Monday, March 26, 2012

அரசனின் கடல்நினைவுகள்


விதூஷகன் அதிகம் அறியப்படாத ஒரு எழுத்தாளர்.அவர் அதிகம் அறியப்படாமல் போனதற்குக் காரணம் அவர் அதிகம் எழுதாததுதான் என்பது என் கருத்து. அவர் ஒரே ஒரு நாவல்தான் எழுதினார். “அரசனின் கடல்நினைவுகள்” எனும் அந்த நாவலை எழுதி முடித்த நான்காம் நாள் மாரடைப்பு ஏற்பட்டு செத்துப் போய்விட்டார்.

பின் வருவது விதூஷகன் எழுதிய “அரசனின் கடல்நினைவுகள்” நாவலின் நாற்பத்தி யெட்டாவது அத்தியாயம்:


அரசன் அந்த பிரம்மாண்டமான குழியினை ஆழமான பார்வையில் நோக்கினான். கண்களின் எல்லையைத் தாண்டி விரிந்தது அந்தக் குழி.நூறடி ஆழம் ஐம்பதடி அகலம் என்கிற அளவில் கடற்கரையில் ஒரு குழி என்றால் அது எத்தனை பெரியது என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு பெரிய மரணக்கிணறை ஒத்திருந்தது அதன் வடிவம்.அந்தக் குழியைச் சுற்றிலும் முழங்கால் உயரத்திற்கு முட்கிளைகளால் வேலி போடப்பட்டிருந்தது.நெருக்கமாக வேயப்பட்டிருந்த அந்த வேலிக்குள் சின்ன எறும்புகூட நுழைந்துவிட முடியாது.வேலியின் நடுவே வாசல் போல் ஒரே ஒரு திறப்பு.குழிக்குள் இறங்குவதற்கு ஏதுவாக ஒரு நீளமான ஏணி அந்த திறப்பின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்தது.


அரசனுக்குப் பின்னே இராணுவத்தினர் சீராக அணிவகுத்து நின்றனர்.குழிக்குள் பெட்ரோல் ஊற்றப்படும் சத்தம் மழை பெய்வதைப் போல் இரைச்சலாகக் கேட்டது. அலைகளின் ஈரத்தோடு படர்ந்த கடற்காற்றை ஸ்பரிசித்த அரசன் பதற்றமடைந்தான். அவனது உடல் ஈரக்காற்றில் நடுக்கம் கண்டது.அதை மறைக்கும்பொருட்டு தனது கைகளை இறுக்கமாக்கிக்கொண்டான். மணலில் புதைந்தெழுந்த அவனது கால்கள் காற்றின் விசையில் தடுமாறின.கடற்காற்று இன்னும் வேகமெடுத்து வீசியது.


அரசன் ஆயாசத்தோடு தீக்குச்சியைக் கொளுத்தினான்.கடற்காற்றில் இரண்டு தீக்குச்சிகள் எரிந்த மாதிரியே அணைந்துபோயின.மூன்றாவது தீக்குச்சிதான் தீப்பந்தத்திற்கு உயிர் கொடுத்தது.சற்று நேரத்திற்கெல்லாம் நிறைய தீப்பந்தங்கள் தயாராகிவிட்டிருந்தன. குழியிலிருந்து முப்பதடி தூரம் தள்ளி,மரப்பலகைகளால் மேடை போல் அமைக்கப்பட்டு அதன் மேல் அரசனுக்கு சிம்மாசனம் போடப்பட்டிருந்தது. தீப்பந்தத்தை ஏற்றிய பின்னர் அரசன் தனது சிம்மாசனத்திற்கு சென்று அமர்ந்து கொண்டான்.கடலும் கடற்கரையும் அரசனின் காலடியில் இருப்பது போன்ற தோற்றம் உருவாகியது.அரசன் இராணுவத்தினரை நோக்கி சிநேகமாக கையசைக்கவும்,கரவொலிகள் எழும்பின.


தீப்பந்தங்களை ஏந்திய இருபது இராணுவ சிப்பாய்கள் ஏணிவழியே குழிக்குள் இறங்கினார்கள். முதல் ஆளாக குழிக்குள் இறங்கிய சிப்பாய் எண்:AS124 தனது வலது கையிலிருந்த தீப்பந்தத்தை விறகு குவியலுக்குள் வீசிவிட்டு இடது கையை வான் நோக்கி உயர்த்தி “ஹிரஸ்வானா ஜிகுலாதாத்”[எங்கள்தேசம் எங்களுக்கே] என்று அடிக்குரலில் கத்தினான். அவனைத் தொடர்ந்து வந்த பத்தொன்பது பேரும் அவனைப் போலவே தீப்பந்தத்தை வீசியெறிந்துவிட்டு “ஹிரஸ்வானா ஜிகுலாதாத்” என்று தொண்டை கிழிய கத்தினார்கள்.


தீப்பிடித்த விறகுகளிலிருந்து பரவிய அனல்காற்று தோலையே உருக்கியெடுக்கும் உஷ்ணத்தோடு பலமாக வீசியது.இருபது சிப்பாய்களும் ஜுரவேகத்தில் ஏணியேறி மேலே வந்தார்கள்.அரசன் தனது கைகளை அலட்சியமாகத் தட்டி பெருமிதமாக சிரித்தான்.நெருப்பு பலமாகப் பற்றிக்கொண்டு எரிந்தது.
   
நான்கு பச்சைக் கலர் இராணுவ டிரக்குகள் கடற்கரை மணலில் அலைகளை எழுப்பியபடி சீறிக்கொண்டு வருவது நெருப்பினூடே மங்கலாகத் தெரிந்தது. அரசனுக்கு நேரெதிர் திசையில் கரும்புகை பரவ தகித்துக்கொண்டிருந்த தீக்குழிக்குப் பின்னே கொஞ்ச தூரம் தள்ளி அவை நின்றுக்கொண்டன. டிரக்கினிலிருந்து இறங்கிய இராணுவ உயர்அதிகாரி எண்:AS-A4 அரசனின் முன்வந்து தலை குனிந்து “தீரஸ்கார் பரேல்”[மன்னர் வாழ்க] என்று பவ்யமாகச் சொல்லி அரசனுக்கு மரியாதை செலுத்தினான்.அரசன் வேலைகள் சீக்கிரம் ஆரம்பிக்கட்டும் என்று சைகையினாலேயே உத்தரவிட்டான்.


அரசனிடமிருந்து உத்தரவு கிடைக்கவும் நான்கு டிரக்குகளின் பின் கதவுகளும் சடுதியில் திறக்கப்பட்டன.அரசனின் பார்வை கதவுகளின் மேலேயே குத்திட்டிருந்தது. கதவுகள் திறக்கப்படவும்,ஒரே சீராக நின்றுகொண்டிருந்த டிரக்குகளிலிருந்து நூற்றுக்கணக்கான நிர்வாண பிணங்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக சரிந்து விழுந்தன.சீட்டடுக்குகள் கலைந்து விழுவதைப் போல் ஒன்றன்பின் ஒன்றாக ஒருசேர கவிழ்ந்து விழுந்த பால்பேதமற்ற அழுகல் பிணங்களின் சதைக்குவியல்களை அரசன் பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.நொடிப்பொழுதில் கடற்கரையே மிகப்பெரும் சவக்கிடங்கினைப் போலானது.


நாஜிகளால் கொலை செய்யப்பட்ட யூதர்களின் உடல்களை கண்டிருப்பீர்கள் தானே?அவற்றைப் போலவேதான் இருந்தன இந்தப் பிணங்களும்.கண்கள் இரண்டும் உள்ளே போய்,கன்னங்கள் ஒடுங்கியிருந்த சடலங்களில் எலும்புகளைக் கண்கூடாகப் பார்க்கமுடிந்தது.ஆண்களது உடல்களில் பிறப்புறுப்புகளைக் காணவில்லை. பிறப்புறுப்புகளை அறுத்து அவர்களைக் கொலை செய்திருக்க வேண்டும்.பெண்களது உடல்களில் அங்கங்கே தீக்காயங்கள் தென்பட்டன.அவர்களது பிறப்புறுப்புகளில் காய்ந்திடாத குருதியின் தடம் இருந்தது.இராணுவ உயரதிகாரி தனது சிப்பாய்களைத் துரிதப்படுத்தினார்.சிப்பாய்கள் பிணங்களை அள்ளி குப்பை பொறுக்கும் தள்ளு வன்டிகளில் போட்டு நிரப்பினார்கள்.இந்தப் பிழைப்பிற்கு மலம் அள்ளும் வேலை எவ்வளவோ தேவலாம் என சிப்பாய் எண்:AS057 மனதிற்குள்ளாக முனங்கினான். நூறு குப்பை வண்டிகளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பிணங்கள் பிதுங்கலாகத் திணிக்கப்பட்டன.


மேளங்கள் கொட்டப்பட,சங்குகள் முழங்குகின்றன.சிப்பாய்கள் பிணங்களைக் குப்பை வண்டிகளோடு சேர்த்து தூக்கி குழிக்குள் போடுகிறார்கள்.தேவ தூதர்களின் தலைவரான மிரிசியோ அரசனருகே சென்று சன்னமான குரலில் “நிரிஜ்விஹியே லிதி சேதா மியிரியோம்” [கடவுளுக்காவே நாம் இதை செய்கிறோம்] என சொல்கிறார். அரசன் அதை ஏற்றுக்கொள்ளும் பாவனையில் இமைகளை மெல்ல மூடித் திறக்கிறான்.மிரிசியோ சுருக்கங்கள் நிரம்பிய தனது நடுங்கும் கைகளை அரசனின் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்கிறார்.


கழுகுகளின் சிறகுகளைத் தாங்கிய வானம் அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. தீயில் விழுந்த பிணங்கள் கருகி சாம்பலாகின்றன.மேகம் போல் படரும் சாம்பல் நிற தீ ஜுவாலைகளைக் காணும் அரசன் குதூகலம் அடைகிறான்.


குழுமியிருந்த  இராணுவத்தினரின் யாவரும் கூட்டாக “ஹிரஸ்வானா ஜிகுலாதாத்” என்று முழக்கமிடுகிறார்கள்.கடலின் நிசப்தத்தை தகர்த்த கோஷம் சாத்தான்களின் குரலில் அவ்வளவு கொண்டாட்டமாக ஒலிக்கிறது.அரசனின் தலைமையில் பாடல்களின் பின்னணியோடு ஒரு கார்னிவல் போல் அது நடந்து முடிந்தது.
******






Saturday, March 24, 2012

காதலாகி..



காதல் எதனால் தோன்றும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?நான் காதலின் தோற்றம் மறைவு இரண்டுமே ஒருவனின் தலைவிதியை பொருத்தே அமையும் என்று சொல்கிறேன். உங்களுடைய கருத்து என்னவாக இருந்தாலும் சரி,என்னுடைய இந்த நம்பிக்கை திட்டவட்டமானது.நான் ஏதோ சும்மா அடித்துவிடுகிறேன் என்று நீங்கள் தப்பர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டாம்.என்னுடைய அநுபவங்களின் மூலம் இதை என்னால் ஆணித்தரமாய் நிறுவமுடியும். ஏன் ரொம்பதூரம் போவானேன்நம்முடைய விக்னேஷ் கதையையே எடுத்துக் கொள்ளுங்கள்.கல்லூரியில் சேர்ந்த புதிதில் அவனது முகத்தைப் பார்த்ததும் அப்பிராணியாய் இருப்பான்போல என்றுதான் நினைத்தேன்.ஆனால் பழகிய பின்தான் தெரிகிறது அவன் எவ்வளவு பெரிய திருட்டுபயல் என்பது.சராசரியாக மாதத்திற்கு ஐந்து பெண்களை காதலிப்பது அவனது வழக்கம்.மார்ச் மாதத்தின் அவனது ப்ராஜெக்டுகளை சௌமியாஸ்ருதிப்ளெஸ்ஸிதீப்தி மற்றும் கிருபா என்கிற வரிசையில் வகைப்படுத்தலாம்.(பெண்ணியவாதிகள் கோபித்துக் கொள்ளவேண்டாம்.விக்னேஷின் பேச்சுவழக்கில் ஒவ்வொரு ப்ராஜெக்டும் ஒவ்வொரு காதல் என பொருள்படும்.எனக்கு இந்த வார்த்தை பிரயோகத்தில் உடன்பாடில்லை யென்ற போதும் அவன் இக்கதையில் ஒரு கதாபாத்திரம் ஆகையால் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது)

விக்னேஷ் கல்லூரியிலிருக்கும் நேரத்தில் காதலே கண்ணாய் தீயாய் வேலை செய்வான்.காலை இடைவேளையின் போது காண்டீன் வாசலில் நின்று எக் பப்ஸை கொரித்தபடியே சௌமியாவிற்காக காத்து கிடப்பான்.பிறகு மதியம் சாப்பிடுவதற்கு முன்பாக ஏ-பிளாக்கில் இருக்கும் நோட்டீஸ் போர்டை வெறித்தபடி(அதில் புதிதாய் எதுவும் இல்லாதபோதும்) ஸ்ருதிக்காக தவம் இருப்பான்.சாப்பாட்டிற்கு பிறகு எலக்ட்ரானிக்ஸ்’ லேப் பக்கம் போனால் ப்ளெஸ்ஸியை பிடித்துவிடலாம். தீப்தியும்,கிருபாவும் எங்கள் காலேஜ் கிடையாது.என்றாலும் எங்கள் கேம்பஸில்தான் இருக்கிறாள்கள்.என்ன குழப்புகிறேனாஒன்றும் பெரிய காரியமில்லை. எங்கள் கேம்பஸிற்குள் மொத்தம் மூன்று பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன.அதில் வாசலுக்கருகில் ஒட்டிவைத்தது போலிலிருக்கும் நீலநிற கல்லூரியில்தான் தீப்தி படிக்கிறாள்.கிருபா அதற்கடுத்திருக்கும் மெரூன்நிற கல்லூரியை சேர்ந்தவள்.எங்கள் வெளிர் பச்சைநிற கல்லூரிதான் கடைசியில் மூன்றாவதாக இருக்கிறது.எனவே கல்லூரி முடிந்ததும் நேராக மெரூன் கல்லூரிக்கு சென்றுவிடுவான் விக்னேஷ். அங்கேயிருக்கும் ஏடிஎம் சென்டர் பக்கத்தில் நின்று பர்ஸை துலாவியபடியே ஒரு பத்து நிமிடம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால்கிருபா வந்துவிடுவாள்.அதற்கு பிறகு அங்கிருந்து நகர்ந்து கேம்பஸின் பிரதான சாலையில் வரிசையாய் நிறுத்தபட்டிருக்கும் மஞ்சள் பேருந்துகளில் 49ம் எண் பேருந்தை தேடவேன்டும்.அதில் நான்காவது வரிசையில் சிப்ஸ் பாக்கெட்டோடோ அல்லது காஃபி கோப்பையோடோ தீப்தி உட்கார்ந்திருப்பாள்.அவளையும் பார்த்துவிட்டு ஆத்ம சந்தோஷத்தோடு விக்னேஷ் வீட்டுக்குச் செல்வதற்குள் மணி ஏழரையாகிவிடும். மறுபடியும் அடுத்த நாள் இதே காரியங்கள் செவ்வனே தொடரும்.

மாதம் ஐந்து பெண்களை காதலிக்க வேண்டுமென்பதுதான் விக்னேஷின் அடிப்படை நோக்கம் என்று சொல்லமுடியாது.ஆரம்பத்தில் ஒரு பெண்ணைதான் அவனும் காதலித்தான்.அப்புறம் அவள் வேறொருவனை காதலிப்பது தெரியவரவும் அவன் இன்னொரு பெண்ணைத் தேட நேர்ந்தது.சரி இவளும் போய்விட்டால் என்ன செய்வது?எதற்கும் இருக்கட்டுமே என்று மற்றொரு பெண்ணையும் பார்த்து வைத்தான்.இரண்டு வாரங்கள் போகவும் வேறு டிபார்ட்மென்ட்டை சேர்ந்த வாட்டசாட்டமான இரு வாலிபர்கள் அவனிடம் வந்து தங்களது கரகரப்பான முரட்டுக் குரலை அதிக கரகரப்பாக்கி ங்கொம்மாலே இனி உன்னைய அந்த பொண்ணுங்க பின்னாடி பார்த்தேன்..அவ்வளவுதான்” என்று எச்சரிக்கை செய்துவிட்டு சென்றனர். விக்னேஷிற்கு எப்பொழுதுமே வன்முறையில் விருப்பம் இருந்ததில்லை.எனவே அவனும் அவ்விரு பெண்களையும் அந்த கணமே மறக்க துணிந்துவிட்டான். தொடர்ந்து அவன் யாரையெல்லாம் காதலித்தானோ அவர்கள் எல்லோருமே ஆளுக்கொரு காதலனோடு திரிய அதில் கடுப்பானதன் விளைவாய் தோன்றியதுதான் இந்த மாத ப்ராஜெக்டுகள் திட்டம்.

விக்னேஷ் காதலுக்காக  பெண்களை தேர்ந்தெடுக்கும் வழிகளும் அதற்காக  அவன் சொல்லும் காரணங்களும் சுவாரசியமானவை.அதேப் போல் ஒரு பெண் தன்னை காதலிக்கிறாள் என்பதை அவன் ஊர்ஜிதப்படுத்தும் முறைகூட பயங்கரமாக இருக்கும். ஒருமுறை  பாத்ரூம் வாசலில் முண்டியடித்த கூட்டத்தோடு மன்றாடிக்கொண்டிருந்த என்னை மடக்கி ஒய்யாரமாய் சுவரில் சாய்ந்துக் கொண்டு மச்சான் இன்னைக்கு கிருபா சிவப்புக் கலர் சுடிதார் போட்டிருக்காடா.. நான் அவளை லவ் பண்ணலாம்னு இருக்கேன்..என்று ராஜக்குரலில் கம்பீரமாகச் சொன்னான். நான் திகிலில் உறைந்தே போனேன்.இன்னொரு நாள் அரக்க பறக்க  ஓடிவந்து தீப்தி  கால்ல பார்த்தேன்டா..ரோஸ் கலர் நெயில் பாலிஷ்..அவ என்னை சீரியஸா  லவ் பண்றான்னு நினைக்கிறேன் மச்சான்..” என்று மூச்சிரைக்க அவன் கூறிமுடிக்கவும்,அதிர்ச்சியில் என் கையிலிருந்த கிளாஸ் தண்ணீரோடு தவறி கீழே விழுந்து உருண்டது.

விக்னேஷின் காதல்களை கணக்கில்கொள்கையில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் யாதெனில் அவனின் அனைத்துக் காதல்களுமே வெற்றிபெறாதவை அதாவது ஒரு தலையானவை.வெறும் பார்வை என்பதைத் தாண்டி அதில் வேறெந்த விசேஷமும் கிடையாது.பைக்,பீச்,சினிமா போன்ற வழமைகளுக்கு வேலையே இல்லை.சுற்றி சுற்றி வந்து பெண்களை பார்ப்பதிலேயே அவன் முழு திருப்தியடைந்து விடுவான்.அதை தாண்டிய தேவையென்று அவனுக்கு எதுவும் கிடையாது.

பார்வை என்றதும் நீங்கள் ஏதோ சாதாரணமான காரியம் என்று நினைத்து விடக் கூடாது.ஒரு பெண்ணை பார்ப்பதற்கே அசாத்தியமான திறமைகள் வேண்டும். இதில் குரு கில்லாடி.தீவிரமாக காதலிப்பது என முடிவெடுத்து விட்டால் தனது கண்களில் கொஞ்சல் தோரணை தானாக ஏறும்படி பார்த்துக் கொள்வான்.திரும்பி பார்க்க வைப்பது மட்டுமே நோக்கம் என்றால்,முறைப்பான மிரட்டல் பார்வையில் எதிர்வரும் பெண்ணை அப்படியே துளைத்துவிடுவான்.மூன்றாவதாக ஒரு வகையுண்டு,அதில் குருவிற்கு ஒப்புதல் கிடையாது.வெறும் பார்த்தல் சுவைக்காக ஏங்கும் மூன்றாவது வகையினர் ஒளிந்து கொண்டு பார்ப்பவர்கள். அத்தகையவர்களின் கண்களில் அவர்கள் அறியாமலேயே ஒரு யாசகனின் பார்வை தோன்றிவிடும்.விக்னேஷை இந்த வகையில் அடக்கலாம்.

கல்லூரி தொடங்கி மூன்று மாதங்களிலிருக்கும்.அப்பொழுதுதான் ஓரளவிற்கு புதிய சூழலுக்கு பழகி சகஜமாகி நட்புறவுகள் அரும்ப ஆரம்பித்திருந்தன.எங்கள் குரூப்பில் குருவையும் ராஜேஷையும் தவிர வேறு யாருக்கும் பெண்கள் விஷயத்தில் அவ்வளவாக ஞானம் கிடையாது.ஒரு அழகான பெண் எங்களைக் கடந்துவிட்டால் கெட்டது.பொறைக்கு வாலாட்டும் நாயைப் போல ஆவென்று” வாயில் நீர் வழியே எங்கள் குரூப்பே அவளை துரத்த தொடங்கிவிடும்.இப்படி நாய் பிழைப்பே வாழ்ந்துக் கொண்டிருந்தால் எப்படி?அதற்கும் ஒரு மாற்றுவழி பிறந்தது.கல்லூரியில் நடந்த நடனபோட்டியின்போது நாங்கள் ஞானோதயம் அடைவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதுவொரு செவ்வாய்கிழமை.வசதியாய் அரங்கத்தின் கடைசி இரண்டு வரிசைகளை நாங்கள் ஆக்கிரமித்துக் கொண்டோம்.எங்களுக்கு பின்னாடி அலங்காரம் செய்வதற்கான ஒப்பனை அறை இருந்தது.அப்பொழுதுதான் அவள் அங்கே வந்தாள். வெள்ளைச் சுடிதார் அணிந்திருந்த நீளிடை அழகி.அவள் நடனம் பார்க்கும் பொருட்டு அந்த அறை வாசலில் நின்றிருக்க வேண்டும்.இல்லையெனில் அவளது தோழிகளில் யாரேனும் போட்டியாளராக இருந்து உள்ளே ஒப்பனை செய்துகொண்டிருக்கலாம். எது எப்படியோ அவள் அங்கே நின்றுக்கொண்டிருந்தாள் என்பதை தவிர அவளைப் பற்றி வேறெதுவும் எங்களுக்கு தெரியாது.ராஜேஷ்தான் முதலில் அவளை பார்த்தான். பார்த்ததும் மெதுவாய் என்னிடம் பின்னாடி பாரு மச்சி,அந்த வொயிட்டு” என்று கம்மிய குரலில் சொன்னான்நான்தான் காய்ந்து போனவனாயிற்றே..அடித்து பிடித்து சடாரென திரும்பி பார்த்தேன்.நொடியில் கவனித்தால் என்னோடு சேர்த்து ஆறு ஜோடி கண்கள் அவளை வெறித்துக் கொண்டிருந்தன.எல்லாவனும் காய்ந்துபோய்தான் இருந்தான்கள் போல. அவ்வளவுதான் அந்த பெண் விட்டால் போதுமென்று ஓடியே போய்விட்டாள். நடனப் போட்டி முடிவடையும் வரை அவளை எங்குமே காணமுடியவில்லை. என்ன மாமா அந்த ஃபிகர காணவே காணோம்” அரவிந்த் ஏமாற்றம் தோய்ந்த வார்த்தைகளில் கேட்டான்.த்தா அப்படியே கண்லயே கற்பழிக்கிற மாரி அத்தன பேரும் அடிச்சி பார்த்தா எப்படிர்றா இருப்பா”,அவள் போன ஆத்திரத்தில் கோபமாய் கத்தினான் ராஜேஷ்.அதற்கு பிறகுதான் நாங்கள் பார்வைகள் குறித்த பாலபாடங்களை கற்றுக்கொள்ள தொடங்கினோம்.இப்பொழுது நாய் பிழைப்பு கிடையாது.கௌவரமாக பெண்களை பார்க்க பழகிக்கொண்டோம்.காய்ந்து போன பார்வையில் மட்டும் எப்பொழுதுமே பெண்களை நோக்கக்கூடாது.அப்படி செய்துவிட்டால் அவர்கள் எளிதில் கண்டுபிடித்து நம்மை எளக்காரமாக நினைத்துவிடுவார்கள்.அதற்கு பிறகு அவர்கள் அகராதியில் நாம் கேணைக்கூதான் என்பான் குரு.  

பொதுவாக ஒரு குரூப் என்று இருந்தால் அதில் எப்படியும் ஒருவனது காதல் மட்டும்தான் வெற்றிப்பெற்றதாக இருக்கும்.மற்றதெல்லாமே தோல்விதான். ஒன்று காதல் மறுக்கப்பட்டிருக்கும்.அல்லது காதலை தெரிவித்திருக்கவே மாட்டான்கள். ஆனால் ஒவ்வொருவனுக்கும் ஒரு காதலி கட்டாயமாக இருப்பாள். இது எழுதப்படாத விதி.எங்கள் குரூப்பில் குரு தனது காதலில் வெற்றிக் கண்டிருந்தான்.ராஜேஷ் என்னதான் பெண்களின் உளவியலை புட்டுபுட்டு வைத்தாலும் அவன் எங்கள் கல்லூரியில் யாரையும் காதலிக்கவில்லை.பள்ளியில் உடன்படித்த பெண்ணையே இன்னும் காதலித்து வருவதாக சொல்லிக் கொண்டு அலைந்தான்.சரி நாம் குருவின் காதல் சமாச்சாரத்திற்கு வருவோம்.சாய்திவ்யாதான் அவனுடைய காதலி.காதல் பிராயத்தில் அவள் இவனுக்கு செய்த சேவகங்கள் இருக்கின்றனவே.அப்பப்பா!! அசைன்ட்மென்ட் எழுதி தருவது,ரெக்கார்ட் முடித்து கொடுப்பது,அவளுடைய வீட்டிலிருந்து இவனுக்கு மதியம் சாப்பாடு கொண்டு வருவது என இன்னும் நிறைய இத்யாதிகளை செய்து எங்களுக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்கினாள் மகராசி.அது மட்டுமில்லாது,வகுப்பு சமயங்களில் சைகை பாஷையிலேயே சம்பாஷணை வேறு.கம்யூனிகேஷன் தியரி வகுப்பில் காதர் சார் பாடமெடுக்கிறேன் என்கிற பெயரில் ஒருபக்கம் தாலியை அறுத்துக் கொண்டிருக்க,மறுபக்கம் இவர்கள் காதலிக்கிறேன் பேர்வழி என்று உயிரை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.இப்படியெல்லாம் நீண்டுக்கொண்டிருந்த இந்த அமரக்காதல் ஒரு சுபதினத்தில் முடிவிற்கு வந்தது. என்ன காரணம் என்ன எழவென்றே இறுதிவரை தெரியவில்லை.அரவிந்த் அவர்களது பிரிவுக்கு வாரமொரு காரணம் சொல்லிக்கொண்டிருந்தான்.

அரவிந்தும் எங்கள் குரூப்பில் ஒருவன்தான் என்றாலும் அவன் கொஞ்சம் விசேஷம்.எனவே அவனை பற்றிய ஒரு சிறுகுறிப்பு  இங்கே அரவிந்த்தான் எங்கள் குரூப்பின் தொடுக்கு’. தொடுக்குகள் இல்லாவிட்டால் நாட்டில் ஒரு பயலும் காதல் செய்யமுடியாது.ஒருவன் ஒரு பெண்ணை காதலித்தால்,அவளை அவன் எப்படி உஷார் செய்வான்?.அவள் போகுமிடமெல்லாம் பின்னால் போய்தானே. அப்படி அவளை தொடரும்போது தனியனாக போனால் கெத்தாகவா இருக்கும்?அதற்குதான் இந்த தொடுக்குகள்.இவர்கள் எப்பொழுதும் கூடவே இருப்பார்கள்.என்ன அவர்களுக்காக கொஞ்சம் செலவழிக்க வேண்டியிருக்கும்.அந்த தொடுக்கு’ அரவிந்த் எனும்பட்சத்தில் செலவு இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும்.எப்படியென்றா கேட்கிறீர்கள்?போனவாரம் நடந்த ஒரு விஷயத்தை சொன்னால்,உங்களுக்கே காரணம் பிடிபட்டுவிடும்.

எல்லோரும் சாயங்காலம் கல்லூரியை விட்டுக் கிளம்பிக்கொண்டிருக்கும் நேரம்.ஜகதீஷ் அன்றைய மாலைக்கான திட்டத்தை விவரிக்கத் தொடங்கினான்"மச்சி..நாலு மணிக்கெல்லாம் ஆவடி பஸ் ஸ்டாண்டுல நின்னோம்னு வையேன். அந்த 47சி ஃபிகர பார்த்துடலாம்.அப்புறம் அப்படியே ரயில்வே ஸ்டேஷன் போனா அங்க அருள் இருப்பான்."

ஜகதீஷ் நிறுத்தியதும்,அருள் திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை முன்வைத்தான் "ரயில்வே ஸ்டேஷன்ல அந்த எத்திராஜ் பொண்ணப் பார்த்துட்டோம்னா..எந்த எத்திராஜா? அதான்டா என் ஆளு..அந்த பிங்க் லாங்க்செயின் பேக்..ஆங்க்..அவதான். . அப்புறம் அங்கயிருந்து மறுபடியும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டோம்னா மணி அஞ்சரை ஆயிடும்.."

"அஞ்சரைக்கு பூந்தமல்லி பஸ் வந்துரும்.அந்த பாலிடெக்னிக் பொண்ணை.. ம்ம்..சுப்ரியாதான் மாமா..அவள பார்த்துட்டுக் கிளம்புனோம்னா படத்துக்கு சரியா டைமுக்குப் போயிரலாம்டா" –இது ராகவேந்திரா.

இவ்வளவையும் பொறுமையாய்க் கேட்டுக்கொண்டிருந்த அரவிந்த் எல்லோரும் பேசி முடித்ததும் கடைசியாக "கரெக்டு மச்சான்.முதல்ல பஸ் ஸ்டாண்டு போறோம் அங்க சென்னா சமோசா சாப்பிடுறோம்.அப்படியே ஷிப்டாகி ரயில்வே ஸ்டேஷன் வந்ததும் சாம்பார் வடை.அஞ்சரை ஆனதும் கிளம்பி மறுபடியும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பேக்கரியில சிக்கன் ரோல் சாப்பிடுறோம்..கே?" என்று திட்டத்தை தான் புரிந்துகொண்ட வகையில் எடுத்துரைத்தான்.

எல்லோரும் கலவரமாகி ஒரே சமயத்தில் பேந்தப் பேந்த முழித்து அவனைப் பரிதாபமாகப் பார்த்தான்கள்.ஆனால் வேறு வழியில்லை. அவன் சொல்வதைக் கேட்டுதான் ஆகவேண்டும்.ஏனெனில் தொடுக்குகள் என்பவர்கள் வெறுமனே ஒட்டிக்கொண்டு இருப்பவர்கள் மட்டுமல்ல.கொஞ்சம் விவகாரமானவர்களும்கூட.

இப்பொழுது நீங்கள் சாலையில் ஒரு நண்பரோடு நடந்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.யாரோ முன்பின் தெரியாத ஒரு அழகிய பெண் உங்களை கடந்துச் செல்கிறாள்.அறிமுகமேயில்லாத அவளைக் கைதட்டியோ அல்லது விசிலடித்தோ நீங்கள் அழைத்துவிடுகிறீர்கள்.அவள் திரும்பவும் இவர் உங்களை காதலிக்கிறாராம்’ என்று உங்கள் நண்பரை கைகாட்டிவிட்டு,பின்னர் யாருக்கு வந்த விதியோ என்று எதுவுமே நடக்காதது போல் உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு செல்கிறீர்கள்.இது உங்களுக்கு நிஜத்தில் சாத்தியமா?ஆனால் இந்த தொடுக்குகள் இதை சர்வசாதாரணமாக செய்வார்கள்.இந்த பண்பின் அடிப்படையிலேயே காதலுக்கான தூதுவர்களாக இவர்களே பெரிதும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

சரி இவ்வளவு தூரம் கதை பேசிக்கொண்டே வந்துவிட்டோம்.நெருக்கமான நண்பராகிவிட்ட உங்களிடம் சொல்ல என்ன இருக்கிறதுநானும் துரதிருஷ்டவசமாக ஒரு பெண்ணைக் காதலித்து தொலைத்தேன். நான்காவது ரௌண்டுக்குப் பிறகு காதல் கதை சொல்வது நாகரீகம் இல்லையென்றாலும் கேட்பது நீங்கள் என்பதால் தொடர்கிறேன்.அவளும் எங்கள் கல்லூரிதான்.பெயர் எல்லாம் தேவையில்லை. கை லேசாய் நடுங்குவது மாதிரி தெரிகிறது.மனதிலிருப்பதை அப்படியே கொட்டலாமென தான் முந்தைய வரிவரை நினைத்திருந்தேன்.இனி முடியாதுபோல் இருக்கிறது.சுருக்கமாக சொல்கிறேன்.நான் போய் அவளிடம் காதலை தெரிவித்தேன்.அன்று வெயில் பலமாக அடித்ததாக நினைவு.அவள் சம்மத்தித்திருக்கலாம் அல்லது பிடிக்கவில்லையென்றால் நாகரீகமாக மறுக்கக்கூட செய்திருக்கலாம்.பிரச்சனை அதோடு போய்விட்டிருக்கும்.அந்த பாழாய்ப் போனவளுக்கு என்ன நேர்ந்ததோ கடகடவென அழ ஆரம்பித்துவிட்டாள்.அவள் காறித் துப்பியிருந்தாள்கூட நான் கவலைப் பட்டிருக்கமாட்டேன். அவள் அழுததை பார்க்கவும் எனக்கு என்னவோ போலாகிவிட்டது.அதற்கு பிறகு நான் அவளை பார்ப்பதையே முற்றிலுமாக தவிர்த்துவிட்டேன். 

வெளியே என்னவோ சத்தம் கேட்கவும் நானும் ஜகதீஷும் வாசலுக்கு வந்தோம். சாலையோரத்திலிருந்த த்ரிஷாபடம் போட்ட டாட்டா இண்டிகாம் பேனர் முன் நின்றுகொண்டு நான்கு இளைஞர்கள்-என் வயதுதான் இருக்கும் அவர்களுக்கும்- சலம்பல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.நிறைபோதை என்பது பார்த்தவுடனே தெரிந்துவிட்டது. சிறிது நேரத்திற்குள் அவர்களில் கருப்பு சட்டை அணிந்திருந்த ஒருவன் சத்தம்போட்டு அழத் தொடங்கினான்.அழுகையினூடே த்ரிஷா படத்தை கைகாட்டி என் அஞ்சல மச்சான் அவ..” என்ற புலம்பல் வேறு.த்ரிஷா அவனுக்கு எந்த தீபிகாவாக எந்த வினோதினியாக காட்சி தருகிறாரோ.. தெரியவில்லை. ஆமாம் கேட்க மறந்துவிட்டேன்.நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களாசும்மா சொல்லுங்கள்.நான் அதை கதையாக எல்லாம் எழுதிவிடமாட்டேன்.
*****
துரோணா.

Wednesday, March 14, 2012

இரண்டு கவிதைகள் – சொல்வனம் இணைய இதழில் வெளியானவை


மழை நினைவு

ஒருபொழுதும் கடக்கவியலாத 
பாதைகளை நீர்க் குமிழ்களாக்கி
காற்றில் பறக்கவிடுவது 
எப்படியென யோசித்துக் கொண்டிருக்கையில்
சாயுங்காலம் மழை பெய்யலாம்
என்று யாரோ சொல்வது
தெளிவில்லாமல் கேட்கிறது
அவ்வளவு ஏக்கத்தோடு 
வானத்தை பார்க்க தொடங்குகிறேன்
*******


ஒரு மிடறு நஞ்சு

கண்ணீர் தவிர வேறெதுவுமில்லாத
இரவிலிருந்து வெளிப்படும் 
வன்மத்தை எரிக்க
ஓராயிரம் காடுகளை
தீயிட வேண்டும்


நினைவுகளில் எரியும் நெருப்பு
நினைவுகளாய் எரியும் நெருப்பு
நினைவுகளை எரிக்கும் நெருப்பு


எந்த நெருப்பும்
நெருப்பைப் போலவே இல்லை
எந்த நினைவும்
நினைவைப் போலவே இல்லை
நெருப்பைவிட அதிகமாய் எரியும்
வேறேதோவொன்று
நினைவைவிட அதிகமாய் கனக்கும்
வேறேதோவொன்று
 *******
 துரோணா
 http://solvanam.com/?p=19518 


Tuesday, March 13, 2012

பால்(சிறுகதை) -மனோஜ்

 ஆசிரியர் குறிப்பு : எஸ்.மனோஜ் குமார் 1965இல் மதுரையில் பிறந்தார்.இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் சிறுகதைகள் எழுதி வருகிறார்.மிகை புனைவினை அற்புதமாக கையாளும் சிறுகதை எழுத்தாளர்  என்பது கூடுதல் தகவல். 'புனைவின் நிழல்' 'சுகுணாவின் காலை பொழுது' ஆகிய இரண்டு முக்கியமான சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் மனோஜ் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர்.அத்தகைய ஒருவரது  சிறுகதையை எனது வலைத்தளத்தில் பதிவிடுவதை எண்ணி  பெருமகிழ்ச்சி அடைகிறேன் ."பால்" எனும் இச்சிறுகதையில் நிகழும்  மாயக் கதையாடல் அற்புதமான வாசிப்பனுபவத்தை வழங்கும் என்பதற்கு நான் உத்திரவாதம். இச்சிறுகதையை எனது வலைத்தளத்தில் வெளியிட அநுமதி அளித்த மனோஜிற்கு நன்றிகள்.
                                                  ***********
நிர்வாண உடலின் இளம்சூடும் வியர்வை மணமும் கிறக்கத்தின் லாகிரி அளவைக் கூட்டின.உடலில் பதட்டம்,நடுக்கம் தந்தியடி போலப் பரவியிருந்தது.என் நெஞ்சில் அழுந்தி பிதுங்கி பக்கவாட்டுகளில் வழிந்து வீங்கியிருந்தன அவளது முலைச் சதைகள்.நின்ற நிலை.புஜம் பிடித்து மெல்ல அவளை பிரித்தேன்.இப்போது அணைப்பில் மூர்க்கம் இல்லை.இதம்.
மெல்ல நடத்தி கட்டிலில் கிடத்தினேன்.அடர்ந்து பரந்த அவளின் கூந்தல்,தோகை போல மெத்தையில் பரவியிருந்தது.லயித்துச் செருகியிருந்தன கண்கள். உடற்சூடு இன்னும் கூடியிருந்தது.ஸ்தனங்கள் விம்மிக் குவிந்து பொலிவில் மின்னின.கருத்த காம்புகள் புடைத்து நின்றன.சுட்டுவிரலில் இடக்காம்பு தொட்டு வருடினேன். தொடுதலில் நெகிழ்ந்து இளகி கரைந்தது காம்பு.நொடிகளின் அவகாசத்திற்குப் பின் மறுபடி புடைத்து எழுந்தது.அவளின் மேல் சரியும் அத்தருணத்தின்போதுதான் அதை உணர்ந்தேன்.திரவ ஸ்பரிசம்.திடுக்கிட்டு பார்க்கையில் அவளின் இரு தொடைகளும் கரைந்து ஒழுகி ஓடிக்கொண்டிருந்தன.பிரசவமான நாய்க் குட்டிகளிடம் இருந்து எழும் மணம் அறையை சூழ்ந்தது.அவளின் கால்கள் வழிந்து நீராய் ஓடிக்கொண்டிருக்கிறது. மெத்தையின் பஞ்சு அதை உள்வாங்கியது.திரவம் உறிஞ்சிய தடம் வெண்விரிப்பில் பழுப்பு திட்டாய்ப் படர்ந்திருக்கிறது.

பயத்தில் மார்பு படபடக்க கட்டிலில் இருந்து குதித்திறங்கி அவளின் முகம் பார்க்கிறேன்.அங்கு முகம்  இல்லை.தோகையாய்ப் படர்ந்த கூந்தல் கருகிக் குவிந்திருக்கிறது. முகம் கரைந்து ஒழுகி ஓடிக்கொண்டிருக்கிறது.கட்டிலின் இடப்புற விளிம்போரம் உருண்டோடிக்கொண்டிருந்த அவளின் ஒரு கண் கருமணி என்னை உற்று நோக்குவது போல் பட்டது.நிமிடத்துள் அதுவும் கரைந்து அமிழ்ந்தது. 

திரவ ஓட்டங்களின் இடையில் மெத்தையில் இப்போது இரு முலைகள் மாத்திரமே இருந்தன.செழித்துக் கொழுத்த முலைகள்.என் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டியிருந்தது.முலைகளின் மீதிருந்த பார்வையை அகற்ற முடியவில்லை.தலை மின்னியது.மயங்கிச் சரியப்போகிறேன் எனப் பட்டது.தடுமாறிக் கட்டிலில் அமர்ந்தேன். பிருஷ்டத்தை ஈரம் நனைத்தது.ஆனாலும் முலைகளின் மீதான பார்வை அகலவில்லை.பார்த்துக்கொண்டிருக்கும்  போதே இரு காம்புகளிலும் ஒரே நேரத்தில் சலனம் தோன்றியது.காம்பின் கண்கள் பெரிதாயின.வலக்காம்பில் முதலில் பொட்டாய்ப் பால் துளிர்த்தது.பின் எல்லா கண்களிலும் பால் பொட்டு முகிழ்த்தது. மெல்ல பெருகியது.ஐந்து நிமிட இடைவெளிக்கு பின் இட முலையின் கண்களிலும் பால் பெருக்கம்.நொடி பொழுதுகளில் நீரூற்றுப் போல் பால் பீய்ச்சி அடித்தது. சீரான சப்தத்துடன் பாலூற்று பீய்ச்சிக்கொண்டிருந்தது. மாரடைத்தது. மெத்தையில் கவிழ்ந்தேன்.பால் மெத்தை.இளம் பாலின் மணம்.பாலூற்று விடாது வர்ஷித்தது. அறையெங்கும் பால் பெருகியோடிற்று.கிழக்குச் சுவரோரம் வைத்திருந்த மரப்பெட்டியின் அடியில் இருந்து கரப்புகள் பயந்து ஓடின.கருகிய கூந்தல் பாலில் மிதந்தபடி வழிந்து சென்றது.

இருக்க முடியாது.இதோ,மனதை ஒருமைப்படுத்தி தலையை உலுக்கி எழுந்தேனானால் அனைத்தும் கனவென்று உறுதியாகிவிடும். ஒருக்களித்து கிடந்திருக்கும் நான் இடக்கை தூக்கி தடவினால்,புணர்ந்தோய்ந்து உறங்கும் ராதாவின் சூடாறிய தொடைகள் தட்டுப்படும்.அப்போது உறுதியாகிவிடும் இப்பாலூற்றெல்லாம் பிரமையென்று.ஆனால்,தலை உலுக்கி எழுந்தாலும் சீரான சப்தத்துடன் பாலூற்று பீய்ச்சிக்கொண்டிருக்கிறது.அறையில் இரண்டு அடிக்கு பால் நிரம்பியிருந்தது.பாலில் நனைந்து கட்டிலும் மெத்தையும் வெளுத்து துலங்கின. திடீரென சிரிப்பொலி கேட்டது.நவநீதனின் மழலை சிரிப்பொலி.

கடாயில் பால் காய்ந்துகொண்டிருந்தது.பெருங்கடாய்.இருபது படி பிடிக்கும். விறகை செருகுவதும் நீண்ட கரண்டியால் பாலைக் கிளறுவதுமாக இருப்பது அவஸ்தையாகத்தான் இருக்கிறது. இப்போதெல்லாம் முற்றத்தில்தான் பால் காய்ச்சுவது.பின்கட்டில் வேலை நடந்துக் கொண்டிருந்தது. தோட்டத்தை ஒட்டி இரண்டு அறைகள் எழும்பிக்கொண்டிருந்தன.பணத்துக்குக் குறைவில்லை. தாராளம். நவநீதன் பிறந்த பிறகுதான் செல்வ செழிப்பு. பால் பெருகியது.

"...ங்கா...ப்ப்பா...” நவநீதன் வாசல் நோக்கி வந்து கொண்டிருந்தான். எட்டு மாதத்திலேயே தவழ்வதில் வேகம்.வலக்கை தரையில் மடித்து,அழுத்தி, வயிற்றை எக்கித் தள்ளி தவழ்வான்.அவனது வேகத்தைப் பார்த்து சிரிப்பு வந்தது.தலைப்பா கட்டுத் துண்டை அவிழ்த்து முகம் துடைத்தேன்.”ன்னாடா பயலே....ந்தா ராதா,படிகிட்ட வந்துட்டாம் பாரு”.

அடுக்களையில் இருந்து வெளிப்பட்ட ராதாவுக்கு நெற்றியெங்கும் வியர்வை பொடிந்திருந்தது.சேலையைத் தூக்கிச் செருகியிருந்தாள்.கொலுசுகள் சிணுங்கிட சின்ன ஓட்டத்துடன் வந்து நவநீதனை அள்ளினாள்.”வாலு,வாலு....ஒரு இடத்துல நிக்க மாட்டியே”.உயர தூக்கி வயிற்றில் முத்தினாள்.

“கொஞ்சம் பிடிங்களேன்.அடுப்புல ரசம் கொதிக்குது.”

வியர்த்து பிசுபிசுத்திருந்தன. எனது கைகள்.குழந்தையைத் தூக்க கரங்கள் நீட்டினேன். பொக்கைச் சிரிப்பில் தாவி வந்தான்.வெள்ளி அரைஞாண் வயிற்றுக்கு ஏறிக் கிடந்தது. பிருஷ்ட இடப்பாகத்தில் கரும்பச்சை மரு அருகே எறும்பு ஒன்று ஒட்டிக்கிடந்தது. கையால் தட்டிவிட்டு நவநீதனை உயரத் தூக்கி போட்டு பிடித்தேன்.”ங்ங்ங்கா...” ஒலியோடு அவன் கண் விரியச் சிரிப்பது ரசமாயிருந்தது.ராதா நிலையருகே நின்று ரசித்தாள்.”குடல் ஏறப்போகுது” என்றாள்.எனக்கு உற்சாகம் பீறிட்டது.இன்னும் சற்று உயரே தூக்கிப் போட்டு பிடித்தேன்.கரத்தில் விழுந்ததும் நவநீதன் துள்ளினான்.பிடி வழுக்கித் தவறினான்.என் கால் அருகே கொதித்துக் குமிழியிட்டுக் கொண்டிருந்த கடாய்ப் பாலில்...எந்த சப்த வகைக்குள்ளும் அடங்காத நவநீதனின் பெருங்கேவலொலி கேட்டது.நிலை தாண்டி அலறியபடி ராதா துடித்து ஓடி கடாயில் விழுந்து அள்ளுவது தெரிந்தது.கடாய் கவிழ்ந்து அவள் கூந்தலும் முகமும் செந்தணலினுள் கிடப்பது மங்கலாய்....நினைவெனக்கு தப்பிக்கொண்டிருந்தது.

மூர்ச்சை தெளியும்போது பசிய வாழை இலையில் நவநீதனைக் கிடத்தியிருந்தனர். நவநீதன் அல்ல அது.பாலில் வெந்து குழைந்த பிண்டம்.ஊர் திரண்டிருந்தது.தூணில் ராதா முட்டி முட்டி அலறியழுதபடி இருந்தாள்.அவளை பார்ப்பதற்கு பயங்கரமாய் இருந்தது.தீயில் கருகிய முகம்.சுவற்றில் முட்டியதில் நெற்றி உடைந்து குருதி ஒழுகிக்கொண்டிருந்தது.அருகிருந்த பெண்கள் அவளை கட்டுப்படுத்த பிரயாசைப்பட்டுக்கொண்டிருந்தனர்.அந்த இடத்தில் விநோத மணம் வீசியது. கலவையான மனம்.கிழங்கு சுட்ட மணம்.நாய் பிரசவித்த மனம்.

பாலூற்று நிற்கவில்லை.ஆனால் வேகம் தணிந்திருந்தது.கட்டில் பாலில் மிதந்து மெல்லிய அலை போல் ஆடியபடி இருந்தது.என் நினைவு என் வசம்தான் இருக்கிறதா என்ற ஐயம் எழுந்தது.மனதில் துயரம் ஒரு பந்துபோல் அடைத்திருந்தது. ஏதாவது ஒரு இழை தெளிவு கிடைத்தால்கூட போதுமென்றிருக்கிறது.

சமுத்திரக் கரையில் நிற்பது போல் சப்தம் கேட்கிறது.என் கனவோ அன்றி நனவோ ஆன நிலையின் மெல்லிய சவ்வைக் கிழித்து ஏதோ நுழைவது போலிருக்கிறது. சமுத்திர பேரிரைச்சலை இப்போது தெளிவாக கேட்கமுடிகிறது.சவ்வு முழுதாய்க் கிழிந்துவிட்டதோ?ஆ,என்ன பிரம்மாண்டம்!மாபெரும் சமுத்ரம்.முழுதும் வெளுத்த ஆங்கார அலையடிக்கும் சமுத்ரம்.பால் சமுத்ரம்.அலைகளினூடே கரிய புள்ளி போல் ஏதோ தெரிகிறது.வாலிபன் ஒருவன் கைகள் வீசி,கால்கள் அடித்து நீந்தி வருகிறான். நிதானமான,ஒரே வேகத்திலான நீச்சல்.வனப்பும் திரட்சியுமான வாலிபன் போலிருந்தது.கரையடுத்து வந்துவிட்டான்.உடலெங்கும் வழிந்தொழுகும் பாலுடன் அவன் கரையில் நடந்துவருகிறான்.பூர்ண நிர்வாணம்.கிரேக்க சிற்பம் போலிருக்கிறது அவனது தேகக்கட்டு.மயிர் பிடரியில் வழிகிறது.நெடுந்துயர்ந்த உருவம்.என்னை பார்த்து சிரிக்கிறான்.பால் தோற்கும் வெளுப்பில் பற்கள் மிண்ணுகின்றன.

அவனது குரல் மயக்குவதாய் இருக்கிறது.’தவறு நேர்ந்துவிட்டது.மன்னிக்க வேண்டும். எனது கனவின் எல்லை விரிந்து பரந்துவிட்டது.மற்றொரு கனவில் குறுக்கீடு செய்துவிட்டேன்.தயைகூர்ந்து மன்னித்தருள வேண்டும்’ என்றான்.

என் வியப்பு இன்னும் அகலா நிலையில் அவனுக்கு என்ன பதிலை சொல்வதென்று எனக்கு தெரியவில்லை,மிடறு விழுங்கிச் சொன்னேன்.’நான் இன்னும் தீர்மாணிக்கவில்லை.மயக்கம் நீடிக்கிறது...’

என் பதிலை அவ்விளைஞன் எதிர்பார்த்ததாய்த் தோன்றவில்லை.சிரசு தாழ்த்தி வணங்கி ‘வருகிறேன்’ என்றான்.எனக்கு அவனை போக சொல்வதற்கு இஷ்டமில்லை. என்றாலும் வாளாவிருக்கிறேன்.அவன் திரும்பி பால் சமுத்ரம் நோக்கி நடக்கிறான். ராஜனுக்கே உரிய கம்பீர நடை.உடலில் பால் ஒழுகி ஓடிக்கொண்டிருக்கிறது. வழியும் பாலின் மறைப்பில் அவன் இடப் பிருஷ்டத்தில் கரும்பச்சை மரு மங்கலாய் தெரிந்தது.
***********

பி.கு:'சுகுணாவின் காலை பொழுது" தொகுப்பிற்கு நான் எழுதிய விமர்சனக் கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்