Monday, May 23, 2011

உதிரமெழுதும் தீர்ப்பின் பிரதிகள்


இறுதி யுத்தத்தின்
இறுதி போராளியை
விழுங்கிய வாளில்
இன்னமும் ரத்தக் கறை
காய்ந்திருக்கவில்லை.

வெந்தழல் மேகங்களில்
நீதித்தேவதைகளைக் கண்டதாக
வாக்குமூலம் அளித்தவர்கள்
கொலைகளனிற்கு அனுப்பப் படுகிறார்கள்.

பிசாசெழுதும் வரலாற்றினில்
நம்பிக்கையின் பெயரால்
சிந்தப்படும் கண்ணீர்த் துளிகளுக்கு
கோமாளிகளின் முகமூடி
அணிவிக்கப் படுகிறது.

ஓராயிரம் நூற்றாண்டுகளாக
மண்ணுக்கடியில்
புதையுண்டிருந்த புரட்சியின்
சொல்லை விடுவித்த
கவிஞன், தானெழுதிய
கவிதைகளை கிழித்தெறிகிறான்.

கோப்பைகளில் நிரம்பிய
அழுகுரல்களை பருகும்
அரக்கனுக்கு தெரியவேயில்லை
தான் சுவைப்பது
தீரா மௌனத்தினையே என்பது.

இங்கே,
இனியொரு போதும்
புழுக்கள் ஊர்ந்து செல்ல போவதில்லை
விதைகள் துளிர்விட போவதில்லை
துப்பாக்கிகள் இயங்க போவதில்லை.
அன்பின் சாட்சியாக
நல்லுறவின் சாட்சியாக
இறையாண்மையின் சாட்சியாக
இங்கே,அமைதி நிலைநாட்டப் பட்டுவிட்டது.

இவ்வுலகின் கடைசி தினத்தில்,
சிதைந்தவர்களின் உதிரமெழுதும்
தீர்ப்பின் பிரதிகள்
வாசிக்கப்படும் போது
கருணையின் தெய்வங்கள்
தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்ளக் கூடும்.
                                                                                                                                                           - துரோணா

நன்றி :திண்ணை

Monday, May 2, 2011

இரண்டு கவிதைகள்



இன்று,
மெழுகுவர்த்தியின்
கடைசித்துளி தீயின்
மேல் விழுந்த
மழையின் முதற் தூரலில்
நான் உன்னுடைய
முகத்தைக் கண்டேன்.
அது என்னுடைய
முகம் இல்லை
என்று மட்டும் சொல்லிவிடாதே.
ஒருவேளை இதுவரை
நீயேக்கூட பார்த்திராத
உனது முகமாக இருக்கலாம்
*
இறுதியில்,கண்ணீர் சிந்தாமல்
அழக்கூட பழகிக் கொண்டு விட்டேன்.
இனியொரு பிரச்சினையுமில்லை.
புறக்கணிப்பின் கரங்களை
வாஞ்சையுடன் திரும்பவும்
முத்தமிடலாம்.

Saturday, March 5, 2011

கொஞ்சம் கிறுக்கல் -2

எதைஎதையோ ஆராய்கிறீர்கள்,
ஏதேதோ தீர்ப்பளிக்கிறீர்கள்.

காற்றெனவும் நிலவெனவும் கலங்குகிறது காலம்.
தீர்மாணங்களற்றும்,சுவடுகளற்றும


******

இனியும் உன்னிடம் மறைப்பதற்கில்லை
சொல்லிவிடுகிறேன்.
இதற்கு முன்னும் சொல்லியிருக்கிறேன்.
சொல்லாதுமிருந்திருக்கலாம்.
சொல்லாவிட்டால்தான் என்ன?
நீ அறிவாய் அல்லவா,நான் சொல்ல நினைப்பதை..?

******

உனக்காகவே நான் அதை உருவாக்குகிறேன்
உனக்காகவே நான் அதை உருக்குலைக்கிறேன்
என்னவென்று தெரியவில்லை..?
இன்னமும் கண்களை கசங்கச் செய்கிறது......

******

பிழைகள், திருத்தங்கள்
பின்னிரவின் கிறுக்கல்கள்
ஒழுங்கற்ற கனவுகள் என
இன்மையின் நிழலாக எனது டைரி,
எரித்து விடுகிறேன்
எரிக்க முடிகிறது, எனது டைரியை மட்டும்

******

காய்ந்த முற்செடிகளிலான வெயிற் நிலத்தில்
கருகி திரிகிறது பெயரற்ற ஒரு வெற்றுயிர்
மீண்டும் ஜனனிக்கும் தினத்தில்
தான் கொள்ள வேண்டிய பெயரை தேடிக்கொண்டு....

******


                                                                                 -துரோணா

Saturday, February 19, 2011

சருகுகள்


செம்மண் தரைகள்
தார் சாலைகள்
நீர் தேங்கிய சகதிகள்
புழுதியில் மறையும் பாதைகளென
நான் பயணிக்கும் திசைகளெங்கும்
சருகுகள்.
ஆம்,வெறும் சருகுகள்.

சாயம்போன அந்த உதிரிலைகள்
தொடரும் நீள்க் கோடையின்
சுடும் நினைவாக
என் வழிகளில் படர்கின்றன
சில சமயம் சலசலத்தும்
சில சமயம் சலனமற்றும்

"கிழித்தெறியப் படும்
காதல் கடிதங்கள் யாவும்
சருகுகளாகத் தான் மாறுகின்றன"
தனது நாட்குறிப்பில்
எழுதி வைக்கிறான்
கவிஞன் ஒருவன்.

எரிமலையினிலிருந்து வெடித்து
சிதறும் அக்னி ஜீவாலைகள்
சருகுகளாய் கீழே விழுகின்ற
ஓவியத்தை வரைகிறான்
ஓவியன் ஒருவன்.

கண்ணீர்க் கோர்த்த சருகுகள்
என் வாயிலை நிரப்புகின்றன
என் காலணியில் சேர்கின்றன
என் இரவின் வானத்தில்
வெறிபிடித்தாற் போல் நடனமாடுகின்றன.

இனியும் மாளாது.
சருகுகளை அகற்றியே ஆக வேண்டும்.
அதுவொன்றும் அவ்வளவு சிரமம் கிடையாது.

உடலின் ரகசியங்களை திறக்கின்ற
உலர்க் காமத்தின் பெருமூச்சைக் கொண்டும்
நம்பிகையின் பேரில் சிந்தப்படுகின்ற
உதிரத்திலெழும் பேரலைகளைக் கொண்டும்
வண்ணங்களிழந்த அந்த சருகுகளை
நான் அகற்றுகிறேன்.

கரைந்து மறைந்த
சருகுகளின் கருத்த நிழல்கள்
இப்பொழுது,என் வழிகளை
மறிக்கத் தொடங்கிவிட்டன.

"நிஜங்களைப் போல்
நிழல்கள் எளிதில்
மரித்துவிடுவதில்லை"
காற்றினில் எதிரொலிக்கிறது
மௌனத்தின் குரல்.

அழியா நிழல்களின்
நினைவுகளில்
சருகாகிக் கொண்டிருக்கிறேன்,நான்.
                                                                                      -துரோணா

Friday, February 4, 2011

நினைவுகளின் வார்த்தைகள்



ஒரு இலையுதிர்வை போல்தான்,
இருந்தது அக்கணம்.
மிகவும் இலகுவாக
அதே சமயம் மிகவும் கனமாக.

நீர்த்துப் போன மௌனங்களுடன்
கடந்துக் கொண்டிருந்தன 
தொடர்ந்து வெளிப்பட்ட 
ஒவ்வொரு கணங்களும்.
O
முன்தீர்மாணங்கள் இல்லாத 
எந்த நிகழ்விற்குமே
நான் இதுவரை பழகியதில்லை.
நேரங்காட்டியை மீண்டுமொருமுறை
சரி பார்த்துக் கொள்கிறேன்.

சொற்களை கையாள்வதுப் போல்
காலத்தினையும்,மிகுந்த நேர்த்தியுடனே
நீ கையாள்கிறாய்.
O                                                                      
                                                                                                 
உன்னுடைய கேள்விகள் அனைத்திற்குமே
என்னிடம் பதில்கள் உள்ளன,
பொருத்தமான வார்த்தைகள்தான் இல்லை.
நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
ஒரு சிகரெட் இருந்தால் தேவலாம்.
O
கூண்டு புலியின் கண்கள்
இரும்புக் கதவின் கம்பிகளை
எதிர்கொள்ளும்
அதே வேட்கையுடன்
அதே கோபத்துடன்
அதே ஏமாற்றத்துடன்
அதே வேதனையுடன்
நான் அந்த கணங்களை
எதிர்கொள்ள துணிகிறேன்

எந்த நியாயங்களுக்கும் தகுதியற்ற                                                            ஒரு குடிகார சூதாடி                                                         மீண்டுமொருமுறை                                                                   சீட்டுக்கட்டை கலைத்தடுக்குகிறான்
o
உன்னிடம் இருக்குமளவிற்கு
என்னிடம் சாட்சியங்கள் இல்லை.
நீ எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
நானும் எதையும் நிரூபிப்பதற்கில்லை.
நாளையும் மழை பெய்யும் என்ற
எளிய நம்பிக்கை மட்டுமே
என்னிடம் மீதமிருக்கின்றது.
O
இறுதியில்,
நீயும் சென்று விட்டாய்.
நானும் சென்றுவிட்டேன்.

சொல்லிக் கொள்ளாமல்
செல்வதில் தான் 
எவ்வளவு சௌகரியங்கள்.
யாரும் பார்க்கும் முன்னே
கண்களை துடைத்துக் கொள்ளலாம்.
O
நாம் சென்ற பிறகும்,
அந்த கணங்களுக்குள்ளாக,
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன 
நம் நினைவுகளின் வார்த்தைகள்.

வார்த்தைகள்
வெறும் வார்த்தைகளாக
மட்டும் இருப்பதில்லையே