யாரோ ஒருவரது கதையின்
எழுதப்படாத பக்கங்களிலிருந்து
தவறிவிழுந்த வயதான மனிதர் அவர்
எந்த புனைவிலும்
முழுமையாய் சொல்லப்படாத
ஒரு வாழ்க்கையோடு
நம் நகரத்தின் தெருக்களில்
மெலிந்த நிழல்களின் ஊடே அவர்
அலைந்து கொண்டிருக்கிறார்
அவரது உடலில் அரிசி மண்டி வாடையடிக்கிறது
யாரிடம் கொடுப்பதென்று தெரியாமல்
பழைய செய்திதாளில் பொட்டலம் கட்டிய
தன் வாழ்க்கையை அழுத்தி பிடித்தபடி
ஜன்னலோர ரயில்
இருக்கையில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்
கிட்னியில் கல் வளர்ந்திருக்கிறது
சர்க்கைரை நோயுடன் சேர்த்து
நேரத்திற்கு சாப்பிடாததால்
வயிறு வேறு புண்ணாகி போயிருக்கிறது
ரொம்ப நாட்களுக்கு முன்னர்
தன் வீட்டு மொட்டை மாடியில்
செங்கற்களினாலான பெரிய தொட்டியில்
அம்பாரமாய் மணல் கொட்டி
நிறைய ரோஜாப் பூக்கள் நட்டு வைத்திருந்தார்
எப்பொழுது பார்த்தாலும்
மனைவியோடு சண்டைதான்
அவளுக்கு சமைக்க தெரியாது
அவளுக்கு அறிவு கிடையாது
ஒரு பெரிய சரிவின்முடிவில்
நடுத்தெருவில் நிற்க நேர்ந்தபோது
மனைவி மட்டும் உடனில்லையென்றால்
என்னவாகியிருப்போம்
சமைக்க தெரியாத அறிவே இல்லாத
மனைவியின் கருத்த கைகள்
தோளை பற்றுவதாக உணர்ந்தவர்
அதிர்ந்து கண் விழித்தார்
ஆளற்ற ரயிலில்
ப்ளாஸ்டிக் கவர்களும்
காய்ந்த பழத் தோல்களும் அசைவற்றிருந்தன
எவ்வளவு காலங்கள் காத்திருந்தும்
தொட்டியில்
ஒரு ரோஜாப்பூக்கூட மலரவேயில்லை
மகனை படிக்க வைத்தார்
மகனின் நண்பர்கள்
அவரை அவனது தாத்தா என்று நினைத்தனர்
இருந்தும் மகனுக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும்
அது கடைசிவரையிலும் அவருக்கு தெரியவேயில்லை
அவர் நினைத்தார்
அவர் ஆசைப்பட்டார்
அவர் கனவுகண்டார்
எப்பொழுதேனும் நம் வாழ்க்கைக்குள்
நாம் நுழைந்துவிடுவோமென
ஆஸ்பத்திரி வீச்சம் மூச்சுமுட்ட
எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல்
அவர் கிளம்பி வந்துவிட்டார்
போன வாரத்தில் ஒருநாள்
அவரது 72 வயது சின்னமாமா
புற்றுநோயில் தொடையிடுக்கு சதையழுகிப்போக
ரணமும் வலியும் தாளாது
ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்
சுருங்கிய தசையின் மீதேறி
ரத்தமாய் பாய்ந்து மறைந்தது ரயில்
தனக்கேன் புற்றுநோய் வராமல் போனது
என யோசித்தபடியே தண்டவாளத்தையொட்டி
நடந்துக் கொண்டிருக்கிறார் அவர்
இரண்டு பக்கங்களிலும் பெருகும்
கூவம் நதியில் பூத்து குலுங்குகின்றன
அன்பின் நீல வண்ன ரோஜா மலர்கள்
1 comment:
மனதை ரணமாக்கிய வரிகள்...
Post a Comment