Wednesday, March 14, 2012

இரண்டு கவிதைகள் – சொல்வனம் இணைய இதழில் வெளியானவை


மழை நினைவு

ஒருபொழுதும் கடக்கவியலாத 
பாதைகளை நீர்க் குமிழ்களாக்கி
காற்றில் பறக்கவிடுவது 
எப்படியென யோசித்துக் கொண்டிருக்கையில்
சாயுங்காலம் மழை பெய்யலாம்
என்று யாரோ சொல்வது
தெளிவில்லாமல் கேட்கிறது
அவ்வளவு ஏக்கத்தோடு 
வானத்தை பார்க்க தொடங்குகிறேன்
*******


ஒரு மிடறு நஞ்சு

கண்ணீர் தவிர வேறெதுவுமில்லாத
இரவிலிருந்து வெளிப்படும் 
வன்மத்தை எரிக்க
ஓராயிரம் காடுகளை
தீயிட வேண்டும்


நினைவுகளில் எரியும் நெருப்பு
நினைவுகளாய் எரியும் நெருப்பு
நினைவுகளை எரிக்கும் நெருப்பு


எந்த நெருப்பும்
நெருப்பைப் போலவே இல்லை
எந்த நினைவும்
நினைவைப் போலவே இல்லை
நெருப்பைவிட அதிகமாய் எரியும்
வேறேதோவொன்று
நினைவைவிட அதிகமாய் கனக்கும்
வேறேதோவொன்று
 *******
 துரோணா
 http://solvanam.com/?p=19518 


2 comments:

மதி said...

nice poems

Unknown said...

miga arumai, thodarnthu ezhuthungal

Post a Comment