Sunday, November 28, 2010

சாம்பல் நிலவு


அன்றைய இரவு
ஒரு நிகழ்வினை
சாட்சியாக்கிக் கொண்டிருந்தது
கோப்பைகளில் நிரம்பி
வழிந்தோடிய மதுவில்
நம்முடைய முகங்கள்
சிதறி உடைந்தன

திரவமாய் ஊர்ந்து வந்த
பழைய நினைவுகளின்
அத்தனை குற்றச்சாட்டுகளும்
போதையாய் நூல்போல் திரிய
நாம் யாவற்றையும்
மன்னிக்க தயாரானோம்

அப்பொழுது ஒரு வயலின் இசைக்கப்பட்டது
உடன் ஒரு அழுகை குரலும்
அது நீயாகவோ அல்லது
நானாகவோ இருக்கக்கூடும்

மீண்டும் கோப்பைகள் நிரப்பப்பட்டன
ஒரு துறவியின் குரூரத்தோடும்
ஒரு கோமாளியின் வன்மத்தோடும்
நான் உன் கண்களை சந்திக்கிறேன்

நீயும் அப்படியே என்னை பார்க்கிறாய்

மூச்சழுத்த உயிரின் பாதையில்
நாம் ஒன்றாய் பயணிக்கிறோம்
ஈரம் வற்றிபோன உன் இதழ்களிலிருந்து
காமத்தின் கொடுநஞ்சை நான் உறிஞ்செடுக்கிறேன்

உன் செழித்த முலைகளில்
நான் முகம் புதைக்க
என் கண்ணீரின் வெம்மை
உன் வயிற்றில் படர்கிறது

இருட்டிற்குள் தொலைந்து
வெகுதூரம் சென்று
மீண்டும் பேய்க்கூச்சல் ஒலிக்கும்
இருளையே கண்டடைகிறோம்
 
புணர்ச்சிக்கு பின் முத்தம் கொடுக்க
நீ நெருங்குகையில்
என் பலம் மட்டும் கொண்டு
உன் கண்ணத்தில் ஓங்கி அறைகிறேன்
வெறிகொண்டெழும் நீ
என் முகத்தில் எட்டி உதைக்கிறாய்

இரண்டு ராட்சஸ விலங்குகள்
வனமதிர மூர்க்கமாய் மோதிக் கொள்ள
அவற்றிற்கு சாராயத்தை
ஊற்றிக்கொடுத்து
பின் வேட்டையாடி சதையறுக்கிறான் கடவுள்

No comments:

Post a Comment