Tuesday, October 2, 2012

என் வானம் கடல்


போர்க்களத்தில் பிணங்களுக்கிடையே
தனித்திருந்த என்னை
இராணுவத்தினர் சிறைபிடித்து
கடலுக்குள் இழுத்துச் சென்றனர்
நடுக்கடலில் மிதந்துக்கொண்டிருக்கிறான் அரசன்
இராணுவச் சிப்பாயொருவனின்
பூட்ஸ் கால்களைப் பற்றிக்கொண்டழுத
பூர்வீக கடல் ஞாபகங்கள்
என் பிரக்ஞையை தொட்டு மீள்கின்றன
அரசனுக்கென்று யாருமில்லை
அவனிடம் இப்பொழுது மீதமிருப்பது
ஒருப்பிடி கடற்கரை மணல் மட்டுமே
கொலையுண்டவர்கள் யாவரும்
உயிர்பெற்று எழும்புகிறார்கள்
நிர்வாண பிணங்கள்
துப்பாக்கிகள் ஏந்தியபடியும்
கூர்வாட்கள் ஏந்தியபடியும்
புத்தகங்கள் ஏந்தியபடியும்
மதுகோப்பைகள் ஏந்தியபடியும்
பைத்தியம் போல் பிதற்றிக்கொண்டும்
வெறிபிடித்த மாதிரி சிரித்துக் கொண்டும்
போர்க்களத்தினில் அங்குமிங்கும்
அலைந்து திரிகின்றன
கடல் அரசனை நோக்கி நகர்ந்து வந்தது
நான் கடைசியில் அந்த முடிவையே தேர்ந்தெடுத்தேன்
மதுப்போத்தலில் மீதமிருந்த சாராயத்தை
ஒரே மூச்சில் குடித்து தீர்த்துவிட்டு
காலி போத்தலை கடலை நோக்கி
ஆக்ரோஷமாய் வீசியடிக்கிறான் அரசன்
சின்ன சின்னதாய் மீன்கள்
வானத்திலிருந்து பறந்து வந்து
கடலுக்குள் பாய்ந்து மறைகின்றன
கடல் அரசனை ஏற்றுக்கொண்டது
பேரலைகளால் கரையொதுக்கப்பட்ட
எனது பிணத்தின்மேல் புழுக்கள் நெளிகின்றன
அரசன் பறவையாகி கடலுக்குள் நீந்துகிறான்
என் வானம் கடல்

நன்றி: http://www.vallinam.com.my/issue45/poem1.html

No comments:

Post a Comment