Wednesday, April 18, 2012

திரவஒளி தேவதைஅரவிந்த் சுவரில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். ராஜேஷ் தியானம் செய்யும் தோரணையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருப்பது மங்கலாக தெரிந்தது. குரு சந்தோஷோடு சென்றிருக்க வேண்டும். ஊர் முழுக்க சுற்றியலைந்துவிட்டு நேற்றிரவு அறைக்கு வந்து சேர்ந்தபோது மணி பதினொன்றைக் கடந்துவிட்டிருந்தது. அப்பொழுதே யூகித்தேன் இவன்கள் நாளைக்குக் கல்லூரிக்கு மட்டம் போடதான் திட்டமிடுவான்கள் என்று. ஆனால் இவ்வளவு பெரிதாக வேலை செய்வான்களென நினைக்கவில்லை. காலையில் நான் எழுவதற்கு முன்னே கிளம்பிப் போய் குருவும் அரவிந்தும் சரக்கு வாங்கி வந்துவிட்டான்கள். ராஜேஷையும் சந்தோஷையும் என்ன சொல்லி கவிழ்த்தான்களெனத் தெரியவில்லை. சரக்கென்றவுடன் நாக்கைத் தொங்கவிட்டுக் கிளம்பியிருப்பான் ராஜேஷ். ராஜேஷ் சரி என்று சொல்லிவிட்டால் சந்தோஷுக்கு வேறு வழியில்லை. அவனும் தலையாட்டிதான் தொலைக்க வேண்டும். இம்மாதிரியான சமயங்களில் பலத்த எதிர்ப்பு தெரிவிப்பது நான் மட்டும்தான். அதனாலேயே என்னைப் பொதுவாக கூட்டாலோசனைகளில் சேர்த்துக் கொள்வதில்லை. அவன்களாகவே காரியத்தில் இறங்கிவிடுகிறான்கள்.
இந்த மாதத்தில் மட்டும் இதுவரை எட்டு தடவை சரக்கடித்தாயிற்று. ஒரு கணம் உள்ளுக்குள் வீட்டு ஞாபகமெழவும் உடலில் ஒரு மெல்லிய அதிர்ச்சி புழுவைப் போல் ஊர்ந்தது. கல்லூரி விடுதியிலிருந்தபோதாவது விடுதி காப்பாளரது கட்டுபாட்டின் பெயரில் கொஞ்சம் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தோம். தனியாக அறையெடுத்து தங்கிய பிறகு, தட்டிக் கேட்பதற்கு நாதியில்லை. இஷ்டத்திற்குத் திரிந்து கொண்டிருக்கிறோம்.
அரவிந்த் என்னவோ முனங்கினான். தள்ளாட்டமான உச்சரிப்பில் அவன் பிதற்றலாக முனகியது யாரோ முன்பின் தெரியாத ஒருவரின் குரலில் தொலைதூரத்தில் எதிரொலித்தது. ஒன்றும் விளங்கவில்லை. தலை தனியாய் கழன்று விழுவது போன்ற பிரமை மூடிய இமைகளில் நிறக்குமிழ்கள் உடைந்து சிதற, ஏதோவோர் அரூப விசை என்னை இயக்குவதாய்ப் பட்டது. குளியலறைக்குள் சென்று கதவைத் தாழிடாமல் சாத்தினேன். ஷவரைத் திறக்கவும் மெல்லிய இரைச்சலோடு தண்ணீர் கீழே விழத் தொடங்கியது. சட்டை பேண்ட்டைக் கழற்றிவிட்டு வெறும் ஜட்டி பனியனோடு ஷவருக்கடியில் கால்களை நீட்டி உட்கார்ந்துக் கொண்டேன். சில்லிடும் நீர்த்துளிகளின் ஸ்பரிசம் நடுக்கம் கொடுத்தது. சில நிமிடங்களில் உடல் குளிருக்கு பழகிவிட தண்ணீர் என்னை இதமாக வருடியது. என்னுள்ளிருந்த சுயம் சார்ந்த சிறிய கவனமும் பிசகி நழுவுவதாய் உண்ர்ந்தேன். நினைவுகளின் காட்சி பிம்பங்கள் நீர்த்துளிகளிலிருந்து தெறித்து தரையில் விழுந்து அசுர வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருந்தன. என்னால் அவற்றைத் தொடர்ச்சியாக கவனித்து எனது பிரக்ஞையில் சேகரித்து ஞாபகங்களோடு பொருத்திப் பார்க்க முடியவில்லை. மின்னல் வெட்டுகளாய் காட்சிகள் என்னை கடந்து கொண்டே இருந்தன. பெரும்பாலும் யாவுமே நான் கண்ணீர் சிந்தும் காட்சிகள்தான். வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு விதங்களில் நான் அழுவதைப் பார்க்க எனக்கே கிளர்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு முறை அழும்போதும் நான் இதுவரை செய்த அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டவனாக உணர்கிறேன். உடன் இந்த உலகத்தால் கைவிடப்பட்ட ஒரு தூய ஆன்மாவாக என்னைக் கற்பனை செய்துகொண்டு பிறத்தவர்கள் யாவரையும் பெரும்பாவிகள் என உருவகம் பண்ணிக் கொள்கிறேன். திடீரென சரிந்து விழுந்துக் கொண்டிருந்த நிறமற்ற நீர்த்துளிகளில் ஒற்றைத் துளி மட்டும் வித்தியாசமாக சிவப்பு நிறத்தில் மின்னியது. அது இரத்தம் போன்ற ஒன்றாகவோ அல்லது இரத்தமாகவோ இருக்கலாம். வலது கால் பெருவிரல் நகத்தின் மேல் படர்ந்த அச்செந்துளி மெல்ல பெருத்து வீங்கத் தொடங்கியது.
அச்செந்துளியின் உள்ளே திவ்யாவின் பிம்பம் அலைந்தபடி இருப்பதை கொஞ்சம் நேரம் கழித்தே கணித்தேன்.
”லவ் கிவ்வுனு கிளம்புன நமக்குள்ள கான்டேக்டே இருக்காது..சரியா?”
திவ்யாவுடனான எனது பெரும்பாலான உரையாடல்கள் இந்த வாக்கியத்தோடுதான் நிறைவுறும். நானும் பொதுவாக உச்சுக்கொட்டி வைப்பேன். கடைசியாக பேசியபோதுகூட இந்த வாக்கியத்தை அவள் மறக்காமல் சொன்னாள். ஆனால் வழக்கமாக அவள் இதைச் சொல்லும்போது எனக்கு கோபமே வராது. கொஞ்சலான தோரணையில் சிறுபிள்ளை போல் பொய்க் கோபத்தோடு அவள் பேசுவதைக் கேட்கவே ரசமாயிருக்கும். என்ன நடந்ததோ தெரியவில்லை, அன்று அவளுடன் பேசியபோது என் மூளைக்குள் பாயும் நரம்புகள் சிக்கிக் கொண்டு சூடாகி வலியாய் உறுத்தல் உண்டாக்கின. மாலைக் காற்று அனலேற்றியதுபோல் கொதித்தது. தொலைபேசி இணைப்பை ஆத்திரத்தோடு துண்டித்துவிட்டு வீட்டிற்குள் சென்று எதை பற்றியும் யோசிக்காமல் படுத்து கண் அயர்ந்தேன். ஒரு மணி நேரம் கழித்து எழுந்ததும் காலையில் மோசஸ், திவ்யா தனக்கு அனுப்பியதாய் சொல்லி காண்பித்த குறுஞ்செய்தியின் ஒவ்வொரு வார்த்தையும் இராட்சஸ கற்பாறையென ஞாபகத்திற்கு வந்து எரிச்சல் கிளப்பியது. அதற்குப் பிறகு நான் திவ்யாவிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டேன். இது நடந்து இரு வருடங்களிருக்கும்.
இதற்கிடையே நான் பலமுறை சிந்தித்து பார்த்ததுண்டு. எனக்கு ஏன் திவ்யாவின் மேல் கோபம் வர வேண்டும்? அவள் என்னைக் காதலிப்பதாய் சொல்லியதில்லை. நானும் அவளிடம் என்னுடைய காதலைத் தெரிவித்தது கிடையாது. பின்னர் ஏன் அவள் என்னை ஏமாற்றிவிட்டதாய் எனக்குத் தோன்ற வேண்டும். அதற்குக் காரணமில்லாமல் இல்லை. நான் சொல்லாவிட்டாலும் நான் அவளைக் காதலிக்கிறேன் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அவளுடைய ஒவ்வொரு செய்கையிலும் நான் அதைக் கண்டிருக்கிறேன். “நீ என்னைக் காதலிக்கிறாய்தானே.ஆனால் பார் நான் அது தெரியாதது போல் எவ்வளவு இயல்பாய் இருக்கிறேன்” என்ற ஏளனம் அவளது உடல்மொழியில் அப்பட்டமாக வெளிப்படும். இதையொரு புதிராக உருமாற்றி அவள் என்னுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறாள். இலக்கேயில்லாமல் நானும் அந்தப் புதிரில் கலந்துகொண்டு என்னுடையப் பாதையை இன்னும் முடிச்சடர்ந்ததாக வகுத்து கொண்டிருக்கிறேன்.
திவ்யாவின் பிம்பம் சுமந்த செந்துளி நீர் சுழிப்பில் அடித்து செல்லப்பட்டது (அல்லது அப்படியெனக்கு தோன்றியது) வலது கால் பெருவிரலில் உறைந்த இரத்தத்தின் பிசுபிசுப்பை நான் உணர்ந்தேன். ஆழமான வடுவில் தண்ணீர் படவும் காந்தல் எடுத்தது.
ஈரத்தோடே சட்டையையும் பேன்ட்டையும் அணிந்துக் கொண்டு குளியலறையை விட்டு வெளியே வந்தேன். அரவிந்த் இன்னமும் தூங்கிக் கொண்டுதானிருந்தான். அடுக்களையில் ராஜேஷ் குழம்பு சட்டியை உருட்டிக் கொண்டிருக்கும் சத்தம் காதில் விழுந்தது. அடுக்களைக்கு சென்றேன்
“மச்சி என்ன குளிச்சிட்டு வர்றியா? …த்தா..தண்ணி தலையிலிருந்து எப்படி கொட்டுது பாரு..மயிரு தலை துவத்தித் தொலைக்க வேன்டியதுதானடா..?”
ராஜேஷ் சொன்னதையே காதில் வாங்கிக் கொள்ளாமல் நான் பாட்டிற்கு தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு அடுக்களையிலிருந்து கிளம்பினேன். பைக்கை எடுத்துக்கொண்டு வெளியேறியபோது வெயில் உக்கிரமேறி சிவந்திருந்தது. சதைக்குள் ஊடுருவித் தகிக்கும் வெயிலில் தடுமாறியபடியே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சிறிய கருப்பு திட்டு மண்தரையிலிருந்து மேலெழும்பி வெளிச்சத்தினூடே அந்தரத்தில் ஊர்ந்து செல்லத் துவங்கியது. பூச்சியோ என்னவோ என்று முதலில் சந்தேகித்தேன். ஆனால் அது உயிரிலி என்பதை என்னால் சீக்கிரத்தில் கிரகித்துக்கொள்ள முடிந்தது. ஒழுங்கற்ற வடிவில் பிய்த்தகற்றப்பட்ட நிலத்துண்டென உருக்கொண்டிருந்த அந்த இருள்திட்டை ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவனைப் போல் நான் பைக்கில் பின்தொடரலானேன். எந்த இடமென தெரியவில்லை. ஆட்கள் நடமாட்டமேயில்லாத வெறும் கட்டிடங்களும் வெயிலும் நிரம்பிய ஒரு பிரதேசத்திற்குள் நுழைந்துவிட்டது போலிருந்தது. திடீரென அந்த சின்ன கரும்பரப்பு நகர்வதை நிறுத்திக் கொண்டு அந்தரத்தில் மிதக்கலானது. வண்டியை உடனடியாக நிறுத்தும் பொருட்டு சடாரென பிரேக் பிடித்தேன். வேகத்தை மட்டுப்படுத்தாது நான் பிரேக் அடிக்கவும், உராய்வின் கிறீச் ஒலி எழும்ப மண் சாலையில் சின்னதாய் புழுதி படலம் உருவாயிற்று. சடுதியில் சுதாரித்துக் கொண்டு சமநிலையை எட்டினேன். இன்னும் அந்தரத்திலேயே இருந்தது அந்த கரிய இருள்திட்டு. கொஞ்ச நேரத்தில் அந்தரத்திலிருந்தபடியே அது மெல்ல சுழன்று சுற்றியது. நான் கண்ணிமைக்காது அதனையே பார்த்துக் கொண்டிருந்தேன். மெல்ல தொடங்கிய அதன் சுழற்சியில் இப்பொழுது அதிகப்படியான வேகம். இதுவரை என்னை அறுத்து பாய்ந்துக் கொண்டிருந்த வெயிலின் சுடுகதிர்கள் சென்ற இடம் காணவில்லை. அதன் சுழற்சியில் வேகம் அதிகரித்தபடியே இருக்க எங்கும் பரவி வியாபித்தது. இருள். மழைக்குப்பின் படரும் செம்மண்ணுலர் வாசம் இருளின் வழியே நாசியை நிறைத்தது. தலை கவிழ்த்து இமை மூடினேன். நொடிகளில் இமையைத் திறக்கவும், என் முன்னே கரிய நிறம் மட்டுமே மீதமிருந்தது. சற்று முன்னிருந்த கனன்று எரிந்த வெயில், என்னை இழுத்து வந்த கருநிலத் துண்டு, ஆளில்லாத கட்டிடங்கள், மண் சாலை எதையுமே காணவில்லை.வலது காலை தரையில் ஊன்றி பைக்கின் மீது அமர்ந்திருப்பதும்கூட ஒரு நினைவாகத்தான் தோன்றியதே தவிர என்னால் எதையும் உணர முடியவில்லை.
கையை வெளியே நீட்டினேன். நீர் வாலிக்குள் கையை நுழைத்தது போலிருந்தது. கையை உதறி உள்ளிழுத்துக் கொண்டேன். இருள் பெரும் கருந்திரவமாக, நதி சலசலத்துச் செல்வதைப் போல் என்னைச் சுற்றி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நினைத்தபோதே பயமாக இருந்தது. எனக்கு விருப்பமான அந்தப் பாடலின் இசை எங்கிருந்தோ கசிந்து வந்து என்னை அடைந்தது. அவ்வளவுதான் நான் விரும்பவே விரும்பாத அழுகலான அகோர எண்ணங்கள் என்னை நிரப்பி மூச்சுமுட்ட செய்தன.
d
திவ்யாவை நேரில் பார்த்தே பல மாதங்களாகிவிட்டன.மூன்று மாதங்களுக்கு முன் அவளாக முகநூலில் நட்பு கோரிக்கை விடுத்திருந்தாள். போன மாதத்தில் ஒரு முறை மின்னரட்டைக் கூட நிகழ்ந்தது. என்றாலும் எல்லாவற்றிலும் பொய்களும் வேஷங்களுமே பிரதானமாக இருந்தன ‘.உன்னால் நான் எதையும் இழந்து விடவில்லை’ என்பதை அவளுக்கு செவிலில் அறைவதைப் போல் உணர்த்திவிட வேண்டுமென நான் அதிகம் பிரயாசை எடுத்துக் கொண்டேன். ஆனால் அவளுடைய குறிக்கோள் வேறாக இருந்தது.’உன்னைப் போன்ற நிறைய பேரை நான் பார்த்துவிட்டேன். நீயும் அவர்களில் ஒருவனாய் இருந்துவிட்டுப் போவதில் எனக்கு எந்த ஆட்சேபணையுமில்லை’ என்பதை நிறுவவே அவள் பெரிதும் முயற்சி செய்தாள். இதை நான் எளிதில் கண்டுபிடித்து விடுவேன் என்பது அவளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இருந்துமென்ன?அவளுக்கு தேவைப்படுவதெல்லாம் விளையாட்டின் போதை மட்டுமே. மற்றபடி மனம் சொல்லும் புனித விதிகளையெல்லாம் அவள் சட்டை செய்வதே கிடையாது. இவ்வளவு தெரிந்தும் நானேன் அவளது போதைக்கு பலியாக விரும்புகிறேன்? ஒருவேளை எனக்கும் இந்த விளையாட்டு பிடித்திருக்கலாம். ஆனால் எங்களுக்குள் நிகழும் இந்த நாடகத்தில், நான் வெளிப்படுத்தும் அதீத ஜாக்கிரதையுணர்வும் அதன் பயனாய் எனக்கு அணிவிக்கப்படும் நாடகப் பூச்சும் என்னை நானல்லாத ஒன்றாகக் காட்டிய செயற்கைத்தன்மையும் அவளிடம் அறவேயில்லை என்பது பிரத்யேகமான கவனத்திற்குரியது. இயல்பிலேயே அவள் ஒரு அற்புதமான நாடகக்காரி.
நேற்று திவ்யா முகநூலில் ஒரு நிழற்படத்தைப் பகிர்ந்திருந்தாள். அந்தப் படத்தில் விசேஷமாய் ஒரு மயிருமில்லை. அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கிராபிக்ஸ் இதயத்தில் கத்தி சொருகப்பட்டிருக்க, அதற்கு குறுக்கு வாக்கில் நீ என்னைக் காதலிக்காமல் இருக்கலாம்; ஆனால் நான் உன்னை காதலிக்கக்கூடாது என்று சொல்லும் உரிமை உனக்கு கிடையாது” என்ற வாசகம் அடர்சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. இது போன்ற காதல் உணர்ச்சி ததும்பும் அடர்சிவப்பு படங்கள் இணையத்தில் எக்கச்சக்கமாக கொட்டிக் கிடக்கின்றன. நானும்கூட அவற்றை ஏராளமாகப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதை திவ்யா பகிரவும் எனக்கு கை கால்களில் நடுக்கம் எடுத்து கோபம் தலைக்கேறியது.(அதற்கு முந்தைய தினம் மோசஸ், தான் திவ்யாவுடன் கொண்டிருந்த உறவை முற்றிலுமாக முறித்து கொண்டுவிட்டதாக என்னிடம் சொல்லியிருந்தான். இந்த கருமாந்திரம் பிடித்தவனுக்கு திவ்யா பற்றிய எந்த விஷயமாக இருந்தாலும் அதை முதலில் என்னிடம் சொல்வதே பிழைப்பாய்ப் போய்விட்டது. இவனைச் செருப்பால் அடித்தால் எல்லாம் சரியாகிவிடும்)
இருள் மூழ்கடித்த நிலத்தில் தனியனாகச் சிக்கிக்கொண்டு அர்த்தமற்ற நினைவுகளின் பேய்க் காற்றெழுப்பும் பீதியில் ஒடுங்கிப் போய் நின்று கொண்டிருந்தேன். இரவுகளுக்காய் ஏங்கித் தவித்த நாட்களும் இருளில் நான் என்னுள் கண்டடைந்த ஆதிமனிதனின் வன்மமும் இப்பொழுது கவனத்திற்கு வந்து உடலைச் சிலிர்க்கச் செய்தன.
பைக் எங்கே போனதெனத் தெரியவில்லை. நான் தரையில் மண்டியிட்டபடி கிடந்தேன். கை கால்களில் எல்லாம் சோர்வு அப்பியிருந்தது. எனக்கு நேரெதிர் திசையில் வெளிச்சக் கீற்று சின்னதாய்த் தளிர்விட்டு மெலிதாய் படர்வதை கவனித்தேன். இருட் பெருவெளியில் அந்த சின்ன ஒளியை மிகத் தெளிவாய் பார்க்க முடிந்தது. அவ்வொளிக் கீற்றுக்குப் பின்னே நிழலுருவாய் திவ்யாவை கண்டு துணுக்குற்றேன். அவள் தனது கைகளில் பற்றியிருந்த மஞ்சள் மலர் ஒளி வீசி சுடர்ந்து கொண்டிருந்தது. கொஞ்ச கொஞ்சமாய் படர்ந்த ஒளிக்கதிர்கள் அவள் என்னை நோக்கி நடந்து வந்த பாதையெங்கும் நிறைந்து இருளைத் துடைத்து நிறங்களின் பிரவாகமாய் காற்றில் வழிந்தன.சாலையின் இருபுறங்களிலுமிருந்த கட்டிடங்களின் மேல் ஒளி படியவும், அவை சத்தமேயெழுப்பாது காற்றில் மணல் துகள் கரைந்து போவதைப் போல் பொடியாகி மறைந்தன.அவ்விடங்களில் இப்பொழுது பேரிரைச்சலோடு ஆகப்பெரும் விருட்சங்களும், புல் செடி தழைகளும் பூமியைப் பிளந்துக் கொண்டு முளைக்க காற்றில் நிலம் அதிர்ந்தசைவது தெரிகிறது. நான் திக்பிரமை பிடித்தவனைப் போல் எழுந்து என் கண்ணில் விரிந்த அற்புதத்தை உள்வாங்க சிரமப்பட்ட வண்ணம் பொருளற்று விழித்துக் கொண்டிருந்தேன்.பெருங்கானகமொன்று என் முன்னே உருப்பெற்று தன் பச்சை வாசத்தைப் பரப்பிய பொழுதில் திவ்யா பற்றியிருந்த மலரிலிருந்து வெளிப்பட்ட ஒளியலைகள் கானகத்தின் மேல் வண்ணக் கீற்றுகளைத் தெறிக்கச் செய்து மாய நர்த்தனங்கள் புரிந்தன. திவ்யாவிற்கும் எனக்குமிடையே இருந்த இடைவெளி குறைந்துகொண்டே வர, தடித்துச் செழித்த பெருங்கிளைகளும் முழங்காலுயர புல்செடிகளும் வளைந்து மடிந்து அவளுக்காக வழியமைத்து விலகுகின்றன. அரியணை நோக்கி நடக்கும் இளவரசியென காட்சியளிக்கிறாள் திவ்யா.அடர்த்தியான நிழலின் குளிர்ச்சியும் ஈர மண் ஸ்பரிசமும் கிறங்க செய்கின்றன.
திவ்யாவின் கையிலிருந்த மலரைத் தவிர காட்டின் வெளியில் வேறெந்த பூவும் பூக்கவேயில்லையென்பதையும் அவ்வொற்றை மலரிலிருந்தே பிறப்பின் பரிசுத்த வாடை ஊற்றெடுத்து பரவியதுடன் வண்ணத்திரட்சியில் நிலம் மூழ்கவும் அதுவே காரணமாயிருக்கிறது என்பதையும் நான் அறிந்து ஆச்சரியமடைந்த நொடியில்.. திவ்யா என்னருகில் வந்து விட்டிருந்தாள். அவளை ரொம்பவும் அழகாய் காட்டும் பிங்க் நிறச் சுடிதார் அணிந்திருந்தாள். கள்ளம் நிறைந்த கண்களோடும் அதற்குத் துளியும் பொருந்தாத உதட்டில் புன்னகையோடும் நிற்கும் அவளைச் சுற்றி ஒரு அரூப வலை விரிக்கப்பட்டிருக்கிறது  அதில் தவறியும் விழுந்துவிடக் கூடாது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
இந்தச் சூழலை எப்படி கையாள்வதெனத் தெரியவில்லை. அமைதியாக நிற்கிறேன். என் கையைப் பிடித்து அவளுக்கு மிக அருகில் என்னை வரச் செய்கிறாள். அந்த மஞ்சள் மலருக்குள் உற்று நோக்கும்படி சைகையினால் உத்தரவிடுகிறாள். நானும் அப்படியே செய்கிறேன். பூவிதழ்கள் விலக்கி மகரந்தங்களைக் கடந்து பார்க்கையில்,காட்சிகள் நீர்பிம்பங்களெனத் தெரிகின்றன. அங்குமொரு கானகம். அதில் கையில் மலரை ஏந்தியபடி பிங்க் சுடிதாரணிந்து நிற்கும் திவ்யாவிற்கு அருகில் நான்.எனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. நிஜத்தில் நடப்பது அப்படியே அப்பூவில் பிரதிபலிப்பதாய் நம்பினேன். அபூர்வ கானம் பாடியபடி எங்களைக் கடந்து போன பெயர் தெரியாத பறவைகூட அம்மலருக்குள் தெரிந்தது. இன்னும் பார் என்று சமிக்ஞை செய்தாள். ஏதேதோ பேசியபின் கண நேரம் நீண்ட அமைதியைத் தொடர்ந்து மலருக்குள் இருந்த நான் மலருக்குள் இருந்த திவ்யாவை பற்றியணைத்து அவளது இதழ்களில் முத்தம் கொடுக்கிறேன். என் அணைப்பில் அவள் தவறவிட்ட மலர் கீழே விழவும், அதில் ஒளி குன்றுகிறது. அவளது நீளமான கைகளைத் துருத்திக் கொண்டிருக்கும் சிறிய விரல்கள் என் தலையைக் கோதுகின்றன.ஆடைகளை அவிழ்த்து உயிர்களின் மூலமான கானகத்தினுள்ளே நிர்வாணிகளாகிறோம்.அவளது சிறிய முலைகளின் காம்புகள் புடைத்து நிற்கின்றன. காதல்,வலி,. கண்ணீர், நம்பிக்கை, நம்பிக்கையின்மை, புரிதல், புரிதலின்மை, அன்பு, அன்பின்மை நிஜம், பொய், ஒளி, திரவம், காற்று, கோபம், அகங்காரம், சொற்கள், நினைவுகள், ஏமாற்றங்கள், சந்தோஷங்கள், சொன்ன பிரியங்கள், சொல்லாத ப்ரியங்கள், வெளிக்காட்டிய வன்மம், உள்ளுக்குள் நாறும் வன்மம்… யாவும் மறந்து வாழ்வின் ஒரே நாட்டமாய் அவளை ஆரத் தழுவிக்கொள்ளலானேன்.
நிஜத்தில் எனக்கு பயமாய் இருந்தது.அவளது இருப்பும் நான் கண்ட காட்சியும் ஒரு சேர என்னைக் குழப்பி வாட்டின. பூவிலிருந்து கண்களை விலக்கி, அருகிலிருந்த அவளைப் பார்த்தேன். கைகளை மார்போடு சேர்த்துக் கட்டியிருந்தாள். அந்த மலர் அவளது வலக்கையிலிருந்தது. ஏளனமா பரிதாபமா என்று அடையாளங்காண முடியாத உணர்ச்சியலை அவள் கண்களில் அசைந்தாடியது. ஏதோ சொல்ல வாயெடுத்து பின்னர் வேண்டாமென நினைத்துக் கொண்டேன். அவள் பலமாய் சிரித்தாள். கானகமெங்கும் எதிரொலித்த அச்சிரிப்பு பரிகாசமாய்ப் பெருத்து மலைப்பாம்பென என்னைச் சுற்றி வளைத்தது. இரு நிமிடங்களுக்கு விடாது சிரித்துவிட்டு பின்னர் நிலமதிர கோபமாய் அடிக்குரலில் இப்படிச் சொன்னாள் “நீ இன்னும் அதே கோழைதான்”. எனக்கும் ஆத்திரம் பொங்கியது. ஆனால் அதை எப்படி வெளிக்கொணர்வதெனப் புரியவில்லை. தாளமாட்டாத ஆற்றாமையில் உடல் நடுங்க விரல் நகங்களைக் கடிக்கத் துவங்கினேன். அவள் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள். என்னையும் மீறி என்னிலிருந்து வெளிப்பட்ட ஆக்ரோஷமான குரலில் கத்தினேன் “ச்சீ..போடி தெவடியாமுண்ட..”
என்ன நடந்தது ஏது நடந்தது என்பதெல்லாம் ஞாபகத்தில் இல்லை. சாலையோரத்தில் கட்டிட வேலைகளுக்காய் குவிக்கப்பட்டிருந்த ஜல்லி கற்களுக்கும்,செங்கற்களுக்குமிடையே மயக்கமாகி விழுந்திருந்தேன். எனக்கு மிக அருகே பை ஸ்டாண்டிடப்பட்டிருந்தது. அங்கே வேலை செய்துகொண்டிருந்த வட இந்தியரொருவர் என் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார். சாலையின் பக்கங்களில் கட்டிடங்களெல்லாம் அப்படியே முன்னிருந்த மாதிரியே சோகையாய் இருந்தன. நினைவு திரும்பிய வேளையில், காலில் சுருக்கென்று என்னவோ குத்தி வலி ஏற்படுத்தியது. காய்ந்து கருத்த இதழ்களை உடைய பூவின் காம்பு முள் வலது கால் பெருவிரலில் சொருகிக் கொண்டிருப்பதைக் கண்டேன். முள்ளோடு சேர்த்து பூவையையும் எடுக்க, அதன் இதழ்கள் உதிர்ந்து தூளாகின. முள் ஆழமாக இறங்கியிருக்க வேண்டும். பயங்கரமாய் வலிக்கிறது.
நன்றி : சொல்வனம்


1 comment:

மதி said...

மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் .. ஒன்றிப் படித்தேன் .. ஒருதலைக் காதல் உருவாக்கும் குழப்பங்களும், ரகசிய வன்மங்களும், insecurity (தமிழ் வார்த்தை என்ன?) அற்புதமாக வெளிவந்திருக்கின்றன. மிகவும் ரசித்த வரிகள் //அவளுடைய ஒவ்வொரு செய்கையிலும் நான் அதைக் கண்டிருக்கிறேன். “நீ என்னைக் காதலிக்கிறாய்தானே.ஆனால் பார் நான் அது தெரியாதது போல் எவ்வளவு இயல்பாய் இருக்கிறேன்” என்ற ஏளனம் அவளது உடல்மொழியில் அப்பட்டமாக வெளிப்படும். //

Post a Comment