Saturday, October 6, 2012

அன்பின் மலர்கள்


 
 
யாரோ ஒருவரது கதையின்

 
எழுதப்படாத பக்கங்களிலிருந்து

 
தவறிவிழுந்த வயதான மனிதர் அவர்

 
எந்த புனைவிலும் 

 
முழுமையாய் சொல்லப்படாத 

 
ஒரு வாழ்க்கையோடு 

 
நம் நகரத்தின் தெருக்களில்

 
மெலிந்த நிழல்களின் ஊடே அவர்

 
அலைந்து கொண்டிருக்கிறார்

 
அவரது உடலில் அரிசி மண்டி வாடையடிக்கிறது

 
யாரிடம் கொடுப்பதென்று தெரியாமல்

 
பழைய செய்திதாளில் பொட்டலம் கட்டிய

 
தன் வாழ்க்கையை அழுத்தி பிடித்தபடி

 
ஜன்னலோர ரயில் 

 
இருக்கையில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்

 
கிட்னியில் கல் வளர்ந்திருக்கிறது

 
சர்க்கைரை நோயுடன் சேர்த்து

 
நேரத்திற்கு சாப்பிடாததால்

 
வயிறு வேறு புண்ணாகி போயிருக்கிறது

 
ரொம்ப நாட்களுக்கு முன்னர்

 
தன் வீட்டு மொட்டை மாடியில்

 
செங்கற்களினாலான பெரிய தொட்டியில்

 
அம்பாரமாய் மணல் கொட்டி

 
நிறைய ரோஜாப் பூக்கள் நட்டு வைத்திருந்தார்

 
எப்பொழுது பார்த்தாலும் 

 
மனைவியோடு சண்டைதான்

 
அவளுக்கு சமைக்க தெரியாது 

 
அவளுக்கு அறிவு கிடையாது 

 
ஒரு பெரிய சரிவின்முடிவில்

 
நடுத்தெருவில் நிற்க நேர்ந்தபோது

 
மனைவி மட்டும் உடனில்லையென்றால் 

 
என்னவாகியிருப்போம் 

 
சமைக்க தெரியாத அறிவே இல்லாத

 
மனைவியின் கருத்த கைகள்

 
தோளை பற்றுவதாக உணர்ந்தவர் 

 
அதிர்ந்து கண் விழித்தார்

 
ஆளற்ற ரயிலில் 

 
ப்ளாஸ்டிக் கவர்களும் 

 
காய்ந்த பழத் தோல்களும் அசைவற்றிருந்தன

 
எவ்வளவு காலங்கள் காத்திருந்தும்

 
தொட்டியில் 

 
ஒரு ரோஜாப்பூக்கூட மலரவேயில்லை

 
மகனை படிக்க வைத்தார்

 
மகனின் நண்பர்கள் 

 
அவரை அவனது தாத்தா என்று நினைத்தனர்

 
இருந்தும் மகனுக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும்

 
அது கடைசிவரையிலும் அவருக்கு தெரியவேயில்லை

 
அவர் நினைத்தார்

 
அவர் ஆசைப்பட்டார்

 
அவர் கனவுகண்டார்

 
எப்பொழுதேனும் நம் வாழ்க்கைக்குள்

 
நாம் நுழைந்துவிடுவோமென

 
ஆஸ்பத்திரி வீச்சம் மூச்சுமுட்ட

 
எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல்

 
அவர் கிளம்பி வந்துவிட்டார்

 
போன வாரத்தில் ஒருநாள் 

 
அவரது 72 வயது சின்னமாமா 

 
புற்றுநோயில் தொடையிடுக்கு சதையழுகிப்போக

 
ரணமும் வலியும் தாளாது

 
ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்

 
சுருங்கிய தசையின் மீதேறி 

 
ரத்தமாய் பாய்ந்து மறைந்தது ரயில்

 
தனக்கேன் புற்றுநோய் வராமல் போனது

 
என யோசித்தபடியே தண்டவாளத்தையொட்டி

 
நடந்துக் கொண்டிருக்கிறார் அவர்

 
இரண்டு பக்கங்களிலும் பெருகும் 

 
கூவம் நதியில் பூத்து குலுங்குகின்றன

 
அன்பின் நீல வண்ன ரோஜா மலர்கள்

 
 
 
நன்றி : http://solvanam.com/?p=21932




Tuesday, October 2, 2012

என் வானம் கடல்


போர்க்களத்தில் பிணங்களுக்கிடையே
தனித்திருந்த என்னை
இராணுவத்தினர் சிறைபிடித்து
கடலுக்குள் இழுத்துச் சென்றனர்
நடுக்கடலில் மிதந்துக்கொண்டிருக்கிறான் அரசன்
இராணுவச் சிப்பாயொருவனின்
பூட்ஸ் கால்களைப் பற்றிக்கொண்டழுத
பூர்வீக கடல் ஞாபகங்கள்
என் பிரக்ஞையை தொட்டு மீள்கின்றன
அரசனுக்கென்று யாருமில்லை
அவனிடம் இப்பொழுது மீதமிருப்பது
ஒருப்பிடி கடற்கரை மணல் மட்டுமே
கொலையுண்டவர்கள் யாவரும்
உயிர்பெற்று எழும்புகிறார்கள்
நிர்வாண பிணங்கள்
துப்பாக்கிகள் ஏந்தியபடியும்
கூர்வாட்கள் ஏந்தியபடியும்
புத்தகங்கள் ஏந்தியபடியும்
மதுகோப்பைகள் ஏந்தியபடியும்
பைத்தியம் போல் பிதற்றிக்கொண்டும்
வெறிபிடித்த மாதிரி சிரித்துக் கொண்டும்
போர்க்களத்தினில் அங்குமிங்கும்
அலைந்து திரிகின்றன
கடல் அரசனை நோக்கி நகர்ந்து வந்தது
நான் கடைசியில் அந்த முடிவையே தேர்ந்தெடுத்தேன்
மதுப்போத்தலில் மீதமிருந்த சாராயத்தை
ஒரே மூச்சில் குடித்து தீர்த்துவிட்டு
காலி போத்தலை கடலை நோக்கி
ஆக்ரோஷமாய் வீசியடிக்கிறான் அரசன்
சின்ன சின்னதாய் மீன்கள்
வானத்திலிருந்து பறந்து வந்து
கடலுக்குள் பாய்ந்து மறைகின்றன
கடல் அரசனை ஏற்றுக்கொண்டது
பேரலைகளால் கரையொதுக்கப்பட்ட
எனது பிணத்தின்மேல் புழுக்கள் நெளிகின்றன
அரசன் பறவையாகி கடலுக்குள் நீந்துகிறான்
என் வானம் கடல்

நன்றி: http://www.vallinam.com.my/issue45/poem1.html

திரும்புதல்-2



எதையோ நினைத்து
நடந்து வந்ததில்
கவனமேயில்லாமல்
இங்கு வந்து சேர்ந்து விட்டேன்
கிழிந்து கிடக்கும் புகைப்படமென
பகுதி பகுதியாய்
பிரிந்து கிடக்கிறது
இம்மணல் வெளி
விரிசல்களுக்கிடையே
சாம்பல் நிற மரங்கள்
கிளையசைத்து
காற்றெழுப்புகின்றன
பெருங்காற்று ஊளையிட
நான் செல்ல விரும்பும்
என் கனவின் நகரம்
கருப்பாய் பூமிக்குள் அமிழ்ந்து தொலைகிறது
எதற்காக
இங்கு வரவே கூடாது
என்று நினைத்தேனோ
இப்பொழுது அதற்காகவே
வந்தது போலாகிவிட்டது
ஒரு குழந்தை பலூன் வெடிப்பதை
முதல்முறையாக பார்ப்பதுபோல்
நான் என் வாழ்க்கை
உடைந்து தொங்குவதை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இனி
வேறுவழியில்லை
வந்த பாதை தெளிவாக ஞாபகமிருக்கிறது
திரும்பி போவதொன்றும்
சிரமமான காரியம் கிடையாது
நன்றி:http://solvanam.com/?p=21583

திரும்புதல்

பறவையின் அந்திகளைப் போன்றவையல்ல
என்னுடைய அந்திகள்
நான் திரும்பும் காலம் என்பது
கூடடைதலின் நினைவுகளற்றது
வந்தடையவேக் கூடாத
தற்கொலை விளிம்பிலிருந்து
கருப்பு சர்ப்பங்கள் பின்தொடர
நான் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்
கழுவியகற்ற முடியாத ரத்தம் போல்
என் நீளப்பாதைகளில்
இருள் மண்டிக் கிடக்கிறது
நன்றி:http://solvanam.com/?p=21583

இந்த வாழ்க்கை



வீட்டிலிருப்பவர்களுக்கு தெரியாமல்
கல்லூரி டி.சியை
பழைய புத்தகங்களுக்கடியே
ஒளித்து வைத்துவிட்டு
மின்விசிறியில் புடவையை சுற்றுகிறான்
அலைபேசி திரையில்
பாதரசமென மிண்ணும்
கண்ணீர்த் துளியை
பொருட்படுத்தாது
குறுஞ்செய்தியை வார்த்தை வார்த்தையாக
வாசித்து கொண்டிருக்கிறாள்
‘உன்னை நம்பித்தானே
எல்லாமே இருக்கு
அப்புறம் அந்த நம்பிக்கையையே
கெடுத்தா எப்படிப்பா?”
மகனின் முகத்தை பார்க்காமல்
ஒட்டடை படிந்த சுவரை
பார்த்து பேசுகிறார்
இன்று என்னக் கிழமையென்று
யோசித்துக்கொண்டிருந்தவள்
அடுக்களைக்குள் புகுந்துவிட்ட
பூனையை பார்த்ததும்
கையிலிருந்து கரண்டியை
வேகமாய் தூக்கியடிக்கிறாள்
தெருவிளக்கை மொய்க்கும்
ஈசல்களை போல்
நூறு நூறாய்
சேர்ந்தும்
பிரிந்தும்
இந்த வாழ்க்கை

நன்றி:http://solvanam.com/?p=21583