நான் சாதாரணமானவன்,
உங்களைப் போலவே.
இரும்பு கேட்டின் கம்பிகளை
இறுகப் பிடித்துக்கொண்டு,
என்றேனும் ஒருநாள்
மறைந்துவிடக்கூடுமென
நம்பிக் கொண்டிருப்பவன்
உபயோகத்தில் இல்லாத
பழைய எண்கள் அனைத்தும்,
திரும்பவும் தொடர்புக்கொள்ளும் நிலைக்கு
திரும்பிவிட வேண்டுமென
ப்ரார்த்தித்துக் கொண்டிருப்பவன்.
என் அறையில் எந்த வாசமும் இல்லை.
என் டைரியில் எந்த கிறுக்கலும் இல்லை.
எந்த பாடலும், எனக்கு
எதையும் நினைவூட்டுவதில்லை.
நான் சாதாரணமானவன்
உங்களைப் போலவே.
கண்முன் விழுகின்ற சடலங்களில்
என் கைரேகைகள் இல்லை என்ற வகையில்
நான் நிபந்தனைகளற்ற நிரபராதி.
எல்லாம் சரியாகவே இருக்கிறது.
கடவுள்களின் மீது எனக்கு,
எந்த குற்றச்சாட்டும் இல்லை.
விதிமுறைகளை ஏற்பதில் எனக்கு,
எந்த ஆட்சபேனையும் இல்லை.
கொடுப்பதற்கும் எடுப்பதற்கும்
ஏதுமில்லாத தேசத்தில் நான் வாழ்வதற்கில்லை.
தாழிடும் ஓசை கேட்கும்பொழுதெல்லாம்
நான் கதவு தட்டுவதை நிறுத்திவிடுகிறேன்.
கையெழுத்திட நேரும்பொழுதெல்லாம
நான் அன்றைய தேதியை மறந்துவிடுகிறேன்.
அழுகை வரும்பொழுதெல்லாம்
நான் ஒரு கவிதையெழுத துவங்கிவிடுகிறேன்.
ஆம்.
நான் சாதாரணமானவன்,
மிகவும் சாதாரணமானவன்.
உங்களைப் போலவே.
-துரோணா