Saturday, December 25, 2010

இனியுமொரு பாதை


பாறைகளின் மேல்
எழுதப்பட்ட வார்த்தைகளுக்கு
பாறைகளின் கனம் கூடிவிடுகிறது
உறைந்த அச்சொற்களுக்குள்
பயணிக்க முடியாத நான்
தொலை தூரத்தில்
தனித்து செல்லும் மழையின் மேல்
என் கவிதைகளை எழுதுகிறேன்
சாபம் படிந்த துர்கனவு
பெருமழைக் கொண்ட இரவிலிருந்து
எனது கவிதைகளை
குருதி வழிய பிய்த்தகற்றி
தீயிட்டு கொளுத்துகிறது
எரியும் மழையில் எனது சொற்கள்
கருப்பாய் பொசுங்குகின்றன
மெல்ல வடிந்து போகிறது நெருப்பு
மெல்ல வடிந்து போகிறது மழை
ஆங்காரமாய் திமிறிய சொற்கள்
ஒன்றுக்கூட மீதமில்லையென்றானபின்
வெற்று வெளிநோக்கி கைகள் நீள
நான் பிரக்ஞையற்றவனாய்
மீட்சிக்காய் கண்ணீர் வழிய முழந்தாளிடுகிறேன்
ஈரச் சகதியில்
புதைந்து கிடக்கிறது ஒற்றை நட்சத்திரம்

10 comments:

Philosophy Prabhakaran said...

உங்களுடைய வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

துரோணா said...

மிக்க நன்றி....

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை ...........

Anonymous said...

பேரிருப்பினுள் தன்னிருப்பின் நோக்கமறியும் போறுட்டே கலைகள் உருவாகின.அதன் ஒரு பரிமாணமே 'கவிதை'. எல்லாக் கலைகளும் ரசிகனிடமே முழுமையடைகிறது.கலைஞன் சொல்ல நினைத்ததை ரசிகன் தொடலாம்.. அல்லது அவனைக் கடந்தும் செல்லலாம்.வாசகனுடைய 'அக வாசல்' கதவைத் திறக்கத் தூண்டும் ஒரு திறவுகோலே கலை(கவிதை).

உங்கள் கவிதைகள் நன்று..

துரோணா said...

மிக்க நன்றி....

Blognostic said...

I write, for the world's last night.

Nice lines.

அன்புடன் நான் said...

உண்மையாக கரு....பாராட்டுக்கள்

/ˈjib(ə)riSH/ said...

நண்பரே,

நீங்கள் எழுதத்தொடங்கியபோது உங்கள் எழுத்துக்களை அடிக்கடி படித்து வந்தேன், இப்போது குறைந்துவிட்டது. அதற்குக் காரணம் உங்கள் எழுத்துக்கள் ரொம்பவும் Subjective-ஆக இருப்பதாகத் தோன்றுவதுதான். அதை என் அனுபவத்தோடு பொருத்திப் பார்ப்பது எனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. புரிந்துகொள்வதற்குக் கூட நிறையப் படிக்கவேண்டும், எனது படிப்பனுபவம் மிகவும் குறைவு.

பின்வரும் வரியை மிகவும் ரசித்தேன். தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே...

//காகிதங்களின் வெறுமையில்,
நிரம்பியிருக்கிறது வனங்களின் பேரிருள்//

துரோணா said...

@சு.மோகன்:இது பாராட்டா...? இல்லை விமர்சனமா ப்ரதர்..?
எதுவாக இருப்பினும் மிகுந்த நன்றிகள்...

மதி said...

//சொல்லியவை எதுவும்,
நான் சொன்ன பொருளில் அறியப்படவும் இல்லை. //

இந்தக் கவிதையே எனக்கு நீங்கள் சொல்லிய பொருளில் தெரிந்ததா என்று தெரியவில்லை . ஆனால் ஏழெட்டு பொருள் காட்டுகிறது .. நல்ல கவிதைகள்

Post a Comment