Tuesday, March 13, 2012

பால்(சிறுகதை) -மனோஜ்

 ஆசிரியர் குறிப்பு : எஸ்.மனோஜ் குமார் 1965இல் மதுரையில் பிறந்தார்.இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் சிறுகதைகள் எழுதி வருகிறார்.மிகை புனைவினை அற்புதமாக கையாளும் சிறுகதை எழுத்தாளர்  என்பது கூடுதல் தகவல். 'புனைவின் நிழல்' 'சுகுணாவின் காலை பொழுது' ஆகிய இரண்டு முக்கியமான சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் மனோஜ் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர்.அத்தகைய ஒருவரது  சிறுகதையை எனது வலைத்தளத்தில் பதிவிடுவதை எண்ணி  பெருமகிழ்ச்சி அடைகிறேன் ."பால்" எனும் இச்சிறுகதையில் நிகழும்  மாயக் கதையாடல் அற்புதமான வாசிப்பனுபவத்தை வழங்கும் என்பதற்கு நான் உத்திரவாதம். இச்சிறுகதையை எனது வலைத்தளத்தில் வெளியிட அநுமதி அளித்த மனோஜிற்கு நன்றிகள்.
                                                  ***********
நிர்வாண உடலின் இளம்சூடும் வியர்வை மணமும் கிறக்கத்தின் லாகிரி அளவைக் கூட்டின.உடலில் பதட்டம்,நடுக்கம் தந்தியடி போலப் பரவியிருந்தது.என் நெஞ்சில் அழுந்தி பிதுங்கி பக்கவாட்டுகளில் வழிந்து வீங்கியிருந்தன அவளது முலைச் சதைகள்.நின்ற நிலை.புஜம் பிடித்து மெல்ல அவளை பிரித்தேன்.இப்போது அணைப்பில் மூர்க்கம் இல்லை.இதம்.
மெல்ல நடத்தி கட்டிலில் கிடத்தினேன்.அடர்ந்து பரந்த அவளின் கூந்தல்,தோகை போல மெத்தையில் பரவியிருந்தது.லயித்துச் செருகியிருந்தன கண்கள். உடற்சூடு இன்னும் கூடியிருந்தது.ஸ்தனங்கள் விம்மிக் குவிந்து பொலிவில் மின்னின.கருத்த காம்புகள் புடைத்து நின்றன.சுட்டுவிரலில் இடக்காம்பு தொட்டு வருடினேன். தொடுதலில் நெகிழ்ந்து இளகி கரைந்தது காம்பு.நொடிகளின் அவகாசத்திற்குப் பின் மறுபடி புடைத்து எழுந்தது.அவளின் மேல் சரியும் அத்தருணத்தின்போதுதான் அதை உணர்ந்தேன்.திரவ ஸ்பரிசம்.திடுக்கிட்டு பார்க்கையில் அவளின் இரு தொடைகளும் கரைந்து ஒழுகி ஓடிக்கொண்டிருந்தன.பிரசவமான நாய்க் குட்டிகளிடம் இருந்து எழும் மணம் அறையை சூழ்ந்தது.அவளின் கால்கள் வழிந்து நீராய் ஓடிக்கொண்டிருக்கிறது. மெத்தையின் பஞ்சு அதை உள்வாங்கியது.திரவம் உறிஞ்சிய தடம் வெண்விரிப்பில் பழுப்பு திட்டாய்ப் படர்ந்திருக்கிறது.

பயத்தில் மார்பு படபடக்க கட்டிலில் இருந்து குதித்திறங்கி அவளின் முகம் பார்க்கிறேன்.அங்கு முகம்  இல்லை.தோகையாய்ப் படர்ந்த கூந்தல் கருகிக் குவிந்திருக்கிறது. முகம் கரைந்து ஒழுகி ஓடிக்கொண்டிருக்கிறது.கட்டிலின் இடப்புற விளிம்போரம் உருண்டோடிக்கொண்டிருந்த அவளின் ஒரு கண் கருமணி என்னை உற்று நோக்குவது போல் பட்டது.நிமிடத்துள் அதுவும் கரைந்து அமிழ்ந்தது. 

திரவ ஓட்டங்களின் இடையில் மெத்தையில் இப்போது இரு முலைகள் மாத்திரமே இருந்தன.செழித்துக் கொழுத்த முலைகள்.என் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டியிருந்தது.முலைகளின் மீதிருந்த பார்வையை அகற்ற முடியவில்லை.தலை மின்னியது.மயங்கிச் சரியப்போகிறேன் எனப் பட்டது.தடுமாறிக் கட்டிலில் அமர்ந்தேன். பிருஷ்டத்தை ஈரம் நனைத்தது.ஆனாலும் முலைகளின் மீதான பார்வை அகலவில்லை.பார்த்துக்கொண்டிருக்கும்  போதே இரு காம்புகளிலும் ஒரே நேரத்தில் சலனம் தோன்றியது.காம்பின் கண்கள் பெரிதாயின.வலக்காம்பில் முதலில் பொட்டாய்ப் பால் துளிர்த்தது.பின் எல்லா கண்களிலும் பால் பொட்டு முகிழ்த்தது. மெல்ல பெருகியது.ஐந்து நிமிட இடைவெளிக்கு பின் இட முலையின் கண்களிலும் பால் பெருக்கம்.நொடி பொழுதுகளில் நீரூற்றுப் போல் பால் பீய்ச்சி அடித்தது. சீரான சப்தத்துடன் பாலூற்று பீய்ச்சிக்கொண்டிருந்தது. மாரடைத்தது. மெத்தையில் கவிழ்ந்தேன்.பால் மெத்தை.இளம் பாலின் மணம்.பாலூற்று விடாது வர்ஷித்தது. அறையெங்கும் பால் பெருகியோடிற்று.கிழக்குச் சுவரோரம் வைத்திருந்த மரப்பெட்டியின் அடியில் இருந்து கரப்புகள் பயந்து ஓடின.கருகிய கூந்தல் பாலில் மிதந்தபடி வழிந்து சென்றது.

இருக்க முடியாது.இதோ,மனதை ஒருமைப்படுத்தி தலையை உலுக்கி எழுந்தேனானால் அனைத்தும் கனவென்று உறுதியாகிவிடும். ஒருக்களித்து கிடந்திருக்கும் நான் இடக்கை தூக்கி தடவினால்,புணர்ந்தோய்ந்து உறங்கும் ராதாவின் சூடாறிய தொடைகள் தட்டுப்படும்.அப்போது உறுதியாகிவிடும் இப்பாலூற்றெல்லாம் பிரமையென்று.ஆனால்,தலை உலுக்கி எழுந்தாலும் சீரான சப்தத்துடன் பாலூற்று பீய்ச்சிக்கொண்டிருக்கிறது.அறையில் இரண்டு அடிக்கு பால் நிரம்பியிருந்தது.பாலில் நனைந்து கட்டிலும் மெத்தையும் வெளுத்து துலங்கின. திடீரென சிரிப்பொலி கேட்டது.நவநீதனின் மழலை சிரிப்பொலி.

கடாயில் பால் காய்ந்துகொண்டிருந்தது.பெருங்கடாய்.இருபது படி பிடிக்கும். விறகை செருகுவதும் நீண்ட கரண்டியால் பாலைக் கிளறுவதுமாக இருப்பது அவஸ்தையாகத்தான் இருக்கிறது. இப்போதெல்லாம் முற்றத்தில்தான் பால் காய்ச்சுவது.பின்கட்டில் வேலை நடந்துக் கொண்டிருந்தது. தோட்டத்தை ஒட்டி இரண்டு அறைகள் எழும்பிக்கொண்டிருந்தன.பணத்துக்குக் குறைவில்லை. தாராளம். நவநீதன் பிறந்த பிறகுதான் செல்வ செழிப்பு. பால் பெருகியது.

"...ங்கா...ப்ப்பா...” நவநீதன் வாசல் நோக்கி வந்து கொண்டிருந்தான். எட்டு மாதத்திலேயே தவழ்வதில் வேகம்.வலக்கை தரையில் மடித்து,அழுத்தி, வயிற்றை எக்கித் தள்ளி தவழ்வான்.அவனது வேகத்தைப் பார்த்து சிரிப்பு வந்தது.தலைப்பா கட்டுத் துண்டை அவிழ்த்து முகம் துடைத்தேன்.”ன்னாடா பயலே....ந்தா ராதா,படிகிட்ட வந்துட்டாம் பாரு”.

அடுக்களையில் இருந்து வெளிப்பட்ட ராதாவுக்கு நெற்றியெங்கும் வியர்வை பொடிந்திருந்தது.சேலையைத் தூக்கிச் செருகியிருந்தாள்.கொலுசுகள் சிணுங்கிட சின்ன ஓட்டத்துடன் வந்து நவநீதனை அள்ளினாள்.”வாலு,வாலு....ஒரு இடத்துல நிக்க மாட்டியே”.உயர தூக்கி வயிற்றில் முத்தினாள்.

“கொஞ்சம் பிடிங்களேன்.அடுப்புல ரசம் கொதிக்குது.”

வியர்த்து பிசுபிசுத்திருந்தன. எனது கைகள்.குழந்தையைத் தூக்க கரங்கள் நீட்டினேன். பொக்கைச் சிரிப்பில் தாவி வந்தான்.வெள்ளி அரைஞாண் வயிற்றுக்கு ஏறிக் கிடந்தது. பிருஷ்ட இடப்பாகத்தில் கரும்பச்சை மரு அருகே எறும்பு ஒன்று ஒட்டிக்கிடந்தது. கையால் தட்டிவிட்டு நவநீதனை உயரத் தூக்கி போட்டு பிடித்தேன்.”ங்ங்ங்கா...” ஒலியோடு அவன் கண் விரியச் சிரிப்பது ரசமாயிருந்தது.ராதா நிலையருகே நின்று ரசித்தாள்.”குடல் ஏறப்போகுது” என்றாள்.எனக்கு உற்சாகம் பீறிட்டது.இன்னும் சற்று உயரே தூக்கிப் போட்டு பிடித்தேன்.கரத்தில் விழுந்ததும் நவநீதன் துள்ளினான்.பிடி வழுக்கித் தவறினான்.என் கால் அருகே கொதித்துக் குமிழியிட்டுக் கொண்டிருந்த கடாய்ப் பாலில்...எந்த சப்த வகைக்குள்ளும் அடங்காத நவநீதனின் பெருங்கேவலொலி கேட்டது.நிலை தாண்டி அலறியபடி ராதா துடித்து ஓடி கடாயில் விழுந்து அள்ளுவது தெரிந்தது.கடாய் கவிழ்ந்து அவள் கூந்தலும் முகமும் செந்தணலினுள் கிடப்பது மங்கலாய்....நினைவெனக்கு தப்பிக்கொண்டிருந்தது.

மூர்ச்சை தெளியும்போது பசிய வாழை இலையில் நவநீதனைக் கிடத்தியிருந்தனர். நவநீதன் அல்ல அது.பாலில் வெந்து குழைந்த பிண்டம்.ஊர் திரண்டிருந்தது.தூணில் ராதா முட்டி முட்டி அலறியழுதபடி இருந்தாள்.அவளை பார்ப்பதற்கு பயங்கரமாய் இருந்தது.தீயில் கருகிய முகம்.சுவற்றில் முட்டியதில் நெற்றி உடைந்து குருதி ஒழுகிக்கொண்டிருந்தது.அருகிருந்த பெண்கள் அவளை கட்டுப்படுத்த பிரயாசைப்பட்டுக்கொண்டிருந்தனர்.அந்த இடத்தில் விநோத மணம் வீசியது. கலவையான மனம்.கிழங்கு சுட்ட மணம்.நாய் பிரசவித்த மனம்.

பாலூற்று நிற்கவில்லை.ஆனால் வேகம் தணிந்திருந்தது.கட்டில் பாலில் மிதந்து மெல்லிய அலை போல் ஆடியபடி இருந்தது.என் நினைவு என் வசம்தான் இருக்கிறதா என்ற ஐயம் எழுந்தது.மனதில் துயரம் ஒரு பந்துபோல் அடைத்திருந்தது. ஏதாவது ஒரு இழை தெளிவு கிடைத்தால்கூட போதுமென்றிருக்கிறது.

சமுத்திரக் கரையில் நிற்பது போல் சப்தம் கேட்கிறது.என் கனவோ அன்றி நனவோ ஆன நிலையின் மெல்லிய சவ்வைக் கிழித்து ஏதோ நுழைவது போலிருக்கிறது. சமுத்திர பேரிரைச்சலை இப்போது தெளிவாக கேட்கமுடிகிறது.சவ்வு முழுதாய்க் கிழிந்துவிட்டதோ?ஆ,என்ன பிரம்மாண்டம்!மாபெரும் சமுத்ரம்.முழுதும் வெளுத்த ஆங்கார அலையடிக்கும் சமுத்ரம்.பால் சமுத்ரம்.அலைகளினூடே கரிய புள்ளி போல் ஏதோ தெரிகிறது.வாலிபன் ஒருவன் கைகள் வீசி,கால்கள் அடித்து நீந்தி வருகிறான். நிதானமான,ஒரே வேகத்திலான நீச்சல்.வனப்பும் திரட்சியுமான வாலிபன் போலிருந்தது.கரையடுத்து வந்துவிட்டான்.உடலெங்கும் வழிந்தொழுகும் பாலுடன் அவன் கரையில் நடந்துவருகிறான்.பூர்ண நிர்வாணம்.கிரேக்க சிற்பம் போலிருக்கிறது அவனது தேகக்கட்டு.மயிர் பிடரியில் வழிகிறது.நெடுந்துயர்ந்த உருவம்.என்னை பார்த்து சிரிக்கிறான்.பால் தோற்கும் வெளுப்பில் பற்கள் மிண்ணுகின்றன.

அவனது குரல் மயக்குவதாய் இருக்கிறது.’தவறு நேர்ந்துவிட்டது.மன்னிக்க வேண்டும். எனது கனவின் எல்லை விரிந்து பரந்துவிட்டது.மற்றொரு கனவில் குறுக்கீடு செய்துவிட்டேன்.தயைகூர்ந்து மன்னித்தருள வேண்டும்’ என்றான்.

என் வியப்பு இன்னும் அகலா நிலையில் அவனுக்கு என்ன பதிலை சொல்வதென்று எனக்கு தெரியவில்லை,மிடறு விழுங்கிச் சொன்னேன்.’நான் இன்னும் தீர்மாணிக்கவில்லை.மயக்கம் நீடிக்கிறது...’

என் பதிலை அவ்விளைஞன் எதிர்பார்த்ததாய்த் தோன்றவில்லை.சிரசு தாழ்த்தி வணங்கி ‘வருகிறேன்’ என்றான்.எனக்கு அவனை போக சொல்வதற்கு இஷ்டமில்லை. என்றாலும் வாளாவிருக்கிறேன்.அவன் திரும்பி பால் சமுத்ரம் நோக்கி நடக்கிறான். ராஜனுக்கே உரிய கம்பீர நடை.உடலில் பால் ஒழுகி ஓடிக்கொண்டிருக்கிறது. வழியும் பாலின் மறைப்பில் அவன் இடப் பிருஷ்டத்தில் கரும்பச்சை மரு மங்கலாய் தெரிந்தது.
***********

பி.கு:'சுகுணாவின் காலை பொழுது" தொகுப்பிற்கு நான் எழுதிய விமர்சனக் கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்                  





1 comment:

செல்வகுமார் said...

கடும் வேதனைகுள்ளான மனம் பற்றிய துல்லியமான பதிவு. அந்த வேதனை நமக்கும் பரவுகிறது. தன் வேதனையிலிருந்து வெளியேற கண்டடைந்த ஒரு வழியுடன் முடிகிறது கதை. சொல்லிய விதத்தில் மிக சிறந்த கதை.

Post a Comment