Saturday, January 15, 2011

சாதாரணமானவன்


நான் சாதாரணமானவன்,
உங்களைப் போலவே.

இரும்பு கேட்டின் கம்பிகளை
இறுகப் பிடித்துக்கொண்டு,
என்றேனும் ஒருநாள்
இந்த பாதைகளனைத்தும்
மறைந்துவிடக்கூடுமென 
நம்பிக் கொண்டிருப்பவன்

உபயோகத்தில் இல்லாத
பழைய எண்கள் அனைத்தும்,
திரும்பவும் தொடர்புக்கொள்ளும் நிலைக்கு
திரும்பிவிட வேண்டுமென
ப்ரார்த்தித்துக் கொண்டிருப்பவன்.

என் அறையில் எந்த வாசமும் இல்லை.
என் டைரியில் எந்த கிறுக்கலும் இல்லை.
எந்த பாடலும், எனக்கு
எதையும் நினைவூட்டுவதில்லை.

நான் சாதாரணமானவன்
உங்களைப் போலவே.

கண்முன் விழுகின்ற சடலங்களில்
என் கைரேகைகள் இல்லை என்ற வகையில்
நான் நிபந்தனைகளற்ற நிரபராதி.

எல்லாம் சரியாகவே இருக்கிறது.
கடவுள்களின் மீது எனக்கு,
எந்த குற்றச்சாட்டும் இல்லை.
விதிமுறைகளை ஏற்பதில் எனக்கு,
எந்த ஆட்சபேனையும் இல்லை.

கொடுப்பதற்கும் எடுப்பதற்கும்
ஏதுமில்லாத தேசத்தில் நான் வாழ்வதற்கில்லை.
தாழிடும் ஓசை கேட்கும்பொழுதெல்லாம்
நான் கதவு தட்டுவதை நிறுத்திவிடுகிறேன்.
கையெழுத்திட நேரும்பொழுதெல்லாம
நான் அன்றைய தேதியை மறந்துவிடுகிறேன்.
அழுகை வரும்பொழுதெல்லாம்
நான் ஒரு கவிதையெழுத துவங்கிவிடுகிறேன்.

ஆம்.
நான் சாதாரணமானவன்,
மிகவும் சாதாரணமானவன்.
உங்களைப் போலவே.
                                                                                                                -துரோணா

Friday, January 7, 2011

சிதிலங்கள்

உரையாடல்களின் சொற்களுக்குள்ளாக,
நான் ஒளித்து வைக்கின்றேன்.
உன் மீதான குற்றச்சாட்டுகளை,
மீண்டும் நீ கண்டெடுக்கின்றாய்,
மன்னிப்பிற்கான மற்றுமொரு சாத்தியத்தை.


சதுரங்கத்தின் கட்டங்களுக்குள்ளாக,
நான் மாற்றியமைக்கின்றேன்.
அதன் கருப்பு வெள்ளை விதிமுறைகளை,
மீண்டும் நீ கடந்துவிடுகின்றாய்,
எளிதாக மிகவும் எளிதாக.

இன்னமும் இருக்கின்றது,
கொஞ்சம் ஏமாற்றம்.
நீ சொல்லும் உலர்ந்த பொய்களை,
நம்புகின்ற அந்தக் கணத்திற்குள்ளாக.

இன்னமும் இருக்கின்றது,
கொஞ்சம் துக்கம்.
நீ சொல்லும் நட்பின் உண்மைகளை,
சந்தேகிக்கின்ற காதலின் கண்களுக்குள்ளாக.

பிரிவின் இறுதி முத்தத்தில்,
சிதறிய உமிழ் நீரினை,நான்
எங்கும் தேடிக்கொண்டிருக்கின்றேன்,
தீராக் கண்ணீரின் பெருங்கடலில்.

நான் கட்டமைக்கின்றேன்,
என் நம்பிக்கைகளின் தீர்மாணங்களை.
எதிர்பார்ப்புகளின் நிச்சயமின்மைகளென
தொடர்கின்றன,நாட்களின் நினைவுகள்.

பிறழ்வுகளெனவும் கனவுகளெனவும்,
என்னை சூழ்ந்து பரவுகின்றன,
நம் காதலின் சிதைந்த இரவுகள்.

உன் கரம் பற்றுதலின் வெப்பம்,
அங்கு எரித்துக் கொண்டிருக்கிறது,
காற்றின் பெரு வெளியை.

முடிவுபெறாத ஒரு நூற்றாண்டு கவிதையென,
ஏங்குகின்றன ,உருக்குலைந்த என் இறுதி உணர்வுகள்,
தீனமாய் அழும் ஒரு முரட்டு கிழவனைப் போல்
                                                                                                                      -துரோணா

Saturday, December 25, 2010

இனியுமொரு பாதை


பாறைகளின் மேல்
எழுதப்பட்ட வார்த்தைகளுக்கு
பாறைகளின் கனம் கூடிவிடுகிறது
உறைந்த அச்சொற்களுக்குள்
பயணிக்க முடியாத நான்
தொலை தூரத்தில்
தனித்து செல்லும் மழையின் மேல்
என் கவிதைகளை எழுதுகிறேன்
சாபம் படிந்த துர்கனவு
பெருமழைக் கொண்ட இரவிலிருந்து
எனது கவிதைகளை
குருதி வழிய பிய்த்தகற்றி
தீயிட்டு கொளுத்துகிறது
எரியும் மழையில் எனது சொற்கள்
கருப்பாய் பொசுங்குகின்றன
மெல்ல வடிந்து போகிறது நெருப்பு
மெல்ல வடிந்து போகிறது மழை
ஆங்காரமாய் திமிறிய சொற்கள்
ஒன்றுக்கூட மீதமில்லையென்றானபின்
வெற்று வெளிநோக்கி கைகள் நீள
நான் பிரக்ஞையற்றவனாய்
மீட்சிக்காய் கண்ணீர் வழிய முழந்தாளிடுகிறேன்
ஈரச் சகதியில்
புதைந்து கிடக்கிறது ஒற்றை நட்சத்திரம்

Thursday, December 16, 2010

சிருஷ்டியின் கரங்கள்

தார் சாலைகள் கசிந்து உருகிய
நிழல்களில்லா ஒரு அகாலத்தில்
சிருஷ்டியின் கரங்களை நான் கண்டெடுத்தேன்
எங்கிருந்து வந்தன எனத் தெரியவில்லை,
எப்பொழுது பறிபோகும் என்பதிலும் நிச்சயமில்லை.

நிலையில்லாத தொடர் பிம்பங்கள்
இமைகளின்மீது படிந்தும் அகன்றும்
எதுவுமில்லாததிலிருந்து
எதை உருவாக்குவது?

கானகத்தை போலொரு கடல்
மலையை போலொரு நிலவு
நிர்வாண உடலை போலொரு வானம்
சாத்தானை போலொரு கடவுள்
சிருஷ்டியின் கரங்களை இறுக பற்றிக்கொண்டு,
உலகை முற்றிலுமாக மாற்றியமைக்கிறேன்.

பின்னர்,
என்னுடைய பழைய காலண்டரின் தேதிகளை,
சாக்கினுள் மறைத்து வைத்த கண்ணீர் துளிகளை,
சொல்ல நினைத்த பொய்களை,
கிழித்தெறிந்த கவிதைகளை,
மீண்டும் உருப்பெறச் செய்கிறேன்.
உண்மையென உலவுகின்றன, உருப்பெற்றவை.

பிரிவின் கடிதங்களையும்
அழிவின் செய்திகளையும்
மீள்தொடர்பின் முறிவுகளையும்
தீரா உவகையுடன்,நான் சிருஷ்டிக்கிறேன்

என் கனவிளவரசிக்காக,
முடிவில்லாத நதிகளை
இரவின் இசைக்குறிப்புகளை
எண்ணற்ற சேவகர்களை
நான் சிருஷ்டிக்கிறேன்

கனவிளவரசியை சிருஷ்டிக்க
முனையும் பொழுது மட்டும்
சிருஷ்டியின் கரங்கள் நடுங்குகின்றன.

இறுதியில்,
என்னை நானே சிருஷ்டிக்கிறேன்,
கொஞ்சம் கண்களை மாற்றி.
என்னை நானே சிருஷ்டிக்கிறேன்,
கொஞ்சம் தேகத்தை மாற்றி.
என்னை நானே சிருஷ்டிக்கிறேன்,
கொஞ்சம் என்னை மாற்றி.
இருந்தும், நான் நானாகவே இருக்கிறேன்.
நான் நானாகவே.

பெருங்குரலெடுத்து அழுகிறேன்.
சிருஷ்டியின் கரங்களை தூக்கியெறிகிறேன்
அவை குரூரமானவை
அவை இரக்கமற்றவை.

எரிதழலின் ஜீவாலைகளை கக்கியபடியே
துரத்துகின்றன, என் சிருஷ்டிகள்.
அழிவின் கரங்களை தேடி அலைகிறேன், நான்
                                                                                                                         -துரோணா

Saturday, December 11, 2010

கானல் திரை



அந்த நிலவின்
அதே படிமம்
நான் பார்த்த
அதே மலைதான்
இன்னுமொரு முறை
உயிர்த்தெழுகிறது,
முந்தைய இரவின்
சத்தியத்தை காப்பாற்ற.
 தன் சாம்பல் கரையில்
புரளும் குருதியை
கழுவிக்கொண்டிருக்கின்றன
நுரை அலைகள்.
வார்த்தைகளின் ஞாபகங்களை,
கையிலேந்தியபடியே திரிகின்றான்
ஒரு அம்மண துறவி.
அவனை தொடர்ந்து
அவ்வழிகளில் படர்கின்றன,
வெறுப்பின் எச்சங்கள்,
அன்பை நோக்கிய கனவுகளை தாங்கி.
வானாக
பூமியாக
சூரியனாக
நதி ஓடைகளாக
எங்கும் மீதமிருக்கிறது ஒரு குரல்.
மிகவும் எளிதாக
ஒரு காதலை
ஏற்கவும் மறுக்கவும்
நாம் பழகிக்கொண்டோம்.
அந்த நிலவின் அதே படிமம்
நான் பார்த்த அதே மலைதான்
இன்னுமொருமுறை மடிந்து விழுகிறது.
                 
                                                                                                                                         -துரோணா