(மனோஜ் எழுதிய ஆயுதம் சிறுகதையை முன்வைத்து.)
ஒருமுறை எல்லா நாளிதழ்களிலும்,தமிழர்கள் சிலர் இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்படும் காட்சியுள்ள வீடியோ குறித்த செய்தியும் அது சம்பந்தமான படங்களும் வெளியாகியிருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். இப்பொழுது அந்த வீடியோ ஐ.நா. நிபுணர் குழுவினால் உண்மையென அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.இதனையும் நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.மனோஜ் அவர்களின் ‘ஆயுதம்’ சிறுகதையைப் படித்தபொழுது என்னுடைய மனதில் முதலில் தோன்றியது அந்த வீடியோக் காட்சி மட்டுமே.சதையும் நரம்புமாக உயிர்த்திருக்கும் ஒரு உடலை வதைத்துக் கொல்வதெனில் அதை செய்யத் துணிபவரின் மனம் எந்த அளவிற்கு வன்மத்தால் நிறைந்திருக்க வேண்டும். மனிதர்களின் மனதில் தகிக்கும் இவ்வகை வன்மத்தினை ஆதாரமாகக் கொண்டே மனோஜ் தனது ‘ஆயுதம்’ சிறுகதையை உருவாக்குகிறார்.
‘ஆயுதம்’ சிறுகதை தனக்குள்ளாக நான்கு உபகதைகளை கொண்டிருக்கிறது. ஒரு வனப் பிராந்தியத்தினுள் ஸ்கார்பிய ராணுவ வீரர்கள் போர்க் கைதிகளான போஸ்னிய முஸ்லிம்களை டிரக்கில் அழைத்து வருகிறார்கள்.அழைத்து வரப்பட்ட போர்க் கைதிகள் புதர்ப்பகுதியில் மண்டியிட்டு அமர வைக்கப்படுகிறார்கள்.இது முதல் கதையின் களம்.இரண்டாவது கதை ஒரு பத்திரிகை ஆசிரியரைப் பற்றியது. மாநகராட்சி பள்ளியொன்றில் வெள்ள நிவாரண உதவித் தொகை பெற திரளும் ஜன நெரிசலில் சிக்கி மிதிபட்டு நாற்பதற்கும் மேற்பட்டோர் இறக்கிறார்கள். இதனை கவர் ஸ்டோரியாக்க முனைந்து தனது நிருபர்களையும் புகைப்படக்காரர்களையும் வேலை வாங்குகிறார் அப்பத்திரிகை ஆசிரியர்.மூன்றாவது கதை தலிபான்களின் முகாமில் நிகழ்கிறது.அங்கே சமீர் எனும் ஒன்பது வயது சிறுவனொருவன் தற்கொலை படைக்காகத் தயார் செய்யப்படுகிறான்.வாளின் கூர்மையால் விரோதியின் தொண்டையைக் கிழிக்கவும் அவனுக்கு கற்றுத் தரப்படுகிறது.கடைசிக் கதையில் நடுத்தர வயதுடைய சுருளிக்கும் அவனுடைய தந்தைக்கும் சொத்து தகராறு ஏற்பட, சுருளியைப் பலர் முன்னனியில் அவமானப்படுத்தி விடுகிறார்,அவனது தந்தை. இதனால் கோபம் அடையும் சுருளி தனது தந்தையைக் காரேற்றிக் கொல்வதென முடிவெடுத்து அதற்கான ஆயத்தங்களுடன் காத்திருக்கிறான்.அவனுடைய கூட்டாளி மாயாண்டியும் உடனிருக்கிறான்.
நாம் அனுதினமும் பத்திரிகையில் படிக்கின்ற செய்திகள்தான் ‘ஆயுதம்’ சிறுகதை. நாம் காண மறுக்கும் ஒரு குரூர உலகமும் அதன் மனிதர்கள் நிகழ்த்தும் கொலைகளும் தான் கரு.உண்மையில் அந்தக் குரூர உலகம் நாம் வாழும் இதே பூமிதான்.அவ்வுலகின் மனிதர்கள் என்பதும் நாம்தானேயன்றி வேறுயாருமில்லை.இயற்கையிலேயே மனித மனதின் ஆழத்தில் வன்மம் சின்னதொரு மீனைப் போல் நீந்திக் கொண்டேயிருக்கிறது. நம்முடைய தினசரி செயல்பாடுகளை ஒரு வேற்றாளைப் போல் கவனித்தாலே போதும். இதனைக் கண்டுணரலாம்.
‘ஆயுதம்’ கதையின் முதல் பகுதியில் வரும் போஸ்னிய கைதிகள் நமக்கு ஈழத்தின் வலியையே கவனப்படுத்துகிறார்கள்.இனத்தின் பெயரால் இவ்வுலகில் அரங்கேற்றப்பட்டிருக்கும் ஒவ்வொரு பேரழிவின் சரித்திரமும் நம் உடலை நடுங்கச் செய்பவை.ஸ்கார்பிய கமாண்டர் போர்க்கைதிகளில் ஒருவனான பத்தொன்பது வயது மதிக்கத்தக்க இளைஞனைப் பார்த்து இப்படி கேட்கிறான் "ஹேவ் யு எவர் ஃபக்ட்".அந்த இளைஞன் கவிழ்ந்த தலையுடன் பதிலேதும் பேசாது இருக்கிறான்.அந்த இளைஞனின் உணர்வுகளை விளக்க கதையாசிரியர் அதிக சிரத்தையேதும் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரேயொரு வரிதான்
"குனிந்த தலையில் அந்த இளைஞன் பதில் ஏதும் சொல்லாது இருந்தான்."
ஆனால் அவ்வரி வாசகனுள்ளே பெரும்துயரின் கண்ணீரைப் பீறிடச் செய்துவிடுகிறது.இந்தக் கதையின் மிகப் பெரிய பலம் கதை சொல்லியின் மொழியும் வடிவ நேர்த்தியுமே என்பது என் கருத்து.
நல்ல சிறுகதைகள் குறித்து எஸ்.ரா. சமீபத்தில் பின்வருமாறு கூறினார்.
"நல்ல சிறுகதைகளுக்குள் கிளையில் அமர்ந்திருந்த பறவை சட்டென பறந்து எழுவது போன்ற பறத்தலைக் காணமுடியும், அதுவரை வாசகன் தொடர்ந்து வந்த இயல்பு மாறி கதை தன் சிறகுகளை விரித்து மேலே செல்லும் உன்னதத் தருணமது, அந்தத் தருணமே கதையின் முக்கியப் படிமமாக ஆகிவிடுகிறது,"
‘ஆயுதம்’ சிறந்த சிறுகதையென்பதில் சந்தேகம் இல்லை.தன்னுடைய தலிபான் வாழ்க்கையை,குழந்தை மனதின் புரிதல்களுடன் சமீர் எடுத்துரைக்கும் இடமே இந்தக் கதையின் உன்னத தருணம்.இருள் வானில் நகர்கின்ற வெள்ளை ஒளியைப் போல் பிரகாசித்து இக்கதை தனது சிறகினை விரிப்பதும் இந்த தருணத்தில்தான்.சமீரின் வழியாக க்தை சொல்லும் ஆசிரியர் பின்வரும் இரண்டு குறிப்புகளில் எழுத்தின் உச்ச சாத்தியக்கூறுகளை அடைகிறார்.
1..பாலைவனத்தின் நடுவே நீல நதியொன்று ஓடுவது போலவும் மரக்கூட்டம் நின்றிருப்பதைப் போலவும் சமீர் கனவு காண்கிறான். அந்த மரக் கூட்டத்தின் மேலே சாக்லெட்டுகள் காய்த்திருக்கின்றன.நதி நீரைப் பருகினால்,அது சாக்லெட் போல் இனிக்கிறது. பாலை மணலைத் தின்றால் அதுவும் இனிக்கிறது.உறக்கத்திலிருக்கும் சமீரை எழுப்பும் ரஹீம் அவனுக்கு ஒரு செய்தி கொண்டுவந்திருக்கிறார்.துரோகி சிக்கியிருக்கிறான். அவனை மறுநாள் வாளால் வெட்ட வேண்டும். இதுதான் அவர் அவனிடம் தெரிவிக்கும் விடயம்.கனவிலிருந்து விழித்த சமீர் சரியென தலையாட்டிவிட்டு மீண்டும் அதே கனவு வராதா என ஏங்குகிறான்.
2..இன்னமும் பத்து வயது நிரம்பாததால் சமீருக்கு இடுப்பில் பெல்ட்டைக் கட்டிக் கொண்டு சிவப்பு பொத்தானை இயக்குவதற்கான வாய்ப்பு அளிக்கப்படவில்லை. குலாம் நபி(வயது-11) எனும் அவனது சகாவொருவன் அந்த வாய்ப்பை பெறுகிறான்.அதனை ஏமாற்றத்துடன் கூறும் சமீர் அந்த சிவப்பு பொத்தானை அழுத்தினால் மலை உச்சியைத் தாண்டி வானத்தை தாண்டி சொர்க்கத்திற்கு செல்லலாம் என்கிறான் ஆசையாக.
இதனை படிக்கும்போது எனக்கு மனுஷ்யபுத்திரனின் பின்வரும் கவிதை ஞாபகத்திற்கு வந்தது.
"சிவப்புப் பாவாடை
வேண்டுமெனச் சொல்ல
அவசரத்திற்கு அடையாளமேதும் சிக்காமல்
விரலைக் கத்தியாக்கி
தன் தொடையறுத்து
பாவனை ரத்தம்
பெருக்குகிறாள் ஊமைச் சிறுமி."
மனுஷ்ய புத்திரனின் கவிதையில் வருகின்ற ஊமைச் சிறுமியையும் சமீரையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் வன்முறையின் கொடூரக் கரங்கள் நம் பிள்ளைகளை எவ்வாறு நெரிக்கின்றன என்பதை வலியுடன் அறியமுடிகிறது. மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதையில் ஊமைச் சிறுமியின் வாழ்க்கை குறித்து எதுவும் பெரிதாக விவரிக்கப்படவில்லை.இருந்தும் நம்மை சூழ்ந்து கொள்கின்ற பதற்றத்திற்கான காரணம் அந்த ஊமைச் சிறுமியின் பாவனை மட்டுமன்று.அதற்குப் பின் இருக்கும் சூழலின் வன்மத்தினை நம் யூகத்தினால் கட்டமைக்கிறார் கவிஞர். இதனாலயே அந்தக் கவிதை அவ்வளவு நெருக்கமானதாகவும் கனமானதாகவும் இருக்கிறது. இதேபோல்தான் சமீரும்.வன்முறை என்பது ஒரு ராட்சஸ விருட்சம்.அதன் வேர்கள் மண்ணில் வாழ்கின்ற எந்தப் பாவமும் அறியாத பல்லாயிரக்கணக்கான சிறுபிள்ளைகளின் உதிரத்தினை உறிந்து கிளைவிடுகிறது என்பதையே சமீரும் மனுஷ்ய புத்திரனின் ஊமைச் சிறுமியும் நமக்கு நினைவுபடுத்துகிறார்கள்.
இனம்,மதம் எனும் பாகுபாடு எத்தகைய வகையில் இச்சமூகத்தினை சீரழிக்கிறது, எத்தனை உயிர்களைக் காவு வாங்குகிறது, எவ்வளவு இரத்தங்களைச் சிந்தச் செய்கிறது என்பதனை ‘ஆயுதம்’ சிறுகதை வலிமையான உணர்வுகளால் நம் கண்முன்னே எழுதிச் செல்கிறது. ஆனால் மனோஜ் அவர்கள் எதனையுமே பிரச்சாரமாக செய்யவில்லை. வலிந்து திணிக்கப்பட்ட வாதங்கள் இக்கதையில் துளியும் கிடையாது. வெவ்வேறு சூழல்களும் அச்சூழல்களில் வாழும் பாத்திரங்களின் செயல்பாடுகளும் காட்சிகளாக நம்முன்னே விரிந்து நம்மையும் உடன் இழுத்துக் கொள்கின்றன.
‘ஆயுதம்’ சிறுகதையில் மொத்தமாக நான்கு கொலைகள் நிகழ்கின்றன.கமாண்டர் அந்த இளைஞனை சுட்டுக் கொல்கிறார்.சுருளி அம்பாஸிடரின் ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்துகிறான்,அவனுடைய தந்தை கால் வெட்டி துடிக்கும் காட்சி அவனுக்குத் தெரிகிறது.மரண தண்டனைக்கான நான்கு வரிகளை உரக்கச் சொல்லிவிட்டு வாளின் கூர்மையைத் துரோகியின் கழுத்தில் பதிக்கிறான் சமீர்.நான்காவது கொலையைச் செய்வது அந்த பத்திரிகை ஆசிரியர்.
உடலை அறுத்து உயிரை பிரிப்பது மட்டும் கொலையன்று.குரூரங்களை ரசிப்பதும், துயரங்களையும் அழிவுகளையும் தன் சுயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதும் கூட கொலைச் செயலுக்கு ஒப்பானதுதான் என்பதனையே அந்தப் பத்திரிகை ஆசிரியரின் ஊடாக கதையாசிரியர் விளக்குகிறார்.
இந்த நான்கு சம்பவங்களும் parallelஆக நிகழ்கின்றன.கதையின் ஒரு பகுதிக்கும் மற்றொன்றிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.நான்கு பகுதிகளும் தனித்தனியாக சொல்லப்படுகின்றன, தனித்தனியாகவே முடிவும் அடைகின்றன.இருந்தும் இந்த தனித்தனி முடிவுகளையே நான்கு பகுதியையும் கோர்க்கும் சரடாக அமைத்திருப்பதில் மிளிர்கிறது ஆசிரியரின் கதை சொல்லும் முறை.முடிவுகளையே குறியீடாக அமைத்திருப்பது ஆசிரியரின் தேர்ந்த ரசனையையும் சுட்டுகிறது.
‘ஆயுதம்’ சிறுகதை மறக்கமுடியாதவொரு நெகிழ்வான பயணம் போல் நம் மனதில் தேங்குகிறது.மனதின் பாழ்வெளியில் கட்டவிழும் வன்மத்தினை சாரமாகக் கொண்டு நம்முள் ஒருவித சமன் நிலைக்குலைவை ‘ஆயுதம்’ சிறுகதையின் மூலம் உண்டாக்குகிறார் மனோஜ்.நல்ல எழுத்துக்களை நேசிக்கும் ஒவ்வொருவரும் ‘ஆயுதம்’ சிறுகதையைப் படித்தல் அவசியம்.
பி.கு: ஆயுதம் சிறுகதை மனோஜ் அவர்களின் ‘சுகுணாவின் காலைப் பொழுது’ சிறுகதை தொகுப்பினில் இடம்பெற்றிருக்கிறது.ஆயுதம் தவிர்த்து அத்தொகுப்பினில் இடம்பெற்றிருக்கும் இன்ன பிற சிறுகதைகளும் வலிமையான களங்களையும் உணர்வுகளையும் உடையவை.
சுகுணாவின் காலைப் பொழுது
உயிர்மை வெளியீடு. விலை: ரூ.70
துரோணா