Saturday, December 25, 2010

இனியுமொரு பாதை


பாறைகளின் மேல்
எழுதப்பட்ட வார்த்தைகளுக்கு
பாறைகளின் கனம் கூடிவிடுகிறது
உறைந்த அச்சொற்களுக்குள்
பயணிக்க முடியாத நான்
தொலை தூரத்தில்
தனித்து செல்லும் மழையின் மேல்
என் கவிதைகளை எழுதுகிறேன்
சாபம் படிந்த துர்கனவு
பெருமழைக் கொண்ட இரவிலிருந்து
எனது கவிதைகளை
குருதி வழிய பிய்த்தகற்றி
தீயிட்டு கொளுத்துகிறது
எரியும் மழையில் எனது சொற்கள்
கருப்பாய் பொசுங்குகின்றன
மெல்ல வடிந்து போகிறது நெருப்பு
மெல்ல வடிந்து போகிறது மழை
ஆங்காரமாய் திமிறிய சொற்கள்
ஒன்றுக்கூட மீதமில்லையென்றானபின்
வெற்று வெளிநோக்கி கைகள் நீள
நான் பிரக்ஞையற்றவனாய்
மீட்சிக்காய் கண்ணீர் வழிய முழந்தாளிடுகிறேன்
ஈரச் சகதியில்
புதைந்து கிடக்கிறது ஒற்றை நட்சத்திரம்

Thursday, December 16, 2010

சிருஷ்டியின் கரங்கள்

தார் சாலைகள் கசிந்து உருகிய
நிழல்களில்லா ஒரு அகாலத்தில்
சிருஷ்டியின் கரங்களை நான் கண்டெடுத்தேன்
எங்கிருந்து வந்தன எனத் தெரியவில்லை,
எப்பொழுது பறிபோகும் என்பதிலும் நிச்சயமில்லை.

நிலையில்லாத தொடர் பிம்பங்கள்
இமைகளின்மீது படிந்தும் அகன்றும்
எதுவுமில்லாததிலிருந்து
எதை உருவாக்குவது?

கானகத்தை போலொரு கடல்
மலையை போலொரு நிலவு
நிர்வாண உடலை போலொரு வானம்
சாத்தானை போலொரு கடவுள்
சிருஷ்டியின் கரங்களை இறுக பற்றிக்கொண்டு,
உலகை முற்றிலுமாக மாற்றியமைக்கிறேன்.

பின்னர்,
என்னுடைய பழைய காலண்டரின் தேதிகளை,
சாக்கினுள் மறைத்து வைத்த கண்ணீர் துளிகளை,
சொல்ல நினைத்த பொய்களை,
கிழித்தெறிந்த கவிதைகளை,
மீண்டும் உருப்பெறச் செய்கிறேன்.
உண்மையென உலவுகின்றன, உருப்பெற்றவை.

பிரிவின் கடிதங்களையும்
அழிவின் செய்திகளையும்
மீள்தொடர்பின் முறிவுகளையும்
தீரா உவகையுடன்,நான் சிருஷ்டிக்கிறேன்

என் கனவிளவரசிக்காக,
முடிவில்லாத நதிகளை
இரவின் இசைக்குறிப்புகளை
எண்ணற்ற சேவகர்களை
நான் சிருஷ்டிக்கிறேன்

கனவிளவரசியை சிருஷ்டிக்க
முனையும் பொழுது மட்டும்
சிருஷ்டியின் கரங்கள் நடுங்குகின்றன.

இறுதியில்,
என்னை நானே சிருஷ்டிக்கிறேன்,
கொஞ்சம் கண்களை மாற்றி.
என்னை நானே சிருஷ்டிக்கிறேன்,
கொஞ்சம் தேகத்தை மாற்றி.
என்னை நானே சிருஷ்டிக்கிறேன்,
கொஞ்சம் என்னை மாற்றி.
இருந்தும், நான் நானாகவே இருக்கிறேன்.
நான் நானாகவே.

பெருங்குரலெடுத்து அழுகிறேன்.
சிருஷ்டியின் கரங்களை தூக்கியெறிகிறேன்
அவை குரூரமானவை
அவை இரக்கமற்றவை.

எரிதழலின் ஜீவாலைகளை கக்கியபடியே
துரத்துகின்றன, என் சிருஷ்டிகள்.
அழிவின் கரங்களை தேடி அலைகிறேன், நான்
                                                                                                                         -துரோணா

Saturday, December 11, 2010

கானல் திரை



அந்த நிலவின்
அதே படிமம்
நான் பார்த்த
அதே மலைதான்
இன்னுமொரு முறை
உயிர்த்தெழுகிறது,
முந்தைய இரவின்
சத்தியத்தை காப்பாற்ற.
 தன் சாம்பல் கரையில்
புரளும் குருதியை
கழுவிக்கொண்டிருக்கின்றன
நுரை அலைகள்.
வார்த்தைகளின் ஞாபகங்களை,
கையிலேந்தியபடியே திரிகின்றான்
ஒரு அம்மண துறவி.
அவனை தொடர்ந்து
அவ்வழிகளில் படர்கின்றன,
வெறுப்பின் எச்சங்கள்,
அன்பை நோக்கிய கனவுகளை தாங்கி.
வானாக
பூமியாக
சூரியனாக
நதி ஓடைகளாக
எங்கும் மீதமிருக்கிறது ஒரு குரல்.
மிகவும் எளிதாக
ஒரு காதலை
ஏற்கவும் மறுக்கவும்
நாம் பழகிக்கொண்டோம்.
அந்த நிலவின் அதே படிமம்
நான் பார்த்த அதே மலைதான்
இன்னுமொருமுறை மடிந்து விழுகிறது.
                 
                                                                                                                                         -துரோணா

Friday, December 3, 2010

நினைவின் இசை


தேநீர் ஆறிக்கொண்டிருக்கிறது
மழை இன்னமும் நின்ற பாடில்லை
உனது கோபங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்
அந்த உரையாடல்கள் பொய்யாகவே இருக்கட்டும்
உன் ஸ்பரிசம்
உன் தீண்டல்
உன் காதல்
இனி யாவும் ,இந்த நொடியில் மாய்ந்துவிடட்டும்
கருப்பு வெள்ளையாக
சாலையில் வானவில் ஊர்ந்துக்கொண்டிருக்கிறது.


                                                                                                          -துரோணா

இளவேனில்

இதுவரை யாரும் வந்திராத பிரதேசத்தின்
இருளில் கனன்றுக்கொண்டிருக்கிறது
ஒரு குரல்
கண்ணாடி பிம்பங்கள்
சிதறியிருந்த அந்த நிலத்தினில்
தன் நிழலினை தேடிக்கொண்டிருக்கிறது
ஒரு தேகம்
ஆளற்ற நாற்காலிகள்
கோப்பைகளை நிரப்பிக்கொண்டும்
காலங்களை பருகிக்கொண்டும் காத்திருக்கின்றன
இளவேனில் வந்துவிட்டது.