Tuesday, November 16, 2010

இரை


வலி வேண்டும் கோரப் பசியினை
தன் நாவினில் படரவிட்ட, ஓநாய்கள்
இரத்தவாடை கண்டு
உங்களை துரத்துகின்றன

நீங்கள் சிங்கமோ சிறுத்தையோ கிடையாது
எனவே ஓடுவதை தவிர உங்களுக்கு
வேறெந்த வழியும் தோன்றுவதில்லை

அந்த ஓநாய்களுக்கு
எப்படி புரியவைப்பீர்கள்?
உங்களுக்கு கவிதையெழுத தெரியும் என்பதை
ஓநாய்களுக்கு காகிதம் தேவையில்லை
ஏனெனில் அவற்றில் இரத்தம் இருப்பதில்லை

அந்த ஓநாய்களுக்கு
எப்படி புரியவைப்பீர்கள்?
ஆதாரம் வேறு நிகழ்வு வேறு என்பதை
ஓநாய்களுக்கு சாட்சியங்கள் தேவையில்லை
ஏனெனில் அவை ஆய்வாளர்களாக இருப்பதில்லை

ஓநாய்கள் ஒன்றும் தீர்ப்பு எழுதும் நீதிபதிகள் அல்ல
அவை தூக்குக் கயிறுகள்...
ஓநாய்கள் ஒன்றும் இயேசுவின் சீடர்கள் அல்ல
அவை சிலுவைகள்.....

தனது கூரிய நகங்களால்
உங்களது சதை நரம்புகளை
அறுத்தெறிய அவை அலைகின்றன

திடமான வாக்குறுதியின் அவநம்பிக்கையுடன்
புகைக்கும் அப்பாவின் கோபத்துடன்
ப்ரூட்டஸ் வாளின் சாபத்துடன்
பிறழ்வின் ஒழுங்கற்ற வார்த்தைகளுடன்
உங்கள் சாலையின் பாதையெங்கும்
பதிந்திருக்கின்றன அந்த ஓநாய்களின் கண்கள்.....

அதுவொரு கேள்வியென்றோ
அதுவொரு எதிர்பார்ப்பென்றோ
அதுவொரு உரிமையென்றோ
நீங்கள் நம்பிவிடாதீர்கள்....

அப்பொழுதென்று, மறந்துவிட்ட
பைபிளின் வசனங்களையோ
கீதையின் தத்துவங்களையோ
நினைவுபடுத்திக் கொண்டிருக்காதீர்கள்....

அந்த ஓநாய்களை பொருத்த மட்டில்
நீங்கள் பிரசங்கியோ\காரணியோ கிடையாது
வெறுமனே இரத்தம் கொண்டிருக்கும் இரை...
எனவே எழுந்து ஓடுங்கள்
அது கனவாய் இருப்பினும் பரவாயில்லை
ஓநாய்கள் உங்களை துரத்துகின்றன......

2 comments:

Anonymous said...

நல்லாருக்கு

துரோணா said...

மிகுந்த நன்றிகள்

Post a Comment