Monday, March 26, 2012

அரசனின் கடல்நினைவுகள்


விதூஷகன் அதிகம் அறியப்படாத ஒரு எழுத்தாளர்.அவர் அதிகம் அறியப்படாமல் போனதற்குக் காரணம் அவர் அதிகம் எழுதாததுதான் என்பது என் கருத்து. அவர் ஒரே ஒரு நாவல்தான் எழுதினார். “அரசனின் கடல்நினைவுகள்” எனும் அந்த நாவலை எழுதி முடித்த நான்காம் நாள் மாரடைப்பு ஏற்பட்டு செத்துப் போய்விட்டார்.

பின் வருவது விதூஷகன் எழுதிய “அரசனின் கடல்நினைவுகள்” நாவலின் நாற்பத்தி யெட்டாவது அத்தியாயம்:


அரசன் அந்த பிரம்மாண்டமான குழியினை ஆழமான பார்வையில் நோக்கினான். கண்களின் எல்லையைத் தாண்டி விரிந்தது அந்தக் குழி.நூறடி ஆழம் ஐம்பதடி அகலம் என்கிற அளவில் கடற்கரையில் ஒரு குழி என்றால் அது எத்தனை பெரியது என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு பெரிய மரணக்கிணறை ஒத்திருந்தது அதன் வடிவம்.அந்தக் குழியைச் சுற்றிலும் முழங்கால் உயரத்திற்கு முட்கிளைகளால் வேலி போடப்பட்டிருந்தது.நெருக்கமாக வேயப்பட்டிருந்த அந்த வேலிக்குள் சின்ன எறும்புகூட நுழைந்துவிட முடியாது.வேலியின் நடுவே வாசல் போல் ஒரே ஒரு திறப்பு.குழிக்குள் இறங்குவதற்கு ஏதுவாக ஒரு நீளமான ஏணி அந்த திறப்பின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்தது.


அரசனுக்குப் பின்னே இராணுவத்தினர் சீராக அணிவகுத்து நின்றனர்.குழிக்குள் பெட்ரோல் ஊற்றப்படும் சத்தம் மழை பெய்வதைப் போல் இரைச்சலாகக் கேட்டது. அலைகளின் ஈரத்தோடு படர்ந்த கடற்காற்றை ஸ்பரிசித்த அரசன் பதற்றமடைந்தான். அவனது உடல் ஈரக்காற்றில் நடுக்கம் கண்டது.அதை மறைக்கும்பொருட்டு தனது கைகளை இறுக்கமாக்கிக்கொண்டான். மணலில் புதைந்தெழுந்த அவனது கால்கள் காற்றின் விசையில் தடுமாறின.கடற்காற்று இன்னும் வேகமெடுத்து வீசியது.


அரசன் ஆயாசத்தோடு தீக்குச்சியைக் கொளுத்தினான்.கடற்காற்றில் இரண்டு தீக்குச்சிகள் எரிந்த மாதிரியே அணைந்துபோயின.மூன்றாவது தீக்குச்சிதான் தீப்பந்தத்திற்கு உயிர் கொடுத்தது.சற்று நேரத்திற்கெல்லாம் நிறைய தீப்பந்தங்கள் தயாராகிவிட்டிருந்தன. குழியிலிருந்து முப்பதடி தூரம் தள்ளி,மரப்பலகைகளால் மேடை போல் அமைக்கப்பட்டு அதன் மேல் அரசனுக்கு சிம்மாசனம் போடப்பட்டிருந்தது. தீப்பந்தத்தை ஏற்றிய பின்னர் அரசன் தனது சிம்மாசனத்திற்கு சென்று அமர்ந்து கொண்டான்.கடலும் கடற்கரையும் அரசனின் காலடியில் இருப்பது போன்ற தோற்றம் உருவாகியது.அரசன் இராணுவத்தினரை நோக்கி சிநேகமாக கையசைக்கவும்,கரவொலிகள் எழும்பின.


தீப்பந்தங்களை ஏந்திய இருபது இராணுவ சிப்பாய்கள் ஏணிவழியே குழிக்குள் இறங்கினார்கள். முதல் ஆளாக குழிக்குள் இறங்கிய சிப்பாய் எண்:AS124 தனது வலது கையிலிருந்த தீப்பந்தத்தை விறகு குவியலுக்குள் வீசிவிட்டு இடது கையை வான் நோக்கி உயர்த்தி “ஹிரஸ்வானா ஜிகுலாதாத்”[எங்கள்தேசம் எங்களுக்கே] என்று அடிக்குரலில் கத்தினான். அவனைத் தொடர்ந்து வந்த பத்தொன்பது பேரும் அவனைப் போலவே தீப்பந்தத்தை வீசியெறிந்துவிட்டு “ஹிரஸ்வானா ஜிகுலாதாத்” என்று தொண்டை கிழிய கத்தினார்கள்.


தீப்பிடித்த விறகுகளிலிருந்து பரவிய அனல்காற்று தோலையே உருக்கியெடுக்கும் உஷ்ணத்தோடு பலமாக வீசியது.இருபது சிப்பாய்களும் ஜுரவேகத்தில் ஏணியேறி மேலே வந்தார்கள்.அரசன் தனது கைகளை அலட்சியமாகத் தட்டி பெருமிதமாக சிரித்தான்.நெருப்பு பலமாகப் பற்றிக்கொண்டு எரிந்தது.
   
நான்கு பச்சைக் கலர் இராணுவ டிரக்குகள் கடற்கரை மணலில் அலைகளை எழுப்பியபடி சீறிக்கொண்டு வருவது நெருப்பினூடே மங்கலாகத் தெரிந்தது. அரசனுக்கு நேரெதிர் திசையில் கரும்புகை பரவ தகித்துக்கொண்டிருந்த தீக்குழிக்குப் பின்னே கொஞ்ச தூரம் தள்ளி அவை நின்றுக்கொண்டன. டிரக்கினிலிருந்து இறங்கிய இராணுவ உயர்அதிகாரி எண்:AS-A4 அரசனின் முன்வந்து தலை குனிந்து “தீரஸ்கார் பரேல்”[மன்னர் வாழ்க] என்று பவ்யமாகச் சொல்லி அரசனுக்கு மரியாதை செலுத்தினான்.அரசன் வேலைகள் சீக்கிரம் ஆரம்பிக்கட்டும் என்று சைகையினாலேயே உத்தரவிட்டான்.


அரசனிடமிருந்து உத்தரவு கிடைக்கவும் நான்கு டிரக்குகளின் பின் கதவுகளும் சடுதியில் திறக்கப்பட்டன.அரசனின் பார்வை கதவுகளின் மேலேயே குத்திட்டிருந்தது. கதவுகள் திறக்கப்படவும்,ஒரே சீராக நின்றுகொண்டிருந்த டிரக்குகளிலிருந்து நூற்றுக்கணக்கான நிர்வாண பிணங்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக சரிந்து விழுந்தன.சீட்டடுக்குகள் கலைந்து விழுவதைப் போல் ஒன்றன்பின் ஒன்றாக ஒருசேர கவிழ்ந்து விழுந்த பால்பேதமற்ற அழுகல் பிணங்களின் சதைக்குவியல்களை அரசன் பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.நொடிப்பொழுதில் கடற்கரையே மிகப்பெரும் சவக்கிடங்கினைப் போலானது.


நாஜிகளால் கொலை செய்யப்பட்ட யூதர்களின் உடல்களை கண்டிருப்பீர்கள் தானே?அவற்றைப் போலவேதான் இருந்தன இந்தப் பிணங்களும்.கண்கள் இரண்டும் உள்ளே போய்,கன்னங்கள் ஒடுங்கியிருந்த சடலங்களில் எலும்புகளைக் கண்கூடாகப் பார்க்கமுடிந்தது.ஆண்களது உடல்களில் பிறப்புறுப்புகளைக் காணவில்லை. பிறப்புறுப்புகளை அறுத்து அவர்களைக் கொலை செய்திருக்க வேண்டும்.பெண்களது உடல்களில் அங்கங்கே தீக்காயங்கள் தென்பட்டன.அவர்களது பிறப்புறுப்புகளில் காய்ந்திடாத குருதியின் தடம் இருந்தது.இராணுவ உயரதிகாரி தனது சிப்பாய்களைத் துரிதப்படுத்தினார்.சிப்பாய்கள் பிணங்களை அள்ளி குப்பை பொறுக்கும் தள்ளு வன்டிகளில் போட்டு நிரப்பினார்கள்.இந்தப் பிழைப்பிற்கு மலம் அள்ளும் வேலை எவ்வளவோ தேவலாம் என சிப்பாய் எண்:AS057 மனதிற்குள்ளாக முனங்கினான். நூறு குப்பை வண்டிகளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பிணங்கள் பிதுங்கலாகத் திணிக்கப்பட்டன.


மேளங்கள் கொட்டப்பட,சங்குகள் முழங்குகின்றன.சிப்பாய்கள் பிணங்களைக் குப்பை வண்டிகளோடு சேர்த்து தூக்கி குழிக்குள் போடுகிறார்கள்.தேவ தூதர்களின் தலைவரான மிரிசியோ அரசனருகே சென்று சன்னமான குரலில் “நிரிஜ்விஹியே லிதி சேதா மியிரியோம்” [கடவுளுக்காவே நாம் இதை செய்கிறோம்] என சொல்கிறார். அரசன் அதை ஏற்றுக்கொள்ளும் பாவனையில் இமைகளை மெல்ல மூடித் திறக்கிறான்.மிரிசியோ சுருக்கங்கள் நிரம்பிய தனது நடுங்கும் கைகளை அரசனின் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்கிறார்.


கழுகுகளின் சிறகுகளைத் தாங்கிய வானம் அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. தீயில் விழுந்த பிணங்கள் கருகி சாம்பலாகின்றன.மேகம் போல் படரும் சாம்பல் நிற தீ ஜுவாலைகளைக் காணும் அரசன் குதூகலம் அடைகிறான்.


குழுமியிருந்த  இராணுவத்தினரின் யாவரும் கூட்டாக “ஹிரஸ்வானா ஜிகுலாதாத்” என்று முழக்கமிடுகிறார்கள்.கடலின் நிசப்தத்தை தகர்த்த கோஷம் சாத்தான்களின் குரலில் அவ்வளவு கொண்டாட்டமாக ஒலிக்கிறது.அரசனின் தலைமையில் பாடல்களின் பின்னணியோடு ஒரு கார்னிவல் போல் அது நடந்து முடிந்தது.
******


No comments:

Post a Comment