நீள்க்குருதி பெருகும்
ஆதிகால வேட்டைநிலத்தில்
ஒரு இனம் இருந்தது,ஒரு மொழி இருந்தது.
ஒரு சொல் இருந்தது.
இந்த இரவின் மீது
படிந்திருக்கும்
பொய்களின் நிலவை
பற்றி எரியச் செய்யும்
அந்தச் சொல்லை தேடி
அலைகிறேன், நான்.
வெயிற் காலத்திற்கு
தற்கொலையின் மொழி
குளிர் இரவுகளுக்கு
ஸ்பரிசத்தின் மொழி
மழைப் பயணங்களுக்கு
கண்ணீரின் மொழி
இலையுதிர் நினைவுகளுக்கு
கனவுகளின் மொழியென
ஒவ்வொரு பருவத்தின்போதும்
நான் ஒவ்வொரு
மொழியின் ஆடையை
தேர்வு செய்கிறேன்.
ஆனால் பருவங்கள்
குழம்பிய அகாலத்தில்,
பாதைகள் தொலைந்த
வனவிருட்சங்களின் வெளியில்
தனித்து விடப்பட்டிருக்கும்போது
எனக்கு அதிக அவகாசம் கிடையாது.
அடங்காது தகிக்கும்
காற்றின் வெப்பத்திலிருந்து
சீக்கிரம் மீள
எனக்கு ஒரு சொல் வேண்டும்.
.******
ஆயிரம் ஆயிரம்
இரவுகளுக்கு பிறகு
பூக்கிறது
ஈடன் தோட்டத்தின்
கடைசி மலர்.
நார்சிசஸ்
முதல்முறையாக
தன் பிம்பத்தை பார்க்கிறான்.
மழை பெய்கிறது.
மழையின் துளிகளில்
நார்சிசஸ்
தன்னுடைய பிம்பங்களை
பார்க்கிறான்.
நிலபரப்பை தன்
எண்ணிலடங்கா கரங்களால்
அள்ளிக்கொள்கிறது மழை.
இலைகள் உதிர்கின்றன
பூக்கள் உதிர்கின்றன
வண்ணங்கள் உதிர்கின்றன.
யாவும்
தன் பிம்பங்களால்
தன் அழகால்
நிரம்புவதை
நார்சிசஸ் உணர்கிறான்.
நார்சிசஸிற்கு தன் பிம்பத்துடன்
பேச வேண்டும்.
********
நான் நார்சிசஸ்.
எனக்கு ஒரு சொல் வேண்டும்.
பின் என் பிம்பங்கள் நிறைய
இந்த உலகம் வேண்டும்.
நன்றி : உயிரோசை
No comments:
Post a Comment