செம்மண் தரைகள்
தார் சாலைகள்
நீர் தேங்கிய சகதிகள்
புழுதியில் மறையும் பாதைகளென
நான் பயணிக்கும் திசைகளெங்கும்
சருகுகள்.
ஆம்,வெறும் சருகுகள்.
சாயம்போன அந்த உதிரிலைகள்
தொடரும் நீள்க் கோடையின்
சுடும் நினைவாக
என் வழிகளில் படர்கின்றன
சில சமயம் சலசலத்தும்
சில சமயம் சலனமற்றும்
"கிழித்தெறியப் படும்
காதல் கடிதங்கள் யாவும்
சருகுகளாகத் தான் மாறுகின்றன"
தனது நாட்குறிப்பில்
எழுதி வைக்கிறான்
கவிஞன் ஒருவன்.
எரிமலையினிலிருந்து வெடித்து
சிதறும் அக்னி ஜீவாலைகள்
சருகுகளாய் கீழே விழுகின்ற
ஓவியத்தை வரைகிறான்
ஓவியன் ஒருவன்.
கண்ணீர்க் கோர்த்த சருகுகள்
என் வாயிலை நிரப்புகின்றன
என் காலணியில் சேர்கின்றன
என் இரவின் வானத்தில்
வெறிபிடித்தாற் போல் நடனமாடுகின்றன.
இனியும் மாளாது.
சருகுகளை அகற்றியே ஆக வேண்டும்.
அதுவொன்றும் அவ்வளவு சிரமம் கிடையாது.
உடலின் ரகசியங்களை திறக்கின்ற
உலர்க் காமத்தின் பெருமூச்சைக் கொண்டும்
நம்பிகையின் பேரில் சிந்தப்படுகின்ற
உதிரத்திலெழும் பேரலைகளைக் கொண்டும்
வண்ணங்களிழந்த அந்த சருகுகளை
நான் அகற்றுகிறேன்.
கரைந்து மறைந்த
சருகுகளின் கருத்த நிழல்கள்
இப்பொழுது,என் வழிகளை
மறிக்கத் தொடங்கிவிட்டன.
"நிஜங்களைப் போல்
நிழல்கள் எளிதில்
மரித்துவிடுவதில்லை"
காற்றினில் எதிரொலிக்கிறது
மௌனத்தின் குரல்.
அழியா நிழல்களின்
நினைவுகளில்
சருகாகிக் கொண்டிருக்கிறேன்,நான்.
-துரோணா