Sunday, November 28, 2010

சாம்பல் நிலவு


அன்றைய இரவு
ஒரு நிகழ்வினை
சாட்சியாக்கிக் கொண்டிருந்தது
கோப்பைகளில் நிரம்பி
வழிந்தோடிய மதுவில்
நம்முடைய முகங்கள்
சிதறி உடைந்தன

திரவமாய் ஊர்ந்து வந்த
பழைய நினைவுகளின்
அத்தனை குற்றச்சாட்டுகளும்
போதையாய் நூல்போல் திரிய
நாம் யாவற்றையும்
மன்னிக்க தயாரானோம்

அப்பொழுது ஒரு வயலின் இசைக்கப்பட்டது
உடன் ஒரு அழுகை குரலும்
அது நீயாகவோ அல்லது
நானாகவோ இருக்கக்கூடும்

மீண்டும் கோப்பைகள் நிரப்பப்பட்டன
ஒரு துறவியின் குரூரத்தோடும்
ஒரு கோமாளியின் வன்மத்தோடும்
நான் உன் கண்களை சந்திக்கிறேன்

நீயும் அப்படியே என்னை பார்க்கிறாய்

மூச்சழுத்த உயிரின் பாதையில்
நாம் ஒன்றாய் பயணிக்கிறோம்
ஈரம் வற்றிபோன உன் இதழ்களிலிருந்து
காமத்தின் கொடுநஞ்சை நான் உறிஞ்செடுக்கிறேன்

உன் செழித்த முலைகளில்
நான் முகம் புதைக்க
என் கண்ணீரின் வெம்மை
உன் வயிற்றில் படர்கிறது

இருட்டிற்குள் தொலைந்து
வெகுதூரம் சென்று
மீண்டும் பேய்க்கூச்சல் ஒலிக்கும்
இருளையே கண்டடைகிறோம்
 
புணர்ச்சிக்கு பின் முத்தம் கொடுக்க
நீ நெருங்குகையில்
என் பலம் மட்டும் கொண்டு
உன் கண்ணத்தில் ஓங்கி அறைகிறேன்
வெறிகொண்டெழும் நீ
என் முகத்தில் எட்டி உதைக்கிறாய்

இரண்டு ராட்சஸ விலங்குகள்
வனமதிர மூர்க்கமாய் மோதிக் கொள்ள
அவற்றிற்கு சாராயத்தை
ஊற்றிக்கொடுத்து
பின் வேட்டையாடி சதையறுக்கிறான் கடவுள்

Saturday, November 27, 2010

கொஞ்சம் கிறுக்கல்

ஒரு நிராதரவு
ஒரு நிசப்தம்
ஒரு புறக்கணிப்பு
ஒரு கேள்வி
எல்லோரும் கடந்துப் போய்விட்டார்கள்.
*****
அங்கு தனியே பேசிக்கொண்டிருக்கிறது
ஒரு இரவு
அங்கு தனியே வரைந்துக்கொண்டிருக்கிறது
ஒரு சுவர்
அங்கு தனியே அழுதுக்கொண்டிருக்கிறது
ஒரு பிரேதம்
*****
கனவின் பகலில்
இரவு விழித்துக்கொண்டிருக்கிறது
துர்கனவாக...
*****
இதுவரை ஒருபோதும்
நான் அப்படி அழுததில்லை
இனியும் அழபோவதில்லை
இன்றுமட்டும் அழுதுவிட்டுப் போகிறேன்
உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள்
*****
சின்னதாய் ஒரு சிறகு
சின்னதாய் ஒரு வானம்
நடந்து செல்ல மிகப்பெரிய பூமி
*****
நினைக்கச் சொல்லும் உறவுகளை
மறந்துவிடவே நான் விரும்புகிறேன்.
குறைந்தபட்சம்,
மறந்துவிட்டதாக நம்புவதை...
*****
எனக்கென ஒரு போர்
எனக்கென ஒரு நிழல்
எனக்கென ஒரு காதல்
எனக்கென ஒரு காகிதம்
எனக்கென ஒரு பைத்தியக்கார விடுதி
*****
நானும் அதை நம்பினேன்
நீயும் அதையே வலியுறுத்தினாய்
ஆனால் யாரோ பொய்யாக்கிவிட்டார்கள்
அலைகள் கடலை வெறுக்கின்றன
*****
ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவேன்டும்
சேமித்து வைக்க பின்னர்
கிழித்து எறிய...
*****
நீ என்னைப் பற்றி
அவ்வளவு பொய்கள்
 சொல்லியிருக்க வேண்டியதில்லை
எனது உண்மைகள்
அதைவிடவும் கசப்பானவை
*****
                                                                                                              -துரோணா

Tuesday, November 16, 2010

இரை


வலி வேண்டும் கோரப் பசியினை
தன் நாவினில் படரவிட்ட, ஓநாய்கள்
இரத்தவாடை கண்டு
உங்களை துரத்துகின்றன

நீங்கள் சிங்கமோ சிறுத்தையோ கிடையாது
எனவே ஓடுவதை தவிர உங்களுக்கு
வேறெந்த வழியும் தோன்றுவதில்லை

அந்த ஓநாய்களுக்கு
எப்படி புரியவைப்பீர்கள்?
உங்களுக்கு கவிதையெழுத தெரியும் என்பதை
ஓநாய்களுக்கு காகிதம் தேவையில்லை
ஏனெனில் அவற்றில் இரத்தம் இருப்பதில்லை

அந்த ஓநாய்களுக்கு
எப்படி புரியவைப்பீர்கள்?
ஆதாரம் வேறு நிகழ்வு வேறு என்பதை
ஓநாய்களுக்கு சாட்சியங்கள் தேவையில்லை
ஏனெனில் அவை ஆய்வாளர்களாக இருப்பதில்லை

ஓநாய்கள் ஒன்றும் தீர்ப்பு எழுதும் நீதிபதிகள் அல்ல
அவை தூக்குக் கயிறுகள்...
ஓநாய்கள் ஒன்றும் இயேசுவின் சீடர்கள் அல்ல
அவை சிலுவைகள்.....

தனது கூரிய நகங்களால்
உங்களது சதை நரம்புகளை
அறுத்தெறிய அவை அலைகின்றன

திடமான வாக்குறுதியின் அவநம்பிக்கையுடன்
புகைக்கும் அப்பாவின் கோபத்துடன்
ப்ரூட்டஸ் வாளின் சாபத்துடன்
பிறழ்வின் ஒழுங்கற்ற வார்த்தைகளுடன்
உங்கள் சாலையின் பாதையெங்கும்
பதிந்திருக்கின்றன அந்த ஓநாய்களின் கண்கள்.....

அதுவொரு கேள்வியென்றோ
அதுவொரு எதிர்பார்ப்பென்றோ
அதுவொரு உரிமையென்றோ
நீங்கள் நம்பிவிடாதீர்கள்....

அப்பொழுதென்று, மறந்துவிட்ட
பைபிளின் வசனங்களையோ
கீதையின் தத்துவங்களையோ
நினைவுபடுத்திக் கொண்டிருக்காதீர்கள்....

அந்த ஓநாய்களை பொருத்த மட்டில்
நீங்கள் பிரசங்கியோ\காரணியோ கிடையாது
வெறுமனே இரத்தம் கொண்டிருக்கும் இரை...
எனவே எழுந்து ஓடுங்கள்
அது கனவாய் இருப்பினும் பரவாயில்லை
ஓநாய்கள் உங்களை துரத்துகின்றன......

இரவின் காலம்

நம் நினைவுகள்
பயணித்த காடுகள் யாவற்றிலும்
ஒரு தீராத வெளிச்சம் இருந்தது
ஒரு எரிமலை திரவம் போல்
அது ,மெல்ல அசைந்து
பின் கரைந்து , காற்றினில்
நகரும் மழையின் சாரலில்
தன் வெப்பத்தினை பரப்பிய வேளையில்
நான் உன்னிடம் ஒரு உண்மையை 
சொல்லியிருக்க வேண்டும்
........அது 
முடிவற்ற இரவின் காலம்
                                                                                          -துரோணா

Thursday, November 4, 2010

சாத்தான் குகை

அந்த குகையின்
பாறைகளெங்கும் படர்ந்திருந்த
செடிகளின் வழியே பரவுகிறது
ஒரு பச்சை வாசம்

சின்னஞ்சிறு கற்களுக்கடியே
பதிந்திருந்த மணல் துகள்கள்
யாவற்றிலும் படிந்திருக்கிறது
ஒரு ஈர சாயம்

குகை வாயிலில்
மானின் கூரிய கொம்புகள்
மாட்டின் விலா எலும்பொன்றை
நீ குகையினுள்ளே கண்டெடுத்தாய்
மற்றொரு இடத்தில்
நரியின் அறுபட்ட வாலும்
காக்கையின் அலகும் ஒட்டிக்கிடந்தன
தரையினில் சிதறியிருக்கும்
புலியின் நகங்கள் வேறு
அவ்வப்போது நமது கால்களை  கிழிக்கின்றன

இத்தனை உயிரினங்களும்
சேர்ந்து வாழந்த அல்லது
மடிந்த அதிசயத்தை
நாம் பாதையெங்கும்
சிலாகித்து பேசிக்கொண்டே போகிறோம்

நமது கண்களில் சிக்காது
அந்த குகையின் சுவர்களில்
ஒளிந்துக்கொண்டிருக்கிறது
ஒரு இறந்த மனிதனின் கைரேகை
                                                                                                                         -துரோணா