபட்ட பூனைப் போல் மெல்ல பதுங்கி ஒடுங்கலானான் அருண்.வெறியெல்லாம் வடிந்து போய் அப்போதைக்கு பயம் மட்டும் மீதமிருக்க அவனது உடல் சுருங்கி குறுகியது.

கொஞ்ச நேரம் சம்பந்தமேயில்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்த வண்டிக்காரன் சட்டென்று வானத்தை வெறித்துப் பார்த்து மௌனமானான். முழுநிலவைச் சுற்றி மேகங்கள் சதுர துளைகளாய் பரவிக்கிடந்தன. சற்றைக்குள் விருட்டென்று எழுந்தவன் வண்டிக்குள் விரிக்கப்பட்டிருந்த போர்வைக்கடியே கையை விட்டு எதையோ எடுத்து அதை தனது சட்டைக்குள்ளாக மறைத்து வைத்துக்கொண்டான்.அவன் முகத்தில் பரவசமோ பயமோவென கண்டறிய முடியாதபடிக்கு சமனற்ற கலவையாக உணர்ச்சியலைகள் எழுந்தோடிக் கொண்டிருந்தன.போன வேகத்திலேயே திரும்பி வந்தவன் மறுபடியும் அருணுக்கருகிலேயே அமர்ந்து கொண்டான்.மிதமிஞ்சிய ஜாக்கிரையுணர்வோடு கயிறு மேல் நடப்பவனினுடையதைப் போலிருந்தது அவனுடைய இயக்கம்.சட்டைக்குள் பத்திரமாய் ஒளித்து வைத்திருந்த ‘அதை’ மிகவும் லகுவாய் வெளியே எடுத்தான்.

இதையெல்லாம் கண் கொட்டாமல் கவனித்துக்கொண்டிருந்த அருணுக்கு ஆர்வம் தாங்கவில்லை.மெல்ல எழும்பி அவன் கைகளில் என்ன வைத்திருக்கிறான் என எட்டிப் பார்த்தான்.கண நேரத்தில் அவனுடைய எதிர்பார்ப்பு சப்பென்று ஆகிப்போனது. குறி சொல்பவர்கள் கையில் பிடித்திருப்பார்களே அந்த மாதிரியானதொரு சின்ன கருப்புத் தடி அது.இந்த குறி சொல்பவர்கள்,கிளி ஜோசியம் பார்ப்பவர்கள்,ரேகை கணிப்பவர்கள் மற்றும் இதுபோல் நிறைய இத்யாதி செய்வர்களின் மேல் அருணுக்கு எக்கச்சக்கமான அவநம்பிக்கை உண்டு.ஒரு கட்டத்திற்கு மேல் அளவற்ற நம்பிக்கையின்மையே வெறுப்பாக பரிமணித்துவிட்டது.ஆங்காரமான அசட்டைப் பார்வையில் வண்டிக்காரனை ஒரு முறை முறைத்துவிட்டு வேறுபக்கமாய் திரும்பிக்கொண்டான் அருண்.இருந்தும் அவனுக்குள்ளிருந்த குரங்கு மனம் அவனை சும்மாயிருக்கவிடவில்லை.கண்கள் நிலைக் கொள்ளாது வண்டிக்காரன் பக்கமாய் அடிக்கடி போய் வந்துக் கொண்டிருந்தன.கொஞ்ச நேரத்திற்கு பிறகு அநிச்சையாய் அவன் மேலேயே பதிந்துவிட்ட கண்களை அருணால் விலக்க முடியவில்லை.

அக்கரிய உருளைத்தடியை மெல்ல நீவிக்கொடுத்தபடியே மந்திரம் போல் எதையோ உதட்டிற்குள்ளாக வண்டிக்காரன் முனகிக்கொண்டிருந்தான். அவனது மொத்த உடலும் விறைத்து போயிருந்தது.இறுக்கமாய் மூடியிருந்த மணிக்கட்டில் பச்சை நரம்புகள் பாம்பு போல் வளைந்து புரண்டன.அருணுக்கு ஒரு பக்கம் இவனை நினைக்க லேசாக பயமாகவும் மறுபக்கம் பயங்கர வேடிக்கையாகவும் இருந்தது.சரியான கிறுக்கிடம் வந்து மாட்டிக் கொண்டோம் என்று தனக்குள்ளாக சொல்லிக்கொண்டான்.

ரயில் நிலையத்தை கடந்த ரயில் தண்டவாள சரளைக்கற்களுக்கு மேலிருந்த பாலீதின் கவர்களையும் நடிகைகளின் உடல்களை தாங்கிய செய்தித் தாள்களையும் கிழித்தெறிந்துவிட்டு தணலாய் தகித்து மறைந்தது.வெயிலை நினைத்தாலே அருணுக்கு அடிவயிற்றில் மண்வெட்டியால் கொத்தியது போலிருக்கிறது.மொத்த நகரத்தையும் வெயில் தன் பாலைக் கரங்களால் வதைக்க நிலத்தடியிலிருந்து அனல் கக்கும் தீ நாக்குகள் மேலெழும்பி காற்று மரம் வெளியென புலனில் தட்டுப்படும் யாவற்றையும் பொசுக்கி கருக்கி விட்டன.எங்கும் எதிலும் வியாபித்து வெயில் இப்பெரு நகரத்தை தனது வெப்ப மதில்ளின் ஆக்கிரமிப்பிற்கு கொண்டு வந்துவிட்டது.மனிதர்கள் எல்லோரும் புழுங்கி தீய்கிறார்கள்.நிழலையையும் நீர்மையையும் தேடியலைந்தவர்களுக்கு  கிடைப்பதெல்லாம் கெட்ட வாடையடிக்கும் பிசுபிசுப்பும் கசந்து வடியும் விஷமும் மட்டுமே.

அருகிலா தொலைவிலா என்று கணிக்க இயலாத ஒரு அலைவரிசையில் ரோந்து போகும் போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் அருணின் காதுகளை வந்தெட்டியது. சட்டென்று உடலெங்கும் பீதி பரவ ஒரு கணம் பயத்தில் அவன் உறைந்தே போய்விட்டான்.இவ்வளவு நேரம் எப்படி போலிஸ் பற்றிய நினைப்பே இல்லாமல் இங்கே உட்கார்ந்திருந்தோம் என்பதை யோசித்து பார்த்ததில் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி மட்டுமே இறுதியில் மிஞ்சியது. பக்கத்தில் வண்டிக்காரன் இன்னமும் மூடிய கண்கள் மூடியபடியேதான் கிடந்தான்.இவனுக்கோ உள்ளே அல்லில்லை.போலீஸ் சும்மா சந்தேகத்தின் பெயரில் பிடித்து போனால்கூட அவ்வளவுதான் கதை முடிந்தது. உடனிருப்பவன் வேறு பார்ப்பதற்கு கஞ்சா விற்கும் பேர்வழி மாதிரி இருக்கிறான். போலீஸ் முடிவே கட்டிவிடும் இவன் நிச்சயமாக பச்சை பொறுக்கிதான் என்று. அப்புறம் இரவெல்லாம் அடித்து துவைத்து விடுவார்கள்.சமயங்களில் காவல் நிலையங்களில் ஒரு பால் வன்கலவியெல்லாம்கூட நடக்குமென அவன் கேள்வி பட்டிருக்கிறான். அடங்கவே அடங்காத வெறி கொண்டவர்கள் போலீஸ்காரர்கள். அவர்கள் எப்படி ஒருவனை வதைப்பார்களென நாம் யோசிக்கவே முடியாது.இப்படியாக அவனது மனம் என்னவென்னவோ அபத்தங்களை பற்றியெல்லாம் சிந்தித்து கவலையில் பதறியது. நடுங்கும் கை விரல்களின் நகத்தை கொஞ்சம் தோலோடு சேர்த்தே கடித்து துப்பினான்.

காலங்களிலேயே படுமோசமானது வெயிற்காலம் என்பதில் அவனுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது.வெண்பனி உலர் நினைவுகளையும் பெருமழை ததும்பும் காதலையும் கொண்டு வருகிறதெனில் வெயிலோ வாதைகளையும் ரணங்களையும் கொண்டுவருகிறது.தாரொழுகும் தீப்பிழம்பாய் சாலையில் ஊரும் வெயிலில் வயோதிகர்கள் மரணத்தை அதன் வலி மிகுந்த நிர்வாணத்தோடு அவ்வளவு பக்கத்தில் பார்த்தார்கள்.அவனிருந்த லட்சுமிபுரத்து தெருக்களில் தொடர்ந்து சங்கொலிகளும் தப்பட்டை சத்தங்களும் கேட்ட வண்ணமிருந்தன. போன வாரம் பண்டரிநாதன்.அதற்கு முந்தைய வாரம் ரமேஷண்ணின் பாட்டி. நேற்று செல்வியக்காவின் சின்ன தாத்தாவென ஊரே சவப்பெட்டிகளை சுமந்துச் சென்று புதைத்துக் கொண்டிருக்கிறது. சுடுகாட்டைவிடவும் சூன்யம் பிடித்தவை எழவு வீடுகள். வயசாளிகள் செத்த வீடுகளில் ஓலமுமில்லை கண்ணீருமில்லை. விழிகளும் தொண்டையும் இறுகி நீர்க்கட்டிப்போல் ஆகிவிட எல்லோரும் வெற்று சுவரையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மரணத்தின் ரகசிய குறியீடுகளை சாத்தான் அச்சுவரில் வரைந்து வைத்திருக்கிறான். எல்லோருக்குள்ளும் பயம் காட்டு முள் செடியைப் போல் வேரிட்டுப் படர்கிறது.

வெயிலை அவன் எவ்வளவு வெறுத்தான் என்பதை வார்த்தைகளில் சொல்லவே முடியாது.செத்துப் போன கிழவன் கிழவிகளை வெயிலே குருதி சொட்ட கொலை செய்தது என அவன் நம்பினான்.மரணத்திற்கும் பிறழ்வுக்குமிடையே பெரிய தூரமெல்லாம் கிடையாது.இரண்டிற்கும் நடுவே இருப்பது ஒரு மெல்லிய ஜிகினாத் தாள்தான்.கிரியை அருன் அறைய வெயிலும்கூட ஒரு காரணமாக இருக்கலாம். ராஜலட்சுமி ரிக்கியை அடித்ததும் ஒரு நெடுங்கோடையில் தான்.அப்படியென்றால் அனைத்து பிறழ்வுகளையும் வெயிலே உற்பத்தி செய்கிறது. கருனையை அதன் கடைசி துளிவரை உறிஞ்சி குடித்துவிட்டு எவ்வளவு இரக்கமற்றதாக உலவிக்கொண்டிருக்கிறது வெயில்?

திடீரென்று பக்கத்து சந்திலிருந்து வொள்ளென்று குரைத்தபடியே ஒரு வெள்ளை நாய் ஓடி வந்து இவர்களுக்கு முன்நின்றது.ஒலியற்று கிடந்த இருளின் திரையை கிழித்துக்கொண்டு அது தாவி வரவும் இவனுக்கு போலீசார் கழுத்தை திருப்பி முதுகில் மிதித்தது மாதிரியாகிவிட்டது.சைரன் சத்தத்திற்கு பயந்துதான் நாயும் ஓடி வந்திருக்க வேண்டும் என்று புரிந்துக்கொண்டு ஆசுவாசமடைந்தான்.அதுவரை சலனமே காட்டாமல் எவன் விட்ட வழியோ என்று மௌனச் சாமியார்போல் அமர்ந்திருந்த வண்டிக்காரன் நாய் வந்து குரைக்கவும் கிழே இருந்த கற்களில் பெரிதாய் ஒன்றை பொறுக்கி அதன் தலையை குறிவைத்து ஓங்கி எறிந்தான். குறி சிறிதும் பிசகவில்லை. நாயின் மண்டையை பதம் பார்த்துவிட்டது அந்த கல்.வீறலிட்டலறியபடி ஓடி மறைந்த நாய் அதற்கு பிறகு சத்தமே கொடுக்கவில்லை.

எல்லோரையும் போல் மிகவும் இயல்பாகத்தான் இருக்கிறோமென்றாலும் அடிக்கடி ஏன் இப்படி கட்டிலடங்காத ஆத்திரத்திற்குள்ளாக அமிழ்ந்துப்போய் பழி தீர்க்கும் சர்ப்பம் போல் ஆகிவிடுகிறோம் என்று யோசித்தாள் ராஜலட்சுமி.ரிக்கி எப்பொழுதுமே அமைதியாக இருக்கக்கூடியவன்.யாரைக் கேட்டாலும் வகுப்பிலேயே அவன்தான் நல்ல பையன் என்று சொல்வார்கள். ஒருவேளை அவன் அவ்வளவு நல்லவனாக இருந்ததுதான் தன் கோபத்திற்கு காரணமோ? தெரியவில்லை.

அன்றைக்கு சாயுங்காலம் தனக்கு விருப்பமான இரண்டு தோழிளோடு குறுஞ்செய்திகளின் வழியே அவள் உரையாடிக்கொண்டிருந்தாள்.ஒருத்தி ஹேமா மற்றொருத்தி ருக்கு.ஹேமாவிடம் தன் துயரங்களை அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிட்டால் கொஞ்சம் ஆறுதலாயிருக்கும் என்று அவளுக்கு தோன்றியது. ஹேமாவால்தான் தன் கண்ணீரை புரிந்துகொள்ள முடியும் என்பதில் அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.அதே நேரம் ருக்குவிடம் தான் இயல்பாகவே இருக்கிறோம் என்பதை ஆழமாக நிறுவ வேன்டும்.எனவே அதிக பிரய்த்தனம் எடுத்து அவளிடம் ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருப்பது மாதிரி காட்டிக்கொண்டாள். இயல்பிற்கும் முகச்சாயத்திற்குமிடையே சிக்கிக்கொண்டு தத்தளிக்கும் கோமாளியினுடையதைப் போலிருந்தது அவளது செயல்பாடு.

ஒரு குறுஞ்செய்தியில் தனது வலிமிகு துயரக்கதையை அழுகை பொங்க ஹேமாவிற்கு தட்டச்சு செய்து விட்டு நிமிர்ந்தால் அதற்குள்ளாக ருக்குவின் காதல் சாகசத்தை ஏந்திய குறுஞ்செய்தி இவள் படிப்பதற்காய் சத்தமெழுப்பி அலைபேசியில் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.கன்னத்தை துடைத்துவிட்டு அவளுக்கு வாழ்த்துக்கள் எழுத ஆரம்பிப்பாள். துக்கத்திற்கும் சந்தோஷத்திற்கும் நடுவே ஊடாடும்போது தனது முகம் எப்படியிருக்கும்? நிலைக் கண்ணாடியில் கொடுவிஷம் பாரித்த நீலநிற நாகக்கன்னியை பார்த்தவள் சத்தம்போட்டு சிரித்தாள்.

-என்ன கண்ணு…இன்னமும் இங்கதான் இருக்கியா..?

இந்தமுறை அவனது குரலில் முன்பில்லாத தெளிவும் தீவிரமும் சேர்ந்து ஒலிப்பதாக தோன்றியது அருணுக்கு.

-இல்லங்க….ரூமுக்கு போகனும். கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன்.

-யப்பா பாருய்யா…அப்போ பேசாம கம்முனு இருந்த..இப்போ என்னடான்னா பேசுற. சரி முகமெல்லாந் வாடிபோய் கெடக்குதே எதுனா ப்ராப்ளமான்னு கேட்டா ஒன்னியும் சொல்ல மாட்டேங்குற…

-அதெல்லாம் ஒன்னுமில்லங்க.சும்மாதான் இங்க வந்தேன்.

-தோடா…அர்த்த ராத்திரில ரயில்வே டேஷனாண்ட வந்து உட்காந்துக்கினு சும்மா வந்தேன்னு கதை சொல்றியே செல்லம்.

லுங்கி மடிப்பிற்குள்ளிருந்து பாதி பிரிந்த நிலையிலிருந்த மாணிக்சந்தை எடுத்து வாயில் கொட்டிக்கொண்டு தொடர்ந்தான்.

-நீ என்னமோ கன்பீஸன்ல இருக்கேன்னு மட்டும் புரியுது. ங்கொம்மா….சும்மா நடந்துக்கினும் ஓடிக்கினும் இருந்தாலே இப்படிதான்…ஜனங்களோடு
சேர்ந்து கயிதையாய் ஆயிடுவோம்.அப்படியே வானத்துல பறந்தோம்னு வச்சிக்கியேன்..ஒரு தொல்லையும் கிடையாது…நம்ம குமாரை(குதிரையை தட்டிக்கொடுத்து) தரேன். ஒரு ரௌண்டு பறக்கிறியா?

பாவமாய் நின்ற குதிரையை ஓரக் கண்ணில் பார்த்து தனக்குள் தானே நொந்துகொண்டான் அருண். ஒரு பஞ்சு மூட்டையை தூக்கிக்கொண்டு இரண்டடி எடுத்து வைத்தால்கூட சொத்தென்று விழுந்து தெத்துவிடும்போல் இருந்தது அந்த குதிரை.இந்த லட்சணத்தில் அது வானத்தில் பறக்குமாம்.போதையில் மூளையேயில்லாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொண்டிருக்கிறான் லூசுக்கூ…

-என்னப்பா லூசுக்கூதியாட்டம் உளறான்னு நெனைக்கிறியா…சத்தியமா சொல்றேன்.. இந்த குதிரை சும்மா ஏராப்ளேனாட்டம் பறக்கும்.அதோ அந்த முக்குல ஒரு பயுப்பு இருக்குல்ல அதுக்கு பின்னாடி இருக்க வூட்ல ஒரு தெவடியா முண்டை இருக்கா.அவளை பின்னக்க வச்சிக்கினு குமார் மேல ஏறி ராட்டின சுத்தறாப்புல ஒலகத்தையே ரவுண்டடிச்சிருக்கேன்.

இதை சொல்லும்போது தீவீரம் மிகுந்த ஒரு மத நம்பிக்கையாளனின் குரலை ஒத்திருந்தது அவனது குரல்.உடன் பரவசத்தின் உச்சியில் மனம் உடைந்தழ காத்திருப்பவனை போல் இரத்த சிவப்பேறிய கண்களுடனிருந்தான். அருணுக்குள் சின்னதாயொரு சந்தேகம் தோன்றியது.ஒரு வேளை இந்த குதிரை உண்மையிலேயே பறக்குமா? அப்படி பறக்குமென்றால் நமக்கே சிறகு கிடைத்த மாதிரிதானே. சனியன் போல் பிடித்துக்கொண்டு உயிரை எடுக்கும் பயங்கள் யாவற்றிலிருந்தும் விடுதலை பெற்று எங்கேயாவது மனிதர்களே இல்லாத இடத்திற்கு பறந்துபோய் விடலாம்.அதற்கு பிறகு நமக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.உயர உயர பறந்து நட்சத்திரக் கூட்டங்களுக் கிடையே ஒரு துகள் மண்ணாய் உறைந்துவிட்டால்கூட நன்றாகத்தான் இருக்கும்.

அருண் வண்டிக்காரனை ஒருமுறை கரிசனத்தோடு திரும்பி பார்த்தான்.அவனுக்கு சட்டென்று நிதர்சனம் பொளீரென்று உரைத்தது.இவன் ஒரு குடிகாரன்.அதுவும் குடித்துவிட்டு நாதியில்லாமல் நடுத்தெருவில் கிடக்கிறான். முழுசாய் மப்பேறிப் போய் எதையாவது இவன் உளறி கொட்டினால் அதை அப்படியே நம்பிவிடுவதா?குதிரை பறக்கும் என்று வேறு யாரிடமாவது இவன் சொல்லியிருந்தால் கதையே வேறுமாதிரி இருந்திருக்கும்.ஒன்று இவன் முகத்திற்கு நேராகவே காறித் துப்பியிருப்பார்கள். இல்லையென்றால் வயிறு வலிக்கும்வரை சிரித்துவிட்டு பிறகு தங்கள் வேலையை பார்க்க கிளம்பியிருப்பார்கள்.ஆனால் நாமோ  இவ்வளவுதூரம் முட்டாள்தனமாய் சிந்தித்து வேண்டாத கனவுகளை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்து அருண் வருத்தம் கொண்டான்.

இப்பொழுது மிகவும் தெளிவாக பக்கத்திலேயே கேட்டது சைரன் சத்தம். தலையை திருப்பி பார்த்தால் தெருமுனையில் சிவப்பாய் ஒளிக்கீற்றுகள் படர அவனிருந்த திசை நோக்கி மெதுவாய் நகர்ந்து வந்துக் கொண்டிருது போலீஸ் ரோந்து வண்டி. ஒரு கணத்திற்கும் குறைவான நேரத்தில் மனம் இதுவரை சுழன்று கொண்டிருந்த எண்ணங்களிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டு நிகழ்காலத்திற்கு திரும்பியது. வண்டிக்காரனுக்கு அண்டையாய் பார்வையை உருட்டினான்.அவனோ கால்களுக்கடியே முகத்தை பொருத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தான்.இவனுக்கு சட்டென்று ஒன்றுமே புரியவில்லை. காரணமேயில்லாமல் மனதில் இரக்கம் சுரந்து அவனது உடலை எடையிழக்க வைத்தது. சைரனின் அலறல் நெருங்கி வருவதை உணந்துக்கொண்ட மறுநொடியிலிருந்து அதிவேகமாய் செயல்பட துவங்கினான் அருண். வண்டிக்காரனுக்கருகே கீழே கிடந்த அந்த கருப்பு தடியை இடக்கையிலெடுத்து கால்சராயின் பைக்குள் சொருகிக் கொண்டான்.எந்த நினைப்புமில்லாது வெறுமையாயிருந்த அவன் உள்மன அடுக்குகளில் ராஜலட்சுமியின் பிம்பம் பெருகி நிரம்பியது.எந்த நம்பிக்கையால் உந்தப்பட்டு இயங்குகிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் சேணத்தில் கால் வைத்து குதிரையின் மேல் தாவியேறி அமர்ந்துக் கொண்டான்.எப்பொழுது அதன் மேல் ஏறினோம்?எப்படி ஏறினோம் என்பதெல்லாம் அவனுக்கு சுத்தமாய் கவனத்திலில்லை.கண்களை இறுக மூடிக்கொண்டு கடிவாளத்தை முடுக்கி விட்டான்.வியர்வை நீரில் தளும்பியது அவனது முகம்.குதிரை ஒரு கணம் நகர்வது போலவும் மறுகணம் நகராதது போலவும் பிரம்மை தட்டியதில் சுத்தமாய் குழம்பிப் போனான். போலீஸ் வண்டியின் டையர் தரையில் தேய்ந்து கிறீச்சிட சைரன் சத்தம் அதிர்ந்தடங்கியது.

நன்றி : மலைகள்

Saturday, October 6, 2012

அன்பின் மலர்கள்


 
 
யாரோ ஒருவரது கதையின்

 
எழுதப்படாத பக்கங்களிலிருந்து

 
தவறிவிழுந்த வயதான மனிதர் அவர்

 
எந்த புனைவிலும் 

 
முழுமையாய் சொல்லப்படாத 

 
ஒரு வாழ்க்கையோடு 

 
நம் நகரத்தின் தெருக்களில்

 
மெலிந்த நிழல்களின் ஊடே அவர்

 
அலைந்து கொண்டிருக்கிறார்

 
அவரது உடலில் அரிசி மண்டி வாடையடிக்கிறது

 
யாரிடம் கொடுப்பதென்று தெரியாமல்

 
பழைய செய்திதாளில் பொட்டலம் கட்டிய

 
தன் வாழ்க்கையை அழுத்தி பிடித்தபடி

 
ஜன்னலோர ரயில் 

 
இருக்கையில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்

 
கிட்னியில் கல் வளர்ந்திருக்கிறது

 
சர்க்கைரை நோயுடன் சேர்த்து

 
நேரத்திற்கு சாப்பிடாததால்

 
வயிறு வேறு புண்ணாகி போயிருக்கிறது

 
ரொம்ப நாட்களுக்கு முன்னர்

 
தன் வீட்டு மொட்டை மாடியில்

 
செங்கற்களினாலான பெரிய தொட்டியில்

 
அம்பாரமாய் மணல் கொட்டி

 
நிறைய ரோஜாப் பூக்கள் நட்டு வைத்திருந்தார்

 
எப்பொழுது பார்த்தாலும் 

 
மனைவியோடு சண்டைதான்

 
அவளுக்கு சமைக்க தெரியாது 

 
அவளுக்கு அறிவு கிடையாது 

 
ஒரு பெரிய சரிவின்முடிவில்

 
நடுத்தெருவில் நிற்க நேர்ந்தபோது

 
மனைவி மட்டும் உடனில்லையென்றால் 

 
என்னவாகியிருப்போம் 

 
சமைக்க தெரியாத அறிவே இல்லாத

 
மனைவியின் கருத்த கைகள்

 
தோளை பற்றுவதாக உணர்ந்தவர் 

 
அதிர்ந்து கண் விழித்தார்

 
ஆளற்ற ரயிலில் 

 
ப்ளாஸ்டிக் கவர்களும் 

 
காய்ந்த பழத் தோல்களும் அசைவற்றிருந்தன

 
எவ்வளவு காலங்கள் காத்திருந்தும்

 
தொட்டியில் 

 
ஒரு ரோஜாப்பூக்கூட மலரவேயில்லை

 
மகனை படிக்க வைத்தார்

 
மகனின் நண்பர்கள் 

 
அவரை அவனது தாத்தா என்று நினைத்தனர்

 
இருந்தும் மகனுக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும்

 
அது கடைசிவரையிலும் அவருக்கு தெரியவேயில்லை

 
அவர் நினைத்தார்

 
அவர் ஆசைப்பட்டார்

 
அவர் கனவுகண்டார்

 
எப்பொழுதேனும் நம் வாழ்க்கைக்குள்

 
நாம் நுழைந்துவிடுவோமென

 
ஆஸ்பத்திரி வீச்சம் மூச்சுமுட்ட

 
எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல்

 
அவர் கிளம்பி வந்துவிட்டார்

 
போன வாரத்தில் ஒருநாள் 

 
அவரது 72 வயது சின்னமாமா 

 
புற்றுநோயில் தொடையிடுக்கு சதையழுகிப்போக

 
ரணமும் வலியும் தாளாது

 
ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்

 
சுருங்கிய தசையின் மீதேறி 

 
ரத்தமாய் பாய்ந்து மறைந்தது ரயில்

 
தனக்கேன் புற்றுநோய் வராமல் போனது

 
என யோசித்தபடியே தண்டவாளத்தையொட்டி

 
நடந்துக் கொண்டிருக்கிறார் அவர்

 
இரண்டு பக்கங்களிலும் பெருகும் 

 
கூவம் நதியில் பூத்து குலுங்குகின்றன

 
அன்பின் நீல வண்ன ரோஜா மலர்கள்

 
 
 
நன்றி : http://solvanam.com/?p=21932




Tuesday, October 2, 2012

என் வானம் கடல்


போர்க்களத்தில் பிணங்களுக்கிடையே
தனித்திருந்த என்னை
இராணுவத்தினர் சிறைபிடித்து
கடலுக்குள் இழுத்துச் சென்றனர்
நடுக்கடலில் மிதந்துக்கொண்டிருக்கிறான் அரசன்
இராணுவச் சிப்பாயொருவனின்
பூட்ஸ் கால்களைப் பற்றிக்கொண்டழுத
பூர்வீக கடல் ஞாபகங்கள்
என் பிரக்ஞையை தொட்டு மீள்கின்றன
அரசனுக்கென்று யாருமில்லை
அவனிடம் இப்பொழுது மீதமிருப்பது
ஒருப்பிடி கடற்கரை மணல் மட்டுமே
கொலையுண்டவர்கள் யாவரும்
உயிர்பெற்று எழும்புகிறார்கள்
நிர்வாண பிணங்கள்
துப்பாக்கிகள் ஏந்தியபடியும்
கூர்வாட்கள் ஏந்தியபடியும்
புத்தகங்கள் ஏந்தியபடியும்
மதுகோப்பைகள் ஏந்தியபடியும்
பைத்தியம் போல் பிதற்றிக்கொண்டும்
வெறிபிடித்த மாதிரி சிரித்துக் கொண்டும்
போர்க்களத்தினில் அங்குமிங்கும்
அலைந்து திரிகின்றன
கடல் அரசனை நோக்கி நகர்ந்து வந்தது
நான் கடைசியில் அந்த முடிவையே தேர்ந்தெடுத்தேன்
மதுப்போத்தலில் மீதமிருந்த சாராயத்தை
ஒரே மூச்சில் குடித்து தீர்த்துவிட்டு
காலி போத்தலை கடலை நோக்கி
ஆக்ரோஷமாய் வீசியடிக்கிறான் அரசன்
சின்ன சின்னதாய் மீன்கள்
வானத்திலிருந்து பறந்து வந்து
கடலுக்குள் பாய்ந்து மறைகின்றன
கடல் அரசனை ஏற்றுக்கொண்டது
பேரலைகளால் கரையொதுக்கப்பட்ட
எனது பிணத்தின்மேல் புழுக்கள் நெளிகின்றன
அரசன் பறவையாகி கடலுக்குள் நீந்துகிறான்
என் வானம் கடல்

நன்றி: http://www.vallinam.com.my/issue45/poem1.html

திரும்புதல்-2



எதையோ நினைத்து
நடந்து வந்ததில்
கவனமேயில்லாமல்
இங்கு வந்து சேர்ந்து விட்டேன்
கிழிந்து கிடக்கும் புகைப்படமென
பகுதி பகுதியாய்
பிரிந்து கிடக்கிறது
இம்மணல் வெளி
விரிசல்களுக்கிடையே
சாம்பல் நிற மரங்கள்
கிளையசைத்து
காற்றெழுப்புகின்றன
பெருங்காற்று ஊளையிட
நான் செல்ல விரும்பும்
என் கனவின் நகரம்
கருப்பாய் பூமிக்குள் அமிழ்ந்து தொலைகிறது
எதற்காக
இங்கு வரவே கூடாது
என்று நினைத்தேனோ
இப்பொழுது அதற்காகவே
வந்தது போலாகிவிட்டது
ஒரு குழந்தை பலூன் வெடிப்பதை
முதல்முறையாக பார்ப்பதுபோல்
நான் என் வாழ்க்கை
உடைந்து தொங்குவதை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இனி
வேறுவழியில்லை
வந்த பாதை தெளிவாக ஞாபகமிருக்கிறது
திரும்பி போவதொன்றும்
சிரமமான காரியம் கிடையாது
நன்றி:http://solvanam.com/?p=21583

திரும்புதல்

பறவையின் அந்திகளைப் போன்றவையல்ல
என்னுடைய அந்திகள்
நான் திரும்பும் காலம் என்பது
கூடடைதலின் நினைவுகளற்றது
வந்தடையவேக் கூடாத
தற்கொலை விளிம்பிலிருந்து
கருப்பு சர்ப்பங்கள் பின்தொடர
நான் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்
கழுவியகற்ற முடியாத ரத்தம் போல்
என் நீளப்பாதைகளில்
இருள் மண்டிக் கிடக்கிறது
நன்றி:http://solvanam.com/?p=21583

இந்த வாழ்க்கை



வீட்டிலிருப்பவர்களுக்கு தெரியாமல்
கல்லூரி டி.சியை
பழைய புத்தகங்களுக்கடியே
ஒளித்து வைத்துவிட்டு
மின்விசிறியில் புடவையை சுற்றுகிறான்
அலைபேசி திரையில்
பாதரசமென மிண்ணும்
கண்ணீர்த் துளியை
பொருட்படுத்தாது
குறுஞ்செய்தியை வார்த்தை வார்த்தையாக
வாசித்து கொண்டிருக்கிறாள்
‘உன்னை நம்பித்தானே
எல்லாமே இருக்கு
அப்புறம் அந்த நம்பிக்கையையே
கெடுத்தா எப்படிப்பா?”
மகனின் முகத்தை பார்க்காமல்
ஒட்டடை படிந்த சுவரை
பார்த்து பேசுகிறார்
இன்று என்னக் கிழமையென்று
யோசித்துக்கொண்டிருந்தவள்
அடுக்களைக்குள் புகுந்துவிட்ட
பூனையை பார்த்ததும்
கையிலிருந்து கரண்டியை
வேகமாய் தூக்கியடிக்கிறாள்
தெருவிளக்கை மொய்க்கும்
ஈசல்களை போல்
நூறு நூறாய்
சேர்ந்தும்
பிரிந்தும்
இந்த வாழ்க்கை

நன்றி:http://solvanam.com/?p=21583

Wednesday, April 18, 2012

திரவஒளி தேவதை



அரவிந்த் சுவரில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். ராஜேஷ் தியானம் செய்யும் தோரணையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருப்பது மங்கலாக தெரிந்தது. குரு சந்தோஷோடு சென்றிருக்க வேண்டும். ஊர் முழுக்க சுற்றியலைந்துவிட்டு நேற்றிரவு அறைக்கு வந்து சேர்ந்தபோது மணி பதினொன்றைக் கடந்துவிட்டிருந்தது. அப்பொழுதே யூகித்தேன் இவன்கள் நாளைக்குக் கல்லூரிக்கு மட்டம் போடதான் திட்டமிடுவான்கள் என்று. ஆனால் இவ்வளவு பெரிதாக வேலை செய்வான்களென நினைக்கவில்லை. காலையில் நான் எழுவதற்கு முன்னே கிளம்பிப் போய் குருவும் அரவிந்தும் சரக்கு வாங்கி வந்துவிட்டான்கள். ராஜேஷையும் சந்தோஷையும் என்ன சொல்லி கவிழ்த்தான்களெனத் தெரியவில்லை. சரக்கென்றவுடன் நாக்கைத் தொங்கவிட்டுக் கிளம்பியிருப்பான் ராஜேஷ். ராஜேஷ் சரி என்று சொல்லிவிட்டால் சந்தோஷுக்கு வேறு வழியில்லை. அவனும் தலையாட்டிதான் தொலைக்க வேண்டும். இம்மாதிரியான சமயங்களில் பலத்த எதிர்ப்பு தெரிவிப்பது நான் மட்டும்தான். அதனாலேயே என்னைப் பொதுவாக கூட்டாலோசனைகளில் சேர்த்துக் கொள்வதில்லை. அவன்களாகவே காரியத்தில் இறங்கிவிடுகிறான்கள்.
இந்த மாதத்தில் மட்டும் இதுவரை எட்டு தடவை சரக்கடித்தாயிற்று. ஒரு கணம் உள்ளுக்குள் வீட்டு ஞாபகமெழவும் உடலில் ஒரு மெல்லிய அதிர்ச்சி புழுவைப் போல் ஊர்ந்தது. கல்லூரி விடுதியிலிருந்தபோதாவது விடுதி காப்பாளரது கட்டுபாட்டின் பெயரில் கொஞ்சம் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தோம். தனியாக அறையெடுத்து தங்கிய பிறகு, தட்டிக் கேட்பதற்கு நாதியில்லை. இஷ்டத்திற்குத் திரிந்து கொண்டிருக்கிறோம்.
அரவிந்த் என்னவோ முனங்கினான். தள்ளாட்டமான உச்சரிப்பில் அவன் பிதற்றலாக முனகியது யாரோ முன்பின் தெரியாத ஒருவரின் குரலில் தொலைதூரத்தில் எதிரொலித்தது. ஒன்றும் விளங்கவில்லை. தலை தனியாய் கழன்று விழுவது போன்ற பிரமை மூடிய இமைகளில் நிறக்குமிழ்கள் உடைந்து சிதற, ஏதோவோர் அரூப விசை என்னை இயக்குவதாய்ப் பட்டது. குளியலறைக்குள் சென்று கதவைத் தாழிடாமல் சாத்தினேன். ஷவரைத் திறக்கவும் மெல்லிய இரைச்சலோடு தண்ணீர் கீழே விழத் தொடங்கியது. சட்டை பேண்ட்டைக் கழற்றிவிட்டு வெறும் ஜட்டி பனியனோடு ஷவருக்கடியில் கால்களை நீட்டி உட்கார்ந்துக் கொண்டேன். சில்லிடும் நீர்த்துளிகளின் ஸ்பரிசம் நடுக்கம் கொடுத்தது. சில நிமிடங்களில் உடல் குளிருக்கு பழகிவிட தண்ணீர் என்னை இதமாக வருடியது. என்னுள்ளிருந்த சுயம் சார்ந்த சிறிய கவனமும் பிசகி நழுவுவதாய் உண்ர்ந்தேன். நினைவுகளின் காட்சி பிம்பங்கள் நீர்த்துளிகளிலிருந்து தெறித்து தரையில் விழுந்து அசுர வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருந்தன. என்னால் அவற்றைத் தொடர்ச்சியாக கவனித்து எனது பிரக்ஞையில் சேகரித்து ஞாபகங்களோடு பொருத்திப் பார்க்க முடியவில்லை. மின்னல் வெட்டுகளாய் காட்சிகள் என்னை கடந்து கொண்டே இருந்தன. பெரும்பாலும் யாவுமே நான் கண்ணீர் சிந்தும் காட்சிகள்தான். வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு விதங்களில் நான் அழுவதைப் பார்க்க எனக்கே கிளர்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு முறை அழும்போதும் நான் இதுவரை செய்த அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டவனாக உணர்கிறேன். உடன் இந்த உலகத்தால் கைவிடப்பட்ட ஒரு தூய ஆன்மாவாக என்னைக் கற்பனை செய்துகொண்டு பிறத்தவர்கள் யாவரையும் பெரும்பாவிகள் என உருவகம் பண்ணிக் கொள்கிறேன். திடீரென சரிந்து விழுந்துக் கொண்டிருந்த நிறமற்ற நீர்த்துளிகளில் ஒற்றைத் துளி மட்டும் வித்தியாசமாக சிவப்பு நிறத்தில் மின்னியது. அது இரத்தம் போன்ற ஒன்றாகவோ அல்லது இரத்தமாகவோ இருக்கலாம். வலது கால் பெருவிரல் நகத்தின் மேல் படர்ந்த அச்செந்துளி மெல்ல பெருத்து வீங்கத் தொடங்கியது.
அச்செந்துளியின் உள்ளே திவ்யாவின் பிம்பம் அலைந்தபடி இருப்பதை கொஞ்சம் நேரம் கழித்தே கணித்தேன்.
”லவ் கிவ்வுனு கிளம்புன நமக்குள்ள கான்டேக்டே இருக்காது..சரியா?”
திவ்யாவுடனான எனது பெரும்பாலான உரையாடல்கள் இந்த வாக்கியத்தோடுதான் நிறைவுறும். நானும் பொதுவாக உச்சுக்கொட்டி வைப்பேன். கடைசியாக பேசியபோதுகூட இந்த வாக்கியத்தை அவள் மறக்காமல் சொன்னாள். ஆனால் வழக்கமாக அவள் இதைச் சொல்லும்போது எனக்கு கோபமே வராது. கொஞ்சலான தோரணையில் சிறுபிள்ளை போல் பொய்க் கோபத்தோடு அவள் பேசுவதைக் கேட்கவே ரசமாயிருக்கும். என்ன நடந்ததோ தெரியவில்லை, அன்று அவளுடன் பேசியபோது என் மூளைக்குள் பாயும் நரம்புகள் சிக்கிக் கொண்டு சூடாகி வலியாய் உறுத்தல் உண்டாக்கின. மாலைக் காற்று அனலேற்றியதுபோல் கொதித்தது. தொலைபேசி இணைப்பை ஆத்திரத்தோடு துண்டித்துவிட்டு வீட்டிற்குள் சென்று எதை பற்றியும் யோசிக்காமல் படுத்து கண் அயர்ந்தேன். ஒரு மணி நேரம் கழித்து எழுந்ததும் காலையில் மோசஸ், திவ்யா தனக்கு அனுப்பியதாய் சொல்லி காண்பித்த குறுஞ்செய்தியின் ஒவ்வொரு வார்த்தையும் இராட்சஸ கற்பாறையென ஞாபகத்திற்கு வந்து எரிச்சல் கிளப்பியது. அதற்குப் பிறகு நான் திவ்யாவிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டேன். இது நடந்து இரு வருடங்களிருக்கும்.
இதற்கிடையே நான் பலமுறை சிந்தித்து பார்த்ததுண்டு. எனக்கு ஏன் திவ்யாவின் மேல் கோபம் வர வேண்டும்? அவள் என்னைக் காதலிப்பதாய் சொல்லியதில்லை. நானும் அவளிடம் என்னுடைய காதலைத் தெரிவித்தது கிடையாது. பின்னர் ஏன் அவள் என்னை ஏமாற்றிவிட்டதாய் எனக்குத் தோன்ற வேண்டும். அதற்குக் காரணமில்லாமல் இல்லை. நான் சொல்லாவிட்டாலும் நான் அவளைக் காதலிக்கிறேன் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அவளுடைய ஒவ்வொரு செய்கையிலும் நான் அதைக் கண்டிருக்கிறேன். “நீ என்னைக் காதலிக்கிறாய்தானே.ஆனால் பார் நான் அது தெரியாதது போல் எவ்வளவு இயல்பாய் இருக்கிறேன்” என்ற ஏளனம் அவளது உடல்மொழியில் அப்பட்டமாக வெளிப்படும். இதையொரு புதிராக உருமாற்றி அவள் என்னுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறாள். இலக்கேயில்லாமல் நானும் அந்தப் புதிரில் கலந்துகொண்டு என்னுடையப் பாதையை இன்னும் முடிச்சடர்ந்ததாக வகுத்து கொண்டிருக்கிறேன்.
திவ்யாவின் பிம்பம் சுமந்த செந்துளி நீர் சுழிப்பில் அடித்து செல்லப்பட்டது (அல்லது அப்படியெனக்கு தோன்றியது) வலது கால் பெருவிரலில் உறைந்த இரத்தத்தின் பிசுபிசுப்பை நான் உணர்ந்தேன். ஆழமான வடுவில் தண்ணீர் படவும் காந்தல் எடுத்தது.
ஈரத்தோடே சட்டையையும் பேன்ட்டையும் அணிந்துக் கொண்டு குளியலறையை விட்டு வெளியே வந்தேன். அரவிந்த் இன்னமும் தூங்கிக் கொண்டுதானிருந்தான். அடுக்களையில் ராஜேஷ் குழம்பு சட்டியை உருட்டிக் கொண்டிருக்கும் சத்தம் காதில் விழுந்தது. அடுக்களைக்கு சென்றேன்
“மச்சி என்ன குளிச்சிட்டு வர்றியா? …த்தா..தண்ணி தலையிலிருந்து எப்படி கொட்டுது பாரு..மயிரு தலை துவத்தித் தொலைக்க வேன்டியதுதானடா..?”
ராஜேஷ் சொன்னதையே காதில் வாங்கிக் கொள்ளாமல் நான் பாட்டிற்கு தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு அடுக்களையிலிருந்து கிளம்பினேன். பைக்கை எடுத்துக்கொண்டு வெளியேறியபோது வெயில் உக்கிரமேறி சிவந்திருந்தது. சதைக்குள் ஊடுருவித் தகிக்கும் வெயிலில் தடுமாறியபடியே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சிறிய கருப்பு திட்டு மண்தரையிலிருந்து மேலெழும்பி வெளிச்சத்தினூடே அந்தரத்தில் ஊர்ந்து செல்லத் துவங்கியது. பூச்சியோ என்னவோ என்று முதலில் சந்தேகித்தேன். ஆனால் அது உயிரிலி என்பதை என்னால் சீக்கிரத்தில் கிரகித்துக்கொள்ள முடிந்தது. ஒழுங்கற்ற வடிவில் பிய்த்தகற்றப்பட்ட நிலத்துண்டென உருக்கொண்டிருந்த அந்த இருள்திட்டை ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவனைப் போல் நான் பைக்கில் பின்தொடரலானேன். எந்த இடமென தெரியவில்லை. ஆட்கள் நடமாட்டமேயில்லாத வெறும் கட்டிடங்களும் வெயிலும் நிரம்பிய ஒரு பிரதேசத்திற்குள் நுழைந்துவிட்டது போலிருந்தது. திடீரென அந்த சின்ன கரும்பரப்பு நகர்வதை நிறுத்திக் கொண்டு அந்தரத்தில் மிதக்கலானது. வண்டியை உடனடியாக நிறுத்தும் பொருட்டு சடாரென பிரேக் பிடித்தேன். வேகத்தை மட்டுப்படுத்தாது நான் பிரேக் அடிக்கவும், உராய்வின் கிறீச் ஒலி எழும்ப மண் சாலையில் சின்னதாய் புழுதி படலம் உருவாயிற்று. சடுதியில் சுதாரித்துக் கொண்டு சமநிலையை எட்டினேன். இன்னும் அந்தரத்திலேயே இருந்தது அந்த கரிய இருள்திட்டு. கொஞ்ச நேரத்தில் அந்தரத்திலிருந்தபடியே அது மெல்ல சுழன்று சுற்றியது. நான் கண்ணிமைக்காது அதனையே பார்த்துக் கொண்டிருந்தேன். மெல்ல தொடங்கிய அதன் சுழற்சியில் இப்பொழுது அதிகப்படியான வேகம். இதுவரை என்னை அறுத்து பாய்ந்துக் கொண்டிருந்த வெயிலின் சுடுகதிர்கள் சென்ற இடம் காணவில்லை. அதன் சுழற்சியில் வேகம் அதிகரித்தபடியே இருக்க எங்கும் பரவி வியாபித்தது. இருள். மழைக்குப்பின் படரும் செம்மண்ணுலர் வாசம் இருளின் வழியே நாசியை நிறைத்தது. தலை கவிழ்த்து இமை மூடினேன். நொடிகளில் இமையைத் திறக்கவும், என் முன்னே கரிய நிறம் மட்டுமே மீதமிருந்தது. சற்று முன்னிருந்த கனன்று எரிந்த வெயில், என்னை இழுத்து வந்த கருநிலத் துண்டு, ஆளில்லாத கட்டிடங்கள், மண் சாலை எதையுமே காணவில்லை.வலது காலை தரையில் ஊன்றி பைக்கின் மீது அமர்ந்திருப்பதும்கூட ஒரு நினைவாகத்தான் தோன்றியதே தவிர என்னால் எதையும் உணர முடியவில்லை.
கையை வெளியே நீட்டினேன். நீர் வாலிக்குள் கையை நுழைத்தது போலிருந்தது. கையை உதறி உள்ளிழுத்துக் கொண்டேன். இருள் பெரும் கருந்திரவமாக, நதி சலசலத்துச் செல்வதைப் போல் என்னைச் சுற்றி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நினைத்தபோதே பயமாக இருந்தது. எனக்கு விருப்பமான அந்தப் பாடலின் இசை எங்கிருந்தோ கசிந்து வந்து என்னை அடைந்தது. அவ்வளவுதான் நான் விரும்பவே விரும்பாத அழுகலான அகோர எண்ணங்கள் என்னை நிரப்பி மூச்சுமுட்ட செய்தன.
d
திவ்யாவை நேரில் பார்த்தே பல மாதங்களாகிவிட்டன.மூன்று மாதங்களுக்கு முன் அவளாக முகநூலில் நட்பு கோரிக்கை விடுத்திருந்தாள். போன மாதத்தில் ஒரு முறை மின்னரட்டைக் கூட நிகழ்ந்தது. என்றாலும் எல்லாவற்றிலும் பொய்களும் வேஷங்களுமே பிரதானமாக இருந்தன ‘.உன்னால் நான் எதையும் இழந்து விடவில்லை’ என்பதை அவளுக்கு செவிலில் அறைவதைப் போல் உணர்த்திவிட வேண்டுமென நான் அதிகம் பிரயாசை எடுத்துக் கொண்டேன். ஆனால் அவளுடைய குறிக்கோள் வேறாக இருந்தது.’உன்னைப் போன்ற நிறைய பேரை நான் பார்த்துவிட்டேன். நீயும் அவர்களில் ஒருவனாய் இருந்துவிட்டுப் போவதில் எனக்கு எந்த ஆட்சேபணையுமில்லை’ என்பதை நிறுவவே அவள் பெரிதும் முயற்சி செய்தாள். இதை நான் எளிதில் கண்டுபிடித்து விடுவேன் என்பது அவளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இருந்துமென்ன?அவளுக்கு தேவைப்படுவதெல்லாம் விளையாட்டின் போதை மட்டுமே. மற்றபடி மனம் சொல்லும் புனித விதிகளையெல்லாம் அவள் சட்டை செய்வதே கிடையாது. இவ்வளவு தெரிந்தும் நானேன் அவளது போதைக்கு பலியாக விரும்புகிறேன்? ஒருவேளை எனக்கும் இந்த விளையாட்டு பிடித்திருக்கலாம். ஆனால் எங்களுக்குள் நிகழும் இந்த நாடகத்தில், நான் வெளிப்படுத்தும் அதீத ஜாக்கிரதையுணர்வும் அதன் பயனாய் எனக்கு அணிவிக்கப்படும் நாடகப் பூச்சும் என்னை நானல்லாத ஒன்றாகக் காட்டிய செயற்கைத்தன்மையும் அவளிடம் அறவேயில்லை என்பது பிரத்யேகமான கவனத்திற்குரியது. இயல்பிலேயே அவள் ஒரு அற்புதமான நாடகக்காரி.
நேற்று திவ்யா முகநூலில் ஒரு நிழற்படத்தைப் பகிர்ந்திருந்தாள். அந்தப் படத்தில் விசேஷமாய் ஒரு மயிருமில்லை. அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கிராபிக்ஸ் இதயத்தில் கத்தி சொருகப்பட்டிருக்க, அதற்கு குறுக்கு வாக்கில் நீ என்னைக் காதலிக்காமல் இருக்கலாம்; ஆனால் நான் உன்னை காதலிக்கக்கூடாது என்று சொல்லும் உரிமை உனக்கு கிடையாது” என்ற வாசகம் அடர்சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. இது போன்ற காதல் உணர்ச்சி ததும்பும் அடர்சிவப்பு படங்கள் இணையத்தில் எக்கச்சக்கமாக கொட்டிக் கிடக்கின்றன. நானும்கூட அவற்றை ஏராளமாகப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதை திவ்யா பகிரவும் எனக்கு கை கால்களில் நடுக்கம் எடுத்து கோபம் தலைக்கேறியது.(அதற்கு முந்தைய தினம் மோசஸ், தான் திவ்யாவுடன் கொண்டிருந்த உறவை முற்றிலுமாக முறித்து கொண்டுவிட்டதாக என்னிடம் சொல்லியிருந்தான். இந்த கருமாந்திரம் பிடித்தவனுக்கு திவ்யா பற்றிய எந்த விஷயமாக இருந்தாலும் அதை முதலில் என்னிடம் சொல்வதே பிழைப்பாய்ப் போய்விட்டது. இவனைச் செருப்பால் அடித்தால் எல்லாம் சரியாகிவிடும்)
இருள் மூழ்கடித்த நிலத்தில் தனியனாகச் சிக்கிக்கொண்டு அர்த்தமற்ற நினைவுகளின் பேய்க் காற்றெழுப்பும் பீதியில் ஒடுங்கிப் போய் நின்று கொண்டிருந்தேன். இரவுகளுக்காய் ஏங்கித் தவித்த நாட்களும் இருளில் நான் என்னுள் கண்டடைந்த ஆதிமனிதனின் வன்மமும் இப்பொழுது கவனத்திற்கு வந்து உடலைச் சிலிர்க்கச் செய்தன.
பைக் எங்கே போனதெனத் தெரியவில்லை. நான் தரையில் மண்டியிட்டபடி கிடந்தேன். கை கால்களில் எல்லாம் சோர்வு அப்பியிருந்தது. எனக்கு நேரெதிர் திசையில் வெளிச்சக் கீற்று சின்னதாய்த் தளிர்விட்டு மெலிதாய் படர்வதை கவனித்தேன். இருட் பெருவெளியில் அந்த சின்ன ஒளியை மிகத் தெளிவாய் பார்க்க முடிந்தது. அவ்வொளிக் கீற்றுக்குப் பின்னே நிழலுருவாய் திவ்யாவை கண்டு துணுக்குற்றேன். அவள் தனது கைகளில் பற்றியிருந்த மஞ்சள் மலர் ஒளி வீசி சுடர்ந்து கொண்டிருந்தது. கொஞ்ச கொஞ்சமாய் படர்ந்த ஒளிக்கதிர்கள் அவள் என்னை நோக்கி நடந்து வந்த பாதையெங்கும் நிறைந்து இருளைத் துடைத்து நிறங்களின் பிரவாகமாய் காற்றில் வழிந்தன.சாலையின் இருபுறங்களிலுமிருந்த கட்டிடங்களின் மேல் ஒளி படியவும், அவை சத்தமேயெழுப்பாது காற்றில் மணல் துகள் கரைந்து போவதைப் போல் பொடியாகி மறைந்தன.அவ்விடங்களில் இப்பொழுது பேரிரைச்சலோடு ஆகப்பெரும் விருட்சங்களும், புல் செடி தழைகளும் பூமியைப் பிளந்துக் கொண்டு முளைக்க காற்றில் நிலம் அதிர்ந்தசைவது தெரிகிறது. நான் திக்பிரமை பிடித்தவனைப் போல் எழுந்து என் கண்ணில் விரிந்த அற்புதத்தை உள்வாங்க சிரமப்பட்ட வண்ணம் பொருளற்று விழித்துக் கொண்டிருந்தேன்.பெருங்கானகமொன்று என் முன்னே உருப்பெற்று தன் பச்சை வாசத்தைப் பரப்பிய பொழுதில் திவ்யா பற்றியிருந்த மலரிலிருந்து வெளிப்பட்ட ஒளியலைகள் கானகத்தின் மேல் வண்ணக் கீற்றுகளைத் தெறிக்கச் செய்து மாய நர்த்தனங்கள் புரிந்தன. திவ்யாவிற்கும் எனக்குமிடையே இருந்த இடைவெளி குறைந்துகொண்டே வர, தடித்துச் செழித்த பெருங்கிளைகளும் முழங்காலுயர புல்செடிகளும் வளைந்து மடிந்து அவளுக்காக வழியமைத்து விலகுகின்றன. அரியணை நோக்கி நடக்கும் இளவரசியென காட்சியளிக்கிறாள் திவ்யா.அடர்த்தியான நிழலின் குளிர்ச்சியும் ஈர மண் ஸ்பரிசமும் கிறங்க செய்கின்றன.
திவ்யாவின் கையிலிருந்த மலரைத் தவிர காட்டின் வெளியில் வேறெந்த பூவும் பூக்கவேயில்லையென்பதையும் அவ்வொற்றை மலரிலிருந்தே பிறப்பின் பரிசுத்த வாடை ஊற்றெடுத்து பரவியதுடன் வண்ணத்திரட்சியில் நிலம் மூழ்கவும் அதுவே காரணமாயிருக்கிறது என்பதையும் நான் அறிந்து ஆச்சரியமடைந்த நொடியில்.. திவ்யா என்னருகில் வந்து விட்டிருந்தாள். அவளை ரொம்பவும் அழகாய் காட்டும் பிங்க் நிறச் சுடிதார் அணிந்திருந்தாள். கள்ளம் நிறைந்த கண்களோடும் அதற்குத் துளியும் பொருந்தாத உதட்டில் புன்னகையோடும் நிற்கும் அவளைச் சுற்றி ஒரு அரூப வலை விரிக்கப்பட்டிருக்கிறது  அதில் தவறியும் விழுந்துவிடக் கூடாது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
இந்தச் சூழலை எப்படி கையாள்வதெனத் தெரியவில்லை. அமைதியாக நிற்கிறேன். என் கையைப் பிடித்து அவளுக்கு மிக அருகில் என்னை வரச் செய்கிறாள். அந்த மஞ்சள் மலருக்குள் உற்று நோக்கும்படி சைகையினால் உத்தரவிடுகிறாள். நானும் அப்படியே செய்கிறேன். பூவிதழ்கள் விலக்கி மகரந்தங்களைக் கடந்து பார்க்கையில்,காட்சிகள் நீர்பிம்பங்களெனத் தெரிகின்றன. அங்குமொரு கானகம். அதில் கையில் மலரை ஏந்தியபடி பிங்க் சுடிதாரணிந்து நிற்கும் திவ்யாவிற்கு அருகில் நான்.எனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. நிஜத்தில் நடப்பது அப்படியே அப்பூவில் பிரதிபலிப்பதாய் நம்பினேன். அபூர்வ கானம் பாடியபடி எங்களைக் கடந்து போன பெயர் தெரியாத பறவைகூட அம்மலருக்குள் தெரிந்தது. இன்னும் பார் என்று சமிக்ஞை செய்தாள். ஏதேதோ பேசியபின் கண நேரம் நீண்ட அமைதியைத் தொடர்ந்து மலருக்குள் இருந்த நான் மலருக்குள் இருந்த திவ்யாவை பற்றியணைத்து அவளது இதழ்களில் முத்தம் கொடுக்கிறேன். என் அணைப்பில் அவள் தவறவிட்ட மலர் கீழே விழவும், அதில் ஒளி குன்றுகிறது. அவளது நீளமான கைகளைத் துருத்திக் கொண்டிருக்கும் சிறிய விரல்கள் என் தலையைக் கோதுகின்றன.ஆடைகளை அவிழ்த்து உயிர்களின் மூலமான கானகத்தினுள்ளே நிர்வாணிகளாகிறோம்.அவளது சிறிய முலைகளின் காம்புகள் புடைத்து நிற்கின்றன. காதல்,வலி,. கண்ணீர், நம்பிக்கை, நம்பிக்கையின்மை, புரிதல், புரிதலின்மை, அன்பு, அன்பின்மை நிஜம், பொய், ஒளி, திரவம், காற்று, கோபம், அகங்காரம், சொற்கள், நினைவுகள், ஏமாற்றங்கள், சந்தோஷங்கள், சொன்ன பிரியங்கள், சொல்லாத ப்ரியங்கள், வெளிக்காட்டிய வன்மம், உள்ளுக்குள் நாறும் வன்மம்… யாவும் மறந்து வாழ்வின் ஒரே நாட்டமாய் அவளை ஆரத் தழுவிக்கொள்ளலானேன்.
நிஜத்தில் எனக்கு பயமாய் இருந்தது.அவளது இருப்பும் நான் கண்ட காட்சியும் ஒரு சேர என்னைக் குழப்பி வாட்டின. பூவிலிருந்து கண்களை விலக்கி, அருகிலிருந்த அவளைப் பார்த்தேன். கைகளை மார்போடு சேர்த்துக் கட்டியிருந்தாள். அந்த மலர் அவளது வலக்கையிலிருந்தது. ஏளனமா பரிதாபமா என்று அடையாளங்காண முடியாத உணர்ச்சியலை அவள் கண்களில் அசைந்தாடியது. ஏதோ சொல்ல வாயெடுத்து பின்னர் வேண்டாமென நினைத்துக் கொண்டேன். அவள் பலமாய் சிரித்தாள். கானகமெங்கும் எதிரொலித்த அச்சிரிப்பு பரிகாசமாய்ப் பெருத்து மலைப்பாம்பென என்னைச் சுற்றி வளைத்தது. இரு நிமிடங்களுக்கு விடாது சிரித்துவிட்டு பின்னர் நிலமதிர கோபமாய் அடிக்குரலில் இப்படிச் சொன்னாள் “நீ இன்னும் அதே கோழைதான்”. எனக்கும் ஆத்திரம் பொங்கியது. ஆனால் அதை எப்படி வெளிக்கொணர்வதெனப் புரியவில்லை. தாளமாட்டாத ஆற்றாமையில் உடல் நடுங்க விரல் நகங்களைக் கடிக்கத் துவங்கினேன். அவள் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள். என்னையும் மீறி என்னிலிருந்து வெளிப்பட்ட ஆக்ரோஷமான குரலில் கத்தினேன் “ச்சீ..போடி தெவடியாமுண்ட..”
என்ன நடந்தது ஏது நடந்தது என்பதெல்லாம் ஞாபகத்தில் இல்லை. சாலையோரத்தில் கட்டிட வேலைகளுக்காய் குவிக்கப்பட்டிருந்த ஜல்லி கற்களுக்கும்,செங்கற்களுக்குமிடையே மயக்கமாகி விழுந்திருந்தேன். எனக்கு மிக அருகே பை ஸ்டாண்டிடப்பட்டிருந்தது. அங்கே வேலை செய்துகொண்டிருந்த வட இந்தியரொருவர் என் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார். சாலையின் பக்கங்களில் கட்டிடங்களெல்லாம் அப்படியே முன்னிருந்த மாதிரியே சோகையாய் இருந்தன. நினைவு திரும்பிய வேளையில், காலில் சுருக்கென்று என்னவோ குத்தி வலி ஏற்படுத்தியது. காய்ந்து கருத்த இதழ்களை உடைய பூவின் காம்பு முள் வலது கால் பெருவிரலில் சொருகிக் கொண்டிருப்பதைக் கண்டேன். முள்ளோடு சேர்த்து பூவையையும் எடுக்க, அதன் இதழ்கள் உதிர்ந்து தூளாகின. முள் ஆழமாக இறங்கியிருக்க வேண்டும். பயங்கரமாய் வலிக்கிறது.
நன்றி : சொல்வனம்


Monday, March 26, 2012

அரசனின் கடல்நினைவுகள்


விதூஷகன் அதிகம் அறியப்படாத ஒரு எழுத்தாளர்.அவர் அதிகம் அறியப்படாமல் போனதற்குக் காரணம் அவர் அதிகம் எழுதாததுதான் என்பது என் கருத்து. அவர் ஒரே ஒரு நாவல்தான் எழுதினார். “அரசனின் கடல்நினைவுகள்” எனும் அந்த நாவலை எழுதி முடித்த நான்காம் நாள் மாரடைப்பு ஏற்பட்டு செத்துப் போய்விட்டார்.

பின் வருவது விதூஷகன் எழுதிய “அரசனின் கடல்நினைவுகள்” நாவலின் நாற்பத்தி யெட்டாவது அத்தியாயம்:


அரசன் அந்த பிரம்மாண்டமான குழியினை ஆழமான பார்வையில் நோக்கினான். கண்களின் எல்லையைத் தாண்டி விரிந்தது அந்தக் குழி.நூறடி ஆழம் ஐம்பதடி அகலம் என்கிற அளவில் கடற்கரையில் ஒரு குழி என்றால் அது எத்தனை பெரியது என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு பெரிய மரணக்கிணறை ஒத்திருந்தது அதன் வடிவம்.அந்தக் குழியைச் சுற்றிலும் முழங்கால் உயரத்திற்கு முட்கிளைகளால் வேலி போடப்பட்டிருந்தது.நெருக்கமாக வேயப்பட்டிருந்த அந்த வேலிக்குள் சின்ன எறும்புகூட நுழைந்துவிட முடியாது.வேலியின் நடுவே வாசல் போல் ஒரே ஒரு திறப்பு.குழிக்குள் இறங்குவதற்கு ஏதுவாக ஒரு நீளமான ஏணி அந்த திறப்பின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்தது.


அரசனுக்குப் பின்னே இராணுவத்தினர் சீராக அணிவகுத்து நின்றனர்.குழிக்குள் பெட்ரோல் ஊற்றப்படும் சத்தம் மழை பெய்வதைப் போல் இரைச்சலாகக் கேட்டது. அலைகளின் ஈரத்தோடு படர்ந்த கடற்காற்றை ஸ்பரிசித்த அரசன் பதற்றமடைந்தான். அவனது உடல் ஈரக்காற்றில் நடுக்கம் கண்டது.அதை மறைக்கும்பொருட்டு தனது கைகளை இறுக்கமாக்கிக்கொண்டான். மணலில் புதைந்தெழுந்த அவனது கால்கள் காற்றின் விசையில் தடுமாறின.கடற்காற்று இன்னும் வேகமெடுத்து வீசியது.


அரசன் ஆயாசத்தோடு தீக்குச்சியைக் கொளுத்தினான்.கடற்காற்றில் இரண்டு தீக்குச்சிகள் எரிந்த மாதிரியே அணைந்துபோயின.மூன்றாவது தீக்குச்சிதான் தீப்பந்தத்திற்கு உயிர் கொடுத்தது.சற்று நேரத்திற்கெல்லாம் நிறைய தீப்பந்தங்கள் தயாராகிவிட்டிருந்தன. குழியிலிருந்து முப்பதடி தூரம் தள்ளி,மரப்பலகைகளால் மேடை போல் அமைக்கப்பட்டு அதன் மேல் அரசனுக்கு சிம்மாசனம் போடப்பட்டிருந்தது. தீப்பந்தத்தை ஏற்றிய பின்னர் அரசன் தனது சிம்மாசனத்திற்கு சென்று அமர்ந்து கொண்டான்.கடலும் கடற்கரையும் அரசனின் காலடியில் இருப்பது போன்ற தோற்றம் உருவாகியது.அரசன் இராணுவத்தினரை நோக்கி சிநேகமாக கையசைக்கவும்,கரவொலிகள் எழும்பின.


தீப்பந்தங்களை ஏந்திய இருபது இராணுவ சிப்பாய்கள் ஏணிவழியே குழிக்குள் இறங்கினார்கள். முதல் ஆளாக குழிக்குள் இறங்கிய சிப்பாய் எண்:AS124 தனது வலது கையிலிருந்த தீப்பந்தத்தை விறகு குவியலுக்குள் வீசிவிட்டு இடது கையை வான் நோக்கி உயர்த்தி “ஹிரஸ்வானா ஜிகுலாதாத்”[எங்கள்தேசம் எங்களுக்கே] என்று அடிக்குரலில் கத்தினான். அவனைத் தொடர்ந்து வந்த பத்தொன்பது பேரும் அவனைப் போலவே தீப்பந்தத்தை வீசியெறிந்துவிட்டு “ஹிரஸ்வானா ஜிகுலாதாத்” என்று தொண்டை கிழிய கத்தினார்கள்.


தீப்பிடித்த விறகுகளிலிருந்து பரவிய அனல்காற்று தோலையே உருக்கியெடுக்கும் உஷ்ணத்தோடு பலமாக வீசியது.இருபது சிப்பாய்களும் ஜுரவேகத்தில் ஏணியேறி மேலே வந்தார்கள்.அரசன் தனது கைகளை அலட்சியமாகத் தட்டி பெருமிதமாக சிரித்தான்.நெருப்பு பலமாகப் பற்றிக்கொண்டு எரிந்தது.
   
நான்கு பச்சைக் கலர் இராணுவ டிரக்குகள் கடற்கரை மணலில் அலைகளை எழுப்பியபடி சீறிக்கொண்டு வருவது நெருப்பினூடே மங்கலாகத் தெரிந்தது. அரசனுக்கு நேரெதிர் திசையில் கரும்புகை பரவ தகித்துக்கொண்டிருந்த தீக்குழிக்குப் பின்னே கொஞ்ச தூரம் தள்ளி அவை நின்றுக்கொண்டன. டிரக்கினிலிருந்து இறங்கிய இராணுவ உயர்அதிகாரி எண்:AS-A4 அரசனின் முன்வந்து தலை குனிந்து “தீரஸ்கார் பரேல்”[மன்னர் வாழ்க] என்று பவ்யமாகச் சொல்லி அரசனுக்கு மரியாதை செலுத்தினான்.அரசன் வேலைகள் சீக்கிரம் ஆரம்பிக்கட்டும் என்று சைகையினாலேயே உத்தரவிட்டான்.


அரசனிடமிருந்து உத்தரவு கிடைக்கவும் நான்கு டிரக்குகளின் பின் கதவுகளும் சடுதியில் திறக்கப்பட்டன.அரசனின் பார்வை கதவுகளின் மேலேயே குத்திட்டிருந்தது. கதவுகள் திறக்கப்படவும்,ஒரே சீராக நின்றுகொண்டிருந்த டிரக்குகளிலிருந்து நூற்றுக்கணக்கான நிர்வாண பிணங்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக சரிந்து விழுந்தன.சீட்டடுக்குகள் கலைந்து விழுவதைப் போல் ஒன்றன்பின் ஒன்றாக ஒருசேர கவிழ்ந்து விழுந்த பால்பேதமற்ற அழுகல் பிணங்களின் சதைக்குவியல்களை அரசன் பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.நொடிப்பொழுதில் கடற்கரையே மிகப்பெரும் சவக்கிடங்கினைப் போலானது.


நாஜிகளால் கொலை செய்யப்பட்ட யூதர்களின் உடல்களை கண்டிருப்பீர்கள் தானே?அவற்றைப் போலவேதான் இருந்தன இந்தப் பிணங்களும்.கண்கள் இரண்டும் உள்ளே போய்,கன்னங்கள் ஒடுங்கியிருந்த சடலங்களில் எலும்புகளைக் கண்கூடாகப் பார்க்கமுடிந்தது.ஆண்களது உடல்களில் பிறப்புறுப்புகளைக் காணவில்லை. பிறப்புறுப்புகளை அறுத்து அவர்களைக் கொலை செய்திருக்க வேண்டும்.பெண்களது உடல்களில் அங்கங்கே தீக்காயங்கள் தென்பட்டன.அவர்களது பிறப்புறுப்புகளில் காய்ந்திடாத குருதியின் தடம் இருந்தது.இராணுவ உயரதிகாரி தனது சிப்பாய்களைத் துரிதப்படுத்தினார்.சிப்பாய்கள் பிணங்களை அள்ளி குப்பை பொறுக்கும் தள்ளு வன்டிகளில் போட்டு நிரப்பினார்கள்.இந்தப் பிழைப்பிற்கு மலம் அள்ளும் வேலை எவ்வளவோ தேவலாம் என சிப்பாய் எண்:AS057 மனதிற்குள்ளாக முனங்கினான். நூறு குப்பை வண்டிகளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பிணங்கள் பிதுங்கலாகத் திணிக்கப்பட்டன.


மேளங்கள் கொட்டப்பட,சங்குகள் முழங்குகின்றன.சிப்பாய்கள் பிணங்களைக் குப்பை வண்டிகளோடு சேர்த்து தூக்கி குழிக்குள் போடுகிறார்கள்.தேவ தூதர்களின் தலைவரான மிரிசியோ அரசனருகே சென்று சன்னமான குரலில் “நிரிஜ்விஹியே லிதி சேதா மியிரியோம்” [கடவுளுக்காவே நாம் இதை செய்கிறோம்] என சொல்கிறார். அரசன் அதை ஏற்றுக்கொள்ளும் பாவனையில் இமைகளை மெல்ல மூடித் திறக்கிறான்.மிரிசியோ சுருக்கங்கள் நிரம்பிய தனது நடுங்கும் கைகளை அரசனின் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்கிறார்.


கழுகுகளின் சிறகுகளைத் தாங்கிய வானம் அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. தீயில் விழுந்த பிணங்கள் கருகி சாம்பலாகின்றன.மேகம் போல் படரும் சாம்பல் நிற தீ ஜுவாலைகளைக் காணும் அரசன் குதூகலம் அடைகிறான்.


குழுமியிருந்த  இராணுவத்தினரின் யாவரும் கூட்டாக “ஹிரஸ்வானா ஜிகுலாதாத்” என்று முழக்கமிடுகிறார்கள்.கடலின் நிசப்தத்தை தகர்த்த கோஷம் சாத்தான்களின் குரலில் அவ்வளவு கொண்டாட்டமாக ஒலிக்கிறது.அரசனின் தலைமையில் பாடல்களின் பின்னணியோடு ஒரு கார்னிவல் போல் அது நடந்து முடிந்தது.
******