Friday, February 8, 2013

கவிதையைக் கொலை செய்த பைத்தியக்காரன்


நவீன தமிழ்க் கவிதைஎன்றாலே ஏதோ பேய் பிசாசு என்பதுப்போல் பயந்து ஓடும் நிலை இன்றைக்கு ரொம்பவே சகஜமாகிவிட்டிருக்கிறது. கவிதைகளை ஒரு பொது வாசகன் சீண்டியாவது பார்க்கிறானா என்று கேட்டால் அதற்கு தீர்மானமாக எந்த பதிலும் சொல்லமுடியாது என்பதே நிதர்சனம். புனைக்கதைகளின் மீது பெரும் ஈடுபாடுடைய பலரும்கூட கவிதைகள் பக்கம் மழைக்கும் ஒதுங்காதிருப்பதை நான் நிறைய தடவை கவனித்திருக்கிறேன். வாசக பரப்பு மிகக் குறைவாக இருப்பது நவீனக் கவிதையுலகின் முன்னிருக்கும் ஒரு முக்கியமான சவால்.இதனோடு சேர்த்து கவிதைகள் குறித்த குழப்பங்கள் வேறு நாளுக்கு நாள்அதிகரித்த வண்ணமிருக்கின்றன. உண்மையான கவிதைக்கும் அதுபோன்ற பாவனைக்குமான வேறுபாட்டை கலைந்தகற்றுவதே பெரிய சிக்கலாகவும் சாகசமாகவும் மாறிவிட்டது.இந்த விஷயங்கள் யாவுமே ஒரு ஆரம்பநிலை   கவிதை வாசகன் என்கிற வகையில் என்னை அயர்ச்சியுறவே செய்கின்றன.இதுக் குறித்த தீவிரமான பரிசீலனைகளுக்கு இப்பொழுது மிகப்பெரிய அவசியம் உருவாகியிருக்கிறது.இவற்றை சரி செய்வதன் வழியேதான் நவீன கவிதைக்கு நிறையவாசகர்களை கொண்டு வரமுடியும்.


இதெல்லாம் ஒருபக்கம்இருந்தாலும் கவிதைவாசிப்பு என்பது என்றைக்குமே மனதுக்கு மிக நெருக்கமான அனுபவமாகவே இருக்கிறது.சமீபத்தில் இசையின்சிவாஜிகணேசனின் முத்தங்கள்தொகுப்பை வாசித்தது அத்தகையயொரு நெருக்கத்தை திரும்பவுமொரு முறை ஆழமாய் உணர வழிசெய்தது. இத்தொகுப்பை பொருத்த வரை,இசை கவிதை என்கிற வடிவத்தின் மீதுஎடுத்துக் கொண்டிருக்கும் அசாத்தியமான சுதந்திரத்தை நான் ஆச்சரியத்தோடே பார்க்கிறேன்.அந்தஅளவில்அவர்அடைந்திருக்கும் வெற்றியும் அதிகம் சந்தோஷம் தருகிறது.

இசையின் கவிதைகள் இறுக்கமற்றிருக்கின்றன.பல சமயங்களில் நேரடி உணர்ச்சிகளையே எந்தபூடகமும் இன்றி நிதர்சனமாய் பேசுகின்றன. அவரே முன்னுரையில் இப்படித்தான் எழுதுகிறார்

“..நீங்களும்அரைகுறையாக டி.வி பார்த்துக்கொண்டோ,குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டோ இதைப் படிக்கலாம்..”.

உண்மையில் அவரதுகவிதைகளின் ஆன்மாவே இந்த எளிமையிலும், இயல்பாகவே அவருள்ளிருக்கும் பகடியுணர்விலும்தான் இருக்கிறது. கவிதையில் பகடியை அனுமதிப்பதென்பது கயிற்றில் நடப்பது மாதிரிதான்.கொஞ்சம் தப்பினால்கூட பயங்கர சொதப்பலாகிவிடும். ஆனால் தனது கூர்மையான நுண்ணுணர்வினால் இதை எளிதில் கடந்துவிடுகிறார் இசை.

கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதுஎன்ற கவிதை நமக்கு அதிகம் பழக்கமான முறையிலேயே தொடங்கி பரிச்சயமான வடிவத்தோடே இயங்குகிறது என்றாலும் அது முடிவுறும் தருணத்தில் முற்றிலும் புதிதாய் வேறொரு உருவம் கொள்வதற்கு முக்கியமான காரணம் இசையின் பரிகாசம்,சரியாக சொல்லவேண்டும் என்றால் நக்கல்.

“…இன்னும் கொஞ்சம் எரிகணைகள் வீழட்டும்
இன்னும் கொஞ்சம் ஓலங்கள் கூடட்டும்
பயப்படாதே சிறு மந்தையே!
கர்த்தர் On the way”

இந்த நக்கலும்,ஏளனமும் அறச்சீற்றத்தின் வெளிப்பாடாக இருப்பதை நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டும்.இசையின் சீற்றம் வன்முறையில் இல்லை.அது எள்ளலாகவும் அர்த்தமற்ற சிரிப்பாகவுமே வழிந்தோடுகிறது.கண்ணீரைவிட கனமானதொரு சிரிப்பு.

மதிப்பீடுகள் வீழ்ந்துக் கொண்டிருக்கும் நம் காலத்தை ஒரு படைப்பாளி எப்படி எதிர்கொள்வது? அவன் முன் என்னென்ன தேர்வுகள் இருக்கின்றன?எக்கச்சக்கமான தெளிவின்மைகளாலும் தீராத வெறுமையினாலும் இருண்டுப் போன வாழ்க்கையை என்ன செய்வது உயிர்பிப்பது? இப்படிநீண்டுக் கொண்டே போகும் நூற்றுக்கணக்கான பதிலற்ற கேள்விகள் ஒரு கட்டத்திற்கு மேல் பயங்கரமாய் சலிப்பேற்றிவிட, இசை அவற்றையெல்லாம் புறங்கையால் தள்ளிவிட்டு போங்கடா புண்ணாக்குகளா என்று பெரிதாய் ஒரு சிரிப்பு சிரித்து பிச்சைக்காரத் துறவியைப் போல் நம்மை தாண்டி நடந்துப் போய்க் கொண்டிருக்கிறார். இதனாலேயே அவரது கவிதைகளில் விழுமியங்கள் உடைகின்றன, புனிதங்கள் சிதறுகின்றன. மிக தைரியமாககாதுவலியாகிய நீஎன்று ஊடல் கவிதை எழுதமுடிகிறது.

இசையின் இரண்டு குறுங்கவிதைகளை இங்கு உதாரணங்களாய் சுட்டுவது அவரது கவிதைகளின் ஆதார இயல்பை புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும். தன்னிரக்கத்தின் ரணத்தையும் இயலாமையையும் வெற்று புன்னகையாய் உருமாற்றும் கவிதையின் ரசவாதத்தை இவற்றில் தெளிவாய் கண்டுணரலாம்.

ராஜகிரீடம்
உன் சிரசில் பொருந்தாதற்கு
யார் என்ன செய்ய முடியும் நண்பா
இந்த வாயிற்கோப்பன் உடையில்
நீ எவ்வளவு மிடுக்குத் தெரியுமா” (ராஜகிரீடம்…)

இரட்டை வாழ்க்கைவாழ்கிறாய்
எனக் கடிந்துகொள்கிறாயே
நானென்ன அவ்வளவு நீதிமானா?
அடி தோழி!நான் 999 வாழ்க்கை வாழ்கிறேன்” (999 வாழ்க்கை)

இசையின் கவித்துவ பிரக்ஞை, அவரது கவிதைகளின் தலைப்புகளிலேயே வெளிப்பட்டுவிடுகிறது,“நீ உன் முத்தத்தை உதட்டிற்கு கொண்டுவா”,“என் பொறாமையை அவிழ்த்துவிட போகிறேன்”, “அந்த பசி நன்கு வறுக்கப்பட்ட கோழி இறைச்சியைப்போல் இருக்கிறதுஎன்று வாசிக்கும்போதே நமக்குள் ஏராளமான உணர்ச்சியலைகள் நுரைப் பொங்கியெழுந்து மனதைவிடாது அறைய தொடங்கிவிடுகின்றன. உடன் இசை தனது கவிதைகளில் உண்டாக்கும் வித்தியாசமான சித்திரங்கள் அவரது கவிதைகளை புத்துணர்ச்சியோடு இயங்கச் செய்து, வாசிப்பு அலுப்படையாதபடிக்கு பார்த்துக் கொள்கின்றன.

இந்த வாழ்வு தாறுமாறானபீட்டில் பாடப்படும்\\ மோசமான பாடல்எனத் தொடங்கும் கவிதை-குட்டிகுட்டியாக சிலபிரமாதமான வாழ்க்கைகள்- “நானும் ஆண்ட்ரியாவும்\\கடவுளாகிக் கொண்டிருக்கையில்என்று மேலெழும்போது அநிச்சையாகவே உன்மத்தம் நோக்கி நகர்ந்து விடுகிறது. இந்தகவிதையைப் போலவே இந்த முறை சுவர்னலதா சரியாக பாடவில்லைஎன்ற கவிதையின் வடிவமும் மிக இயல்பான படிமங்களினாலேயே உக்கிரம் அடைகிறது.   

பகடியாக மட்டுமில்லாது தீவிரமான வலியாக வெளிப்படும் உணர்ச்சிகளும் இசையின் கவிதைகளில் இடம்பெற்றே இருக்கின்றன.

திடீரென பீடித்துக்கொள்ளும் மனச்சோர்வு
ஒன்பதாவது சுயமைதுனத்தில்
இரத்தமாக வெளியேறுகிறது.
பிறகு நினைவும் இல்லை.
சோர்வும் இல்லை.” (திடீரென பீடித்துக் கொள்ளும் மனச்சோர்வு)

இந்த நகரத்தில் ஸ்கூட்டிகளுக்குப் பாதுகாப்பில்லை.
நிறுத்திவிட்டு எங்கேயும் செல்ல முடிவதில்லை.
திரும்பி வந்து பார்த்தால்
சீட் கவரில் விந்துத் திட்டுக்கள்” (ஸ்கூட்டிகள் மிதக்கும் கனா)

தொடர்ந்து பரிசோதனைகளாய் செய்யும்போது சில கவிதைகள் போதாமையினால் தோல்வியில் முடிவதை தவிர்க்க முடியாது. அது மாதிரியான கவிதைகள் இந்ததொகுப்பிலும் இருக்கவே செய்கின்றன. “கலைத்தன்மை மிளிரும் வீடுஅத்தகையயொரு  கவிதை. ஆனால் இந்த கவிதையில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்றிருக்கிறது. தொடக்கத்தில் இது எதார்த்த தளத்தில் நிகழும்போது தன்னளவில் கொண்டிருக்கும் உத்வேகம் முடிவில் கற்பனைத் தளத்திற்கு (சொற்களாலான மாளிகை) நகரும்போது மொண்ணையாகிவிடுகிறது.ஆனால் நான் முன்னரே  சொன்னதுப் போல் இது தவிர்க்க முடியாத இயல்பு.இந்த போதாமையும் சேரும்போதுதான் இசையின் கவிமனம் பூரணம் அடைகிறது.

கடைசியாக, இசையின் கவிதைகளில் காணக்கிடைக்கும் கொண்டாட்டம் என்பது நவீனக்கவிதைகளில் மிகவும் அரிதாகவே தென்படக்கூடியது. “நான்குரங்கு”(ஆனந்ததாண்டவமாடும் பைத்தியகார குரங்கை அள்ளிஅள்ளிமுத்தமிட ஆசையாயிருக்கிறது) “மதனதாண்டவம்ஆகிய கவிதைகளை களிப்பு முற்றிய குதியாட்டம் என்றே சொல்லவேண்டும். எல்லாக் கவலைகளையும் கஷ்டங்களையும் மறந்து வெறிபிடித்து உடலே களிப்பில் மூழ்க பேயாட்டம் ஆடுவதே இசையின் கவிதைகள் வழங்கும் தரிசனம். அந்தவகையில் இந்த தொகுப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்த கவிதையும் நவீனக்கவிதை மொழியில் ஒருசாதனையுமானகுத்துப் பாட்டின் அனுபூதிநிலைகவிதையை இங்கே பகிர்ந்துக் கொள்ளும் சந்தோஷத்தோடு  இசைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறேன்.

குத்துப்பாட்டின் அனுபூதிநிலை

இந்த வீட்டின் ஜன்னல்களை மூடினேன்.
கதவுகளை சாத்தினேன்
மறவாமல் இவ்வுலகை வெளியே தள்ளித் தாழிட்டேன்
இசை துவங்கியது
பேழையிலிருந்து வெளிப்பட்ட குரலுருவும் நானும்
கைகோர்த்து ஆடத் துவங்கினோம்.
ஆட்டம்
குதியாட்டம்
பேயாட்டம்

மொழ மொழன்னுயம்மா யம்மா
மொழ மொழன்னு யம்மா யம்மா…”

தலைவழி பீறிட்டு
விண்முட்டி அடிக்குதொரு நீரூற்று

தடதடன்னு நடக்குறா
மடமடன்னு சிரிக்குறா
வெடவெடன்னு இருக்குறா
கொடகொடன்னு கொடையிறா
மொழ மொழன்னு யம்மா யம்மா
மொழ மொழன்னு யம்மா யம்மா…”

ஆயிரம் கரங்கள் கூடி
ஆனந்தக் கொட்டடிக்க
அதிரும்
நானொரு
களிகொண்ட பேரிகை

பஞ்சுமிட்டாய் இடுப்பழகி
ஓலக்கொட்டாய்  உடுப்பழகி
ப்பெப்பர் முட்டாய்  பல்லழகி
க்கொட்டா பாக்கு  கண்ணழகி
ராங்கீமனச வாங்கீ..”

எனதுடலா இது எனதுடலா
இப்படி
பூரிப்பில் துடிதுடிக்கும்
இது என்ன
எனதுடலா?
எனதுடலா?

எனதுளமா இது எனதுளமா
ஈனக்கவலைகள் எரியும் நெருப்பில்
ஜொலிப்பது என்ன
எனதுளமா?
எனதுளமா?

-இசை

****

துரோணா

சிவாஜி கணேசனின் முத்தங்கள்” – இசை
காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ.70.