Saturday, January 15, 2011

சாதாரணமானவன்


நான் சாதாரணமானவன்,
உங்களைப் போலவே.

இரும்பு கேட்டின் கம்பிகளை
இறுகப் பிடித்துக்கொண்டு,
என்றேனும் ஒருநாள்
இந்த பாதைகளனைத்தும்
மறைந்துவிடக்கூடுமென 
நம்பிக் கொண்டிருப்பவன்

உபயோகத்தில் இல்லாத
பழைய எண்கள் அனைத்தும்,
திரும்பவும் தொடர்புக்கொள்ளும் நிலைக்கு
திரும்பிவிட வேண்டுமென
ப்ரார்த்தித்துக் கொண்டிருப்பவன்.

என் அறையில் எந்த வாசமும் இல்லை.
என் டைரியில் எந்த கிறுக்கலும் இல்லை.
எந்த பாடலும், எனக்கு
எதையும் நினைவூட்டுவதில்லை.

நான் சாதாரணமானவன்
உங்களைப் போலவே.

கண்முன் விழுகின்ற சடலங்களில்
என் கைரேகைகள் இல்லை என்ற வகையில்
நான் நிபந்தனைகளற்ற நிரபராதி.

எல்லாம் சரியாகவே இருக்கிறது.
கடவுள்களின் மீது எனக்கு,
எந்த குற்றச்சாட்டும் இல்லை.
விதிமுறைகளை ஏற்பதில் எனக்கு,
எந்த ஆட்சபேனையும் இல்லை.

கொடுப்பதற்கும் எடுப்பதற்கும்
ஏதுமில்லாத தேசத்தில் நான் வாழ்வதற்கில்லை.
தாழிடும் ஓசை கேட்கும்பொழுதெல்லாம்
நான் கதவு தட்டுவதை நிறுத்திவிடுகிறேன்.
கையெழுத்திட நேரும்பொழுதெல்லாம
நான் அன்றைய தேதியை மறந்துவிடுகிறேன்.
அழுகை வரும்பொழுதெல்லாம்
நான் ஒரு கவிதையெழுத துவங்கிவிடுகிறேன்.

ஆம்.
நான் சாதாரணமானவன்,
மிகவும் சாதாரணமானவன்.
உங்களைப் போலவே.
                                                                                                                -துரோணா

11 comments:

கருந்தேள் கண்ணாயிரம் said...

வார்த்தைகளுக்கு இடையேயுள்ள அர்த்தங்கள் stunning ஆக இருக்கின்றன.

//கண்முன் விழுகின்ற சடலங்களில்
என் கைரேகைகள் இல்லை என்ற வகையில்
நான் நிபந்தனைகளற்ற நிரபராதி.//

இது ஒரு உதாரணம்.

//தாழிடும் ஓசை கேட்கும்பொழுதெல்லாம்
நான் கதவு தட்டுவதை நிறுத்திவிடுகிறேன்.//

இது மற்றொன்று. அட்டகாசம் !

துரோணா said...

தமிழ் பதிவுலக வரலாற்றில் முதல்முறையாக கருந்தேளின் கமென்ட் என் ப்ளாகினில்........
பெருமகிழ்ச்சி.பேரானந்தம்.
மிகுந்த நன்றிகள் ராஜேஷ்.

Raja said...

பத்திரிக்கைகளுக்கு அனுப்பப்போகிறீர்களா இல்லை எனது பெயர் போட்டு நானே அனுப்பிவிடட்டுமா?

துரோணா said...

@ராஜா பத்திரிக்கைகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டால் அதன் பாவங்கள் அனைத்தும் உங்களையே சேரும் பரவாயில்லையா..?:)

/ˈjib(ə)riSH/ said...

நண்பரே,

ராஜேஷ் சொன்னதைப்போல, வார்த்தைப் பிரயோகங்கள் அருமை.

////கண்முன் விழுகின்ற சடலங்களில்
என் கைரேகைகள் இல்லை என்ற வகையில்
நான் நிபந்தனைகளற்ற நிரபராதி.//

//அழுகை வரும்பொழுதெல்லாம்
நான் ஒரு கவிதையெழுத துவங்கிவிடுகிறேன்//

ஆனால் மொத்தமாகக் கவிதையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. முன்னரே ஒரு முறை சொல்லி இருந்ததுபோல், ரொம்பவும் Subjective-ஆக இருக்கிறது. என் வாசிப்பு அனுபவம் குறைவு என்பதும் காரணமாக இருக்கலாம்.

துரோணா said...

//ஆனால் மொத்தமாகக் கவிதையைப் புரிந்துகொள்ள முடியவில்லை.//
"நான் குழப்பதை எழுதுகிறேன்.அது பெருங்குழப்பத்திற்கு இட்டு செல்கிறது" எனும் பொருளில் வரும் மனுஷ்யபுத்திரனின் வரிகள் நினைவிற்கு வருகின்றன.
மிகுந்த நன்றிகள் மோகன்.எனது வாசிப்பு அனுபவமும் குறைவே. எனது கவிதைகள் தற்செயலானவை.

/ˈjib(ə)riSH/ said...

//"நான் குழப்பதை எழுதுகிறேன்.அது பெருங்குழப்பத்திற்கு இட்டு செல்கிறது"//

:)

என்னுடைய suggestion என்னவென்றால், குழப்பத்தில் படிப்பவர்களும் பங்குகொள்ளும்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதே!

anyway, மற்றவர்களுக்கு புரியவேண்டும் என்பதற்காகப் பெண்களையும், காதலையும் பற்றி எழுதாமல் இருப்பதற்கே உங்களுக்கு ஒரு சல்யூட்...

Anonymous said...

மேன்மையை நோக்கி செல்வதற்கான அடையாளங்கள் உங்கள் கவிதைகளில் தென்படுகிறது. வாழ்த்துகள்..

துரோணா said...

உங்களுடைய suggestionஐ ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக நிச்சயம் முயற்சியும் செய்வேன்.

\\பெண்களையும், காதலையும் பற்றி எழுதாமல்\\

என்ன தலைவா..?இப்படி கவுத்திட்டீங்க! நான் காதலைப் பற்றி நிறையவே எழுதுகிறேன்.காதலைப் பற்றி எழுதுவதால் பெண்களைப் பற்றியும் எழுதவே செய்கிறேன். என்ன கொஞ்சம் ஒளித்து வைத்து எழுதுகிறேன்.

அன்புடன் நான் said...

கவிதைக்கு வாழ்த்துக்கள்.... எனக்கு புரிதலில் சிரமம் இருக்குதுங்க ....

துரோணா said...

இதற்கு எந்த வகையிலும் நான் பொறுப்பு இல்லைங்கோ :)

Post a Comment