Monday, November 14, 2011

நோய்மையும் ஈரநினைவுகளும்


சாளரம் வழியே நுழைகின்ற நட்சத்திரங்களை
வெறித்துக் கொண்டிருந்தாள் அம்மா
அப்பா எதுவுமே பேசவில்லை
கதவினை தாழிட்டு பூட்டினான் தம்பி
அவனது கரங்கள் பிடிமானமற்று நடுங்கின
அம்மா என்னை அழைத்ததுப் போலொரு பிரம்மை
வெம்மை படர்ந்த தன் கரங்களால்
சுருக்கங்கள் நிறைந்த அப்பாவின் நெற்றியை
அம்மா வருடியபோதுக் கூட
கண்ணிமைத்தாரேயன்றி வேறெதுவுமே பேசவில்லை
எப்பொழுதுமே அப்பா அளவோடு பேசுபவராகவே
இருந்திருக்கிறார் என்பது என் ஞாபகத்திற்கு வந்தது
ஆனால் அம்மா அதிகமாக பேசுவாள்
அதிகமான கோபத்தோடு பேசுவாள்
அதிகமான கருணையோடும் பேசுவாள்
கோபமும் கருணையும் வற்றிப்போன நிலையில்
அம்மாவின் சொற்கள் சாரமிழந்து வடிந்துவிட்டிருந்தன
எங்கும் படிந்திருக்கிறது அடர்மௌனம்
உத்திரத்தில் ஊர்ந்துகொண்டிருந்த பல்லி திடீரென கீழேவிழுகிறது
அப்பா அம்மா தம்பி நான்
எல்லோரும் ஒரு கணம்
ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறோம்
இரவின் நிறங்கள் மெல்ல அழிய
திரும்பவும் வந்துவிடும் வெயில்

2 comments:

நிலாரசிகன் said...

நல்ல கவிதை. வாழ்த்துகள்.

//ஊர்ந்துக்கொண்டிருந்த//

ஊர்ந்துகொண்டிருந்த.

துரோணா said...

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.மாற்றிவிடுகிறேன் சார்.

Post a Comment