Sunday, July 28, 2013

வனதேவதையின் இசைக் குறிப்புகள்


1.
திரும்பவுமொருமுறை டேவிட் கீபோர்டை தொட்டு பார்த்தான். பழக்கப்படாத வளர்ப்பு பிராணியைப்போல் அது பிடிகொடுக்காமல் முரண்டு பிடித்தது.அவன் இதை கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. நான்கைந்து வருடங்களாய் தன்னோடு உடலுறுப்பு போல் ஒட்டிக்கொண்டிருந்த இசையறிவு சட்டென்று ஒரு அதிகாலையில் முழுமையாய் அந்நியப்பட்டுப் போய்விடுமா என்ன? பயத்திலும் அதிர்ச்சியிலும் அவனது கை கால்கள் உறைந்து போய்விட்டன.ரொம்பவே சிரமப்பட்டு இயல்பான உடல்மொழியை வலிந்து மீட்டவனாய் தன்னறையை விட்டகன்று கூடத்திற்கு வந்தான். அப்பா நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியின் அலைவரிசையை மாற்றிக்கொண்டிருந்தார். அவரிடம் தன்னிருப்பை காட்டிக் கொள்ள விரும்பாமல் வாசலுக்குச் செல்லும் பாதைச் சுவரை ஒட்டி அமைதியாய் நடந்தபடி அவன் வீட்டிற்கு வெளியே வந்தான்.
வானம் இன்னமும் தூறிக்கொண்டுதான் இருந்தது. தார்ச்சாலையின் வெடிப்புகளில் தேங்கிய மழைநீரின் மேல் விழுந்த சாரல் துளிகள் நீர்க்குமிழிகளை எழுப்புவதும் பின் உடைப்பதுமாய் போக்குக்காட்டிக் கொண்டிருக்க, மின் கம்பத்தை ஒட்டிய இறக்கத்தில் சகதியாய் பிசுபிசுத்துப் போயிருந்த மணற் மேட்டில் ஒரு பெரியத் தவளை சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. பீதியின் கண்களோடு மழையை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அழுகை வந்துவிடும் போல் தோன்றியது. எத்தனைக் கச்சேரிகளில் இதே கீபோர்டை வைத்து நூற்றுக்கணக்கில் பாடல்கள் இசைத்திருப்பான்? ஆடி மாதத்தில் தொடர்ந்து இருபது இருபந்தைந்து நாட்களுக்குக்கூட கச்சேரிகள் நடந்திருக்கின்றன.இவற்றையெல்லாம் இப்பொழுது நினைத்து பார்த்ததில் அவனுள் ஆழமான வெறுமையே மிஞ்சியது.
சற்றைக்குள் மழை பலமாக பிடித்துக் கொண்டது. மழையின் கனத்த துளிகள் கொய்யா மரக்கிளைகளிலும் வாழை மரத்திலைகளிலும் பட்டு தெறிக்கும் ஓசையில் தன் நினைவுகளின் குழப்பமான பாதையை அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தவன் வெளிக்கதவின் இரும்பு பிடி நகர்த்தப்படும் கிறீச்சொலியை கேட்டதன் மூலம் தன்னிலைக்கு திரும்பினான். ஈரத்தில் மூழ்கிய தலையை கைக்குட்டையால் துவர்த்தியபடி நடந்து வந்துக்கொண்டிருந்தார் அவனது மாமா. இவனை பார்த்ததும் மெலிதாய் சிரித்தப்படி இவனருகே வந்து அன்பாய் தோள்களை பற்றினார்.
"என்னடா மழை பெய்து வெளியில நிக்குற..."
"இல்ல மாமா...சும்மாதான்..."
"ம்ம்ம்..எப்ப ஹாஸ்டல்ல இருந்து வந்த..?"

"நேத்து ராத்திரி..."
டேவிடினுடைய மாமா தபேலா இசைக் கலைஞர். முன்னர் தனது வாலிப வயதில் சிங்கப்பூரில் ஏதோவோரு நட்சத்திர பொதுவிடுதியில் தபேலா வாசித்துக்கொண்டிருந்தவர் அவ்வேலை சலித்துப்போனதும் ஊர் திரும்பி "கிங்க்ஸ்" என்கிற பெயரில் இசைக்குழு தொடங்கி கல்யாணங்களிலும் கோயில் திருவிழாக்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டிருக்கிறார். அவர்தான் டேவிட் எட்டாவது படித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய அம்மாவிடம் பேசி அவனை கீபோர்ட் வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தது. அதேப் போல் பத்தாவது பரீட்சை எழுதி முடித்து விடுமுறையில் சும்மா இருந்தவனை கச்சேரிகளுக்கு முதன்முதலாக அழைத்து போனதும் அவர்தான். அதற்கு பிறகு "கிங்க்ஸ்" இசைக்குழுவின் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் டேவிட்டே கீபோர்ட் வாசிக்க ஆரம்பித்தான்.
நள்ளிரவு வரை கச்சேரி நடத்திவிட்டு அதற்கு பிறகு வீடு திரும்பிய நாட்களின் அனுபவத்தை இப்பொழுது யோசித்து பார்ப்பது அவனுக்கு ஆசுவாசம் தரும் நினைவாக இருந்தது. நொடிகளுக்குள்ளாக அந்நினைவே தீராத துயரமாய் மாறி பச்சைக் கொடியென படர்ந்து அவனை நெருக்கி அழுத்தியது. போன முறை கல்லூரி விடுதியிலிருந்து வீட்டிற்கு வந்தபோதுக்கூட முருகன் கோயில் திருவிழாவிற்கு இவன் கீபோர்ட் வாசிக்கப் போயிருந்தான்.அப்பொழுது குறிப்புகளிசைப்பதில் அவனுக்கு எந்த பிரச்சனையும் உண்டாகவில்லை.எனில் இப்பொழுது மட்டும் ஏன் இப்படியென யோசித்து அவனது மனம் பெரும் புதிரின் சிக்கலான முடிச்சுகளுக்கு நசுங்கி தவித்தது.
2.
மலைச் சரிவின் கீழேயிருந்த மிகச் சிறிய ஊர் அது. தூர தேசத்திலிருந்து தனது இசைக் கருவியோடும் அந்த விசித்தரமான பறவையோடும் அவ்வூருக்கு வந்து சேர்ந்தவனை ஊர்க்காரர்கள் அன்பாகவே வரவேற்றார்கள். ஏரியில் குளித்துவிட்டு ஈரத்துணியோடு கோயில் மண்டபத்திற்கு வந்தவனுக்கு ஊர் பூசாரியின் தயவால் கோயிலேயே தங்கிக் கொள்ள அனுமதி கிடைத்தது. நாடோடியாய் வருபவர்களிடம் ஏகத்திற்கும் கதைகளும் இதுவரை கண்டிராத பொருட்களும் கிடைக்குமென்பதால் எல்லோரும் அவனை ஆச்சரியத்தோடும் மரியாதையோடும் அனுகி நலம் விசாரித்து பேச்சுக்கொடுத்தார்கள்.ஆனால் அடுத்த சில மணிநேரங்களுக்குள்ளாகவே தங்களது கற்பனை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய நாடோடி அவனில்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டதில் சுவராஸ்யமிழந்து தத்தம் வேலைகளுக்கு திரும்ப நேர்ந்தது.
வந்த நாள் தொட்டு யாரிடமும் அதிகம் பேசாமல்,பகலெங்கும் மலைக்காடுகளில் அலைவதையும் பின் ராத்திரியில் மண்டபத்தில் அமர்ந்தோ அல்லது ஊர் எல்லையிலிருந்த ஏரிக்கரையில் அமர்ந்தோ தன் இசைக் கருவியில் இருந்து துயரத்தின் முடிவற்ற பாடலை இசைப்பதையும் அவன் வழக்கமாக்கிக் கொண்டான்.அவனுடைய இசை யுவதிகளின் இரவுகளுக்குள் புகுந்து அவர்களின் காதல் புத்தகங்களில் இரத்தத்தால் பிரிவையும் காயங்களையும் வரைந்து வைத்தது. ஊருறங்கிய ஜாமங்களில் இளம் பெண்கள் மட்டும் தனிமையில் அமிழ்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்கள்.அவனுடைய பாடல் அவர்களது நினைவில் ஒரு அழிக்கமுடியாத வடுப்போல் ஆகிவிட்டிருந்தது. முன்பு சிரித்துப் பேசி விளையாடிக்கொண்டிருந்த பெண்கள் பின்வந்த நாட்களில் சோகம் பூசிய முகத்தில் களையற்றவர்களாய் பித்து பிடித்ததுப்போல் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள்.
அவனது இசை அப்பெண்களுக்குள் மதுவின் காட்டமான போதையை ஊட்டியிருந்தது. வழக்கமாய் பிற்பகலில் வீட்டுத் திண்னைகளில் கூடி ஊர்க் கதைகள் யாவும் பேசி சிரிக்கும் பெண்கள் இராத்திரிகளில் அவன் வாசிக்கும் மாய சங்கீதம் பற்றி மட்டும் தங்களுக்குள் பேச்செழும்பாத வண்ணம் கவனமாய் பார்த்து கொண்டனர். காடுகளின் ஈரத்தை தன்னுள் கொண்டு வரும் அவனது இசை ஒவ்வொருத்தருக்குள்ளும் தனிப்பட்ட உணர்வலைகளை உக்கிரமாய் எழுப்பியதில் யாருக்குமே அதை பொதுவில் ஒரு விவாதப் பொருளாகவோ அல்லது காட்சி பொருளாகவோ முன்வைப்பதில் விருப்பமிருக்கவில்லை. இரவுகளை நிறைக்கும் அவனது ஸ்வரங்கள் இவர்களது மனதின் பெருந்துயர் கானகத்தில் அன்பின் மலர்களை தேடி ஆயிரம் மழைத்துளிகளாய் அலைந்து திரிகின்றபோது இவர்களல்லாத பிறராலான ஊர் இவனது இசையை செவிகளில் கேட்டுணராததாய் தூங்கி வழிந்து கொண்டிருந்தது .பெண்கள் விடியற்காலை கனவுகளில் அவன் வளர்க்கும் விசித்திர பறவை ,முந்தைய இரவில் நீண்ட இசை சஞ்சாரத்தை காற்றில் மீட்டியபடி வானில் நீந்துவதைக் கண்டார்கள்.
3.
மாமா வாசலில் நின்று செருப்பு மாட்டியபடியே இவனை சமிக்ஞை செய்து கூப்பிட்டார். அவர் பக்கமாய் வேகமாக நகர்ந்ததில் சிமென்ட் தரையிலிருந்து அவனது வலது கால் வழுக்கி ஈரச் சகதிக்குள் புதைந்தது.
"பார்த்து வாடா.." என்றார் அவனது மாமா.
காலில் ஒட்டிய சேரை உதறியபடியே அவரருகே சென்று சொல்லுங்க என்பதுப் போல் பார்த்தான் .
"இன்னைக்கு ராத்திரி தின்னனூர் ஜான்சன் ஸ்கூல் பக்கத்துல இருக்குற புத்து கோயில்ல கச்சேரி இருக்கு... வாசிக்க வர்றீயா..."
முகத்தில் பேயறைந்தது மாதிரியாகிவிட்டது அவனுக்கு.
பதற்றமேறிய குரலில் "இல்ல மாமா...உடம்பு ஒரு மாதிரி சரியில்ல...என்னால வாசிக்க முடியாதுன்னு நினைக்கிறேன்..கச்சேரிக்கு மட்டும் சும்மான்னா வரேன்" என்று அவசரமாக பதில் சொன்னான்.
அவர் அதிருப்தியான பார்வையில் அவனை ஒருமுறை ஏறிட்டு நோக்கினார்.
"ம்ம்..வீட்டுல நேரம் போலயா என்ன?சும்மா வந்து என்ன பண்ணப்போற?"
அவனுக்கு உடனடியாக என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. எந்த எதிர்வினையும் செய்யாது கண்களை மட்டும் அப்படியும் இப்படியுமாக அசைத்து பரிதாபமாக விழித்தான்.
"எனக்கொன்னுமில்ல வரதுன்னா வா.. உடம்புக்கு முடியலன்னா ரெஸ்ட் எடுத்துக்கோ" என்றபடி அவர் கிளம்ப எத்தனித்தார்.
"இன்னைக்கு கீபோர்ட் யாரு வாசிக்கிறா?". தனக்கே பதில் தெரிந்த இக்கேள்வியை ஏதோ பேச வேண்டுமென்பதற்காக பொய்யான ஆர்வத்தோடு அவன் கேட்டான்.
"நீதான் வரலன்னுட்டியே...அப்போ சுரேஷதான் கூப்பிடனும்"
அவர் போனப் பிறகும் வீட்டிற்குள் செல்ல மனமில்லாது வாசலிலேயே அமர்ந்து அலைபேசியில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தவனின் வானத்தில் மழை விட்டுவிட்டு பெய்துக்கொண்டிருந்தது.
3.
சாயுங்காலம் அவனது பெற்றோரும் தங்கையும் வேலூரில் யாரோ சொந்தக்காரர் திருமணத்திற்கு போகிறோம் என்று சொல்லி கிளம்பிவிட்டார்கள். இனி மறுநாள் மதியம்தான் அவர்கள் வருவார்கள் என்கிற நினைப்பு நீளப்போகும் தனிமையின் கணங்களை அவனுள் வலியாய் பதித்திருந்தது. விளக்கொளியின்றி இருட்டாய் தெரிந்த தன்னறையை கூடத்து நாற்காலியில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் வெகு இயல்பாய் கீபோர்ட் பக்கம் நின்று தனக்கு பிடித்த பாடலை வாசிக்க முயன்றபோது அவனது மனம் அவன் கற்பனைக்கூட செய்திராத அளவிற்கு பழக்கமற்றதாகவும் ஞாபகங்களற்றதாகவும் பைத்தியக்காரனை போல் கீபோர்டை வெறுமையோடு பார்த்து செயலிழந்து ஸ்தம்பித்தது. எட்டாவது படித்துக்கொண்டிருந்தபோது முதன்முதலாக செந்தில் மாஸ்டர் முன் நின்று இதே இசைக் கருவியை வாஞ்சையோடு பார்த்த கண்களை அதீத பயத்தின் சிவப்பு வண்ணத்தில் அவன் திரும்பவும் உணர்ந்தான். வாசிக்க தெரியாதவன்போல் வாத்தியத்தை வெறிக்க மட்டுமே அவனால் முடிந்தது. சுத்தமாக அவனுக்கு ஒன்றுமே நினைவில் இல்லை. கற்றுக்கொண்ட குறிப்புகள், வாசித்த பாடல்கள், ஸ்தாயிகளுக்கான அளவுகள் என எதற்குமே அவன் மூளையடுக்குகளில் பொருள் இல்லையென்றுணர்ந்தபோது நெளிந்தும் படர்ந்தும் ஓடும் மூளை நரம்புகளை வெட்டுக்கத்தியால் அறுத்தெறிந்தால் என்ன என்றே அவன் யோசித்தான். ஒரு உந்துதலில் நாடகக்காரனையொத்த விரலசைவுகளோடு கீபோர்டு பொத்தான்களை அவன் அழுத்தியபோது அவனது கால்கள் பலமிழந்து நடுக்கம் கண்டு கொண்டிருந்தன.மனம் கற்பிதம் செய்த இசை சுவரமற்ற வெற்று சப்தமாய் வெளிவரவும் அவன் சுயக்காழ்ப்புணர்ச்சியில் ஓங்காரமாய் கதறியழ துடித்தான்.பின்னர் சடுதியில் வீட்டிலிருப்பவர்களின் நினைவு தட்டவும் தன்னுடைய ஆன்மபலம் முழுவதையும் பிரயோகித்து தன்னைத் தானே கட்டுபடுத்திக் கொண்டான்.
அப்பா சமயங்களில் பழைய இளையராஜா பாடல்களை இவனை வாசிக்க சொல்லி கேட்டு ரசிப்பதுண்டு. எங்கே இன்றைக்கு அதுபோல் ஏதாவது கேட்டுவிடுவாரோ என்று அவன் மனதால் பயந்து தன்னுள் அரற்றிக்கொண்டேயிருந்தான். நல்லவேளையாக அப்படியெதுவும் நடந்துவிடவில்லை. எனினும் இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கோ அல்லது மறுநாளோ அவர் அவனை இசைக்கச் சொல்லி கேட்கக்கூடும். அப்பொழுது என்ன செய்வது?
மீண்டுமொருமுறை முயன்று பார்ப்போம் என்று தன்னறைக்குள் சென்றான். இந்த தடவை தோல்வியைவிடவும் கருணையற்று விரிந்திருந்த தனிமையே அவனை அதிகமாய் அச்சுறுத்தியது. மின்விளக்கை உயிர்ப்பித்துவிட்டு பாலையின் நிலத்திற்குள் நுழைந்தவன் வறண்ட நதியின் தடங்களின் வழியே கால்கள் அழுந்தியெரிய நடந்துபோய் அதனை நெருங்குவதற்குள்ளாக பெரும் முதுமையின் சோர்வும் இயலாமையும் அவனை மூழ்கடித்து தாழ்வுணர்ச்சி கொள்ள செய்துவிட்டிருந்தன. கருப்பும் வெள்ளையுமாக பாம்பின் நாவுகள் வளைந்து நீண்டு அவன் முன்னே விஷம் கக்கி நீலமாய் ஜ்வலித்துக் கொண்டிருந்த வேளையில் அவன் தன் நினைவில் புதைந்த இசைக் குறிப்புகளை அவற்றின்மேல் படிந்த சாபங்களின் இருண்மையிலிருந்து விடுவிக்கப் போராடிக் கொண்டிருந்தான். உடலெங்கும் நீர்ப்பாசிகள் அப்பிக்கொண்டதைப் போன்ற அருவெறுப்பில் அவன் பொத்தான்களில் இருந்து வெடுக்கென்று விரல்களை எடுத்த போது, இமையோரங்களில் வெம்மையாய் கண்ணீர்த்துளிகள் தங்கிவிட்டிருந்தன.
விளக்குகளையெல்லாம் அவசர அவசரமாய் அணைத்துவிட்டு கண்ணாடிக்கு முன்னிருந்த பூட்டையும் சாவியையும் விரைந்தெடுத்து அவற்றை கைகளில் திணித்தப்படி வேகமாய் ஓடி வந்தவன் வாசற் கதவை பலமாய் இழுத்தறைந்தான். பிடித்திழுத்த வேகத்தில் கதவு நிலைச்சட்டத்தின் மேல் மோதி அதன் எதிர்விசையால் பின்னுக்கு போனது.அதை மறுபடியும் பற்றியிழுத்து தாழிட்டு பூட்டினான். முதுகு வியர்வையில் உடலே கசகசத்து காந்திக்கொண்டிருந்தது. வாசற்படியில் கால்களை இடுக்கிக்கொண்டமர்ந்து கால்சராய் பையில் கைக்குட்டையை தேடியவன் தன் மறதிக்காய் தன்னையே கடிந்துக்கொண்டான். வீட்டிற்குள் சென்று எடுத்து வரலாமா என்கிற எண்ணத்தை ஒற்றை நொடிக்குள்ளாகவே மறுதலித்து மழைவிட்ட சாலையில் தன் கவனத்தை திருப்பினான். மாபெரும் இசைக்கோர்வையின் கடைசித் துளி மௌனத்தைப்போல் அவனது மனம் அவ்வளவு ரணமாக இருந்தது.
4.
அதிகாலையிலேயே ஊரைத் தாண்டியிருக்கும் தோட்டத்தில் இருந்து மல்லிப்பூக்கள் பறித்து வந்து அவற்றை பகல் முழுவதும் தொடுத்து சரமாக்கி இரவு படுக்கபோகும்போது தலையில் சூடிக் கொள்வது வயதுப் பெண்களின் தினசரி பாடாகிப்போனது. வீட்டுப் பெரியவர்கள் எவ்வளவோ சொல்லியும் திட்டியும் அடித்தும் கூட இந்த பழக்கத்தை அப்பெண்களால் நிறுத்திக் கொள்ள முடியவில்லை. பின்னிரவில் அவனது இசைக்குறிப்புகள் அடியாழ நிலத்திலிருந்து கசிந்து வந்து கற்பாறைகளுக்குள் ஓடும் கனவின் பெருநதியை ஒற்றைக் குமிழாக்கி இலைகளற்ற மரத்தின் உச்சிக்கிளையில் நர்த்தனம் புரிய செய்த போது மல்லிப்பூக்கள் ஒவ்வொன்றாய் வாடத் துவங்குகின்றன.விரிந்த மொட்டுக்களில் வலித்தரும் ஞாபகங்களின் கரிய சாயங்கள் படர்ந்து அப்பெண்களின் கண்ணீர் மீட்கப்படாத மௌனம்போல் கனத்து போகிறது. நாள்தோறும் வைபவத்திற்கு செல்வதைப்போல் பூக் கட்டுவதும் அது இரவில் வாடிப்போக தாங்கவொண்ணா துக்கத்தில் அரற்றுவதும் அவர்களுக்கு வாடிக்கையானது. வாடிய மலர்கள் இல்லத்தின் கொள்ளைப்புறத்தில் மறுநாள் புதைக்கப்பட்டன.
.ஊர்ப்பெண்களின் செயல்பாடுகளில் இயல்புத்தன்மை வெகுவாய் குறைந்துப் போனதன் உச்சமாய் ஒரு வெய்யில் நாளில் ஊர்த் தலைவரின் மகள் நிர்வாணமாய் பொதுக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டாள். தொடர்ந்து ஒரு வாரத்திற்குள்ளாக அடுத்தடுத்து மூன்று பெண்கள் அரிவாள்மனையா கழுத்தறுத்துக் கொண்டும், கோயில் முகப்பில் தூக்குப் போட்டுக்கொண்டும், எரியும் கொள்ளியை வயிற்றில் சொருகிக் கொண்டும் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டதில் ஊரே பதறிப் போனது.
தொடர்ந்து நிகழ்ந்த துர்மரணங்கள் வயதுப்பெண்களுக்கு மத்தியில் பயத்தை கிளப்பியிருந்தாலும் யாராலும் அவனது இசையை கேட்காமலிருக்க முடியவில்லை. தினமும் துயரத்தில் துவண்டு பின்னிரவு தாண்டி கண்ணயரும்போது நாளை மல்லிப்பூ பறிக்கக்கூடாது எனவும் இரவு சீக்கிரமே படுத்துறங்கிட வேண்டுமெனவும் மனதளவில் உறுதியெடுத்துக் கொள்வார்கள். இருந்தும் மறுநாள் தங்கள் மனதை கட்டுப்படுத்த முடியாமல் ஊர் எழுவதற்கு முன்னே பூந்தோட்டத்தை அடைந்து மல்லி அள்ள தொடங்கிவிடுவார்கள். இதுதான் பிரச்சனை என்று மற்றவர்களிடம் சொல்லவும் அவர்களுக்கு திராணியெழவில்லை. ஊர்க்காரர்களோ அவனை கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தார்கள்.எப்பொழுதேனும் ஊரின் இளவட்ட ஆண்கள் வேட்டைக்காக காடுகளுக்குள் செல்லும்போது அவனை பார்த்ததாக பேசிச் செல்வதோடு அவனைப் பற்றிய ஊரின் நினைவு மரத்துப் போயிருந்தது.
வருகிற அமாவாசையன்று ஊருக்கு எல்லைக் கட்டி பெண்களை காவு வாங்கும் கெட்ட ஆவியை மந்திரித்து விரட்டுவதாக பூசாரி பஞ்சாயத்துக் கூட்டத்தில் சத்தியம் செய்தார்.
5.
கச்சேரி முடிந்து அவர்கள் அப்பொழுதுதான் வீடு திரும்பி கொண்டிருந்தார்கள். மாமாவும் பிற வாத்தியக்காரர்களும் டெம்போவில் சென்றுவிட டேவிட்டும் ஹரிஷும் ஆளற்ற பின்னிரவின் சாலையில் மங்கலான மஞ்சளொளி மறைக்க முடியாத இருள் நிழல்களின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்தார்கள். பேச்சுகளற்று நீண்ட நொடிகளில் அவனுள் எண்ணங்கள் சுருள் சுருளாய் மடிந்துக் கொண்டிருந்தன. கச்சேரியின் தொடக்கம் முதல் முடிவு வரையிலும் சுரேஷ் கீபோர்ட் வாசிப்பதையே கண் கொட்டாது அவன் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த விரல்களின் லாவகமும் சப்தங்கள் இசையாவதன் ரசவாதமும் அவனுள் திரும்ப பெற முடியாத கனவென கிளைவிட்டு ரத்தம் உறிஞ்சிக்கொண்டிருந்தன. எவ்வளவு கூர்மையாக கவனித்தும் அவனுக்கு தான் பயின்ற வாசிப்புமுறையின் பிடி கிடைக்கவேயில்லை. இத்தனைக்கும் அனைத்தும் பாடல்களுமே அவன் திரும்ப திரும்ப இசைத்து பழகியவை.சமீபம் வரையிலும் அவனை முழுமையாக ஆட்கொண்டிருந்த இசையது.ஆற்றாமையில் அவன் உள்ளம் பிதுங்கி திணறியது.
"டேய்..கேக்குதா இல்லயாடா..?"
நான்கு முறைக் கூப்பிட்டும் டேவிட்டிடம் எந்த எதிர்வினையுமில்லாததைக் கண்டு வண்டியின் வேகத்தை மட்டுபடுத்தியபடி சத்தமாக பேசினான் ஹரிஷ்.
"ம்ம்...சொல்லு.."
"உடம்பு சரியில்லைன்னியே இப்போ பரவாயில்லையா..அப்ப பார்த்தப்பவே கண்ணெல்லாம் ஜீரத்துல செவப்பாயிருந்துச்சு"
உண்மையிலேயே தனக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டதோவென்று அவன் சந்தேகித்தான். காய்ச்சல் கண்டது போல் உடல் தளர்ந்துபோக உள்ளே குளிரெடுத்துக் கொண்டிருந்தது.
"இன்னும் சரியாகல.."
தொடர்ந்து ஹரிஷ் பேசிய எந்த சொல்லும் அவனது காதுகளை எட்டவேயில்லை.
வெகுதுல்லியமாய் தனது மூளையை தீண்டிய மெல்லிய சிறகசைப்பின் ஓசைக் கேட்டு டேவிட் பின்பக்கமாய் தலையை திருப்பி பார்த்தான். ஊதாப்பூ நிறத்தில் வெல்வெட்டில் துணி நெய்ததுப் போன்ற உடலமைப்போடு சிறிய அலகுக்கொண்ட நீளமானதொரு பறவை தாழ பறந்துக்கொண்டிருந்தது.அந்த பறவையின் சிறிய உருளை விழிகளை எங்கேயோ முன்பே பார்த்ததுப் போன்ற நினைவில் தொலைந்து கண்கள் விலக்காது அதன் சிறகசைப்பையே கவனித்துக் கொண்டிருந்தான். நீருக்குள் மூழ்கி மூச்சுத்திணறுவதைப் போல் அப்பறவையினுடைய சிறகசைப்புகள் எழுப்பிய பெருங்காற்றில் மூச்சழுந்திப் போக சீராய் சுவாசிப்பதே அவனுக்கு சிரமமாகயிருந்தது.இமைப்பொழுதிற்குள் மேகம் கூடிக்கலைவதைப் போல் அவனுக்கும் அப்பறவைக்குமிடையே ஒரு அடர்த்தியான பனித்திரை தோன்றி விலகிய கணத்தில் அது படுவேகமாய் உயரப் பறந்து பின் அவனுடைய பார்வை எல்லையை கடந்து வானத்தில் கரும்புள்ளியாக கரைந்து மறைந்து விட்டிருந்தது.
ஒழுங்கற்ற வெவ்வேறு இசைக்குறிப்புகள் வெவ்வேறு வாத்தியங்களில் பெரும் இரைச்சலாக வாசிக்கப்பட இவன் தனது செவிகளை இரு கைகளாலும் இறுக்கமாக மூடிக்கொண்டான்.
6.
கும்பம் சுமந்தபடி எல்லைக் கட்டும் பொருட்டு ஊருக்கு வெளியே இருந்த ஏரியில் தொடங்கி மலை ஏற்றத்தின் முனையிலிருக்கும் பூந்தோட்டம் வரை மந்திர உச்சாடனம் செய்தபடி ஓடிக்கொண்டிருந்தார் பூசாரி. அவரோடு இன்னும் சில ஊர் வாலிபர்களும் சேர்ந்திருந்தார்கள். ஊர் எல்லையை சுற்றிவிட்டு திரும்பவும் ஏரிக்கரைக்கு வந்தபோது பின்னிரவாகியிருந்தது.
தனது பறவையோடு மலையிலிருந்து இறங்கி வந்தவன் இவர்களை பார்த்தும் கண்டுகொள்ளாது, தான் எப்பொழுதும் அமரும் மரத்தினடியே உட்கார்ந்து இசைக்கருவியை மீட்ட துவங்கினான். கும்பம் மீது அலங்காரமாய் ஜோடிக்கப்பட்டிருந்த மல்லிப்பூச்சரத்தில் மொட்டவிழாது மூடியிருந்த இதழ்கள் பொலிவிழந்து வாடி உதிரத் தொடங்கி,சடுதியில் மொத்தச் சரத்திலும் வெறும் நார் மட்டுமே மிச்சமிருக்க பூக்கள் யாவும் வதங்கி கொட்டி தீர்ந்திருந்தன.கண்கள் ரத்தச் சிவப்பாக பூசாரி அவன் பக்கமாய் பார்வையை திருப்பினார். இமை மூடியிருக்க தன்னிசை எழுச்சியில் அவன் புறவுலகிலிருந்து துண்டுப்பட்டு தனக்கான பெருவனங்களில் உலவிக் கொண்டிருந்தான். அருகில் அவனது பறவை ஆப்பிள் பழமொன்றை கொத்தித் தின்றுக்கொண்டிருந்தது.
ஹரிஷின் முதுகைத் தட்டி டேவிட் மெல்ல அவனிடம் பேச்சுக்கொடுத்தான்.
"மச்சான்...இப்போ கீபோர்ட் வாசிக்கவே எனக்கு மறந்துடுச்சுன்னு வச்சிக்கியேன்..நான் என்ன பண்றது?"
"மறக்கறதுன்னா எப்படிடா சொல்ற...?ஸ்கேல் மாறி நோட்ஸ் வாசிக்கறதயா.. அதெல்லாந் எவன்டா கண்டுபிடிக்கப் போறான்"
"அதில்லடா...இப்போ ஒரு பாட்டோட பேக்ரவுண்டை வேற பாட்டுக்கு வாசிக்கிற மாதிரி.. வாசிக்க வேண்டிய பாட்டோட மொத்த ட்யூனும் மறந்துடுச்சுன்னா..."
"அது எப்படி மச்சான்? ஒவ்வொரு பாட்டுக்கும் ரிதம் வேறவேறல்ல..."
டேவிட்டிற்கு தன் பிரச்சனையை இவனிடம் எப்படி விளக்குவதென புரியவில்லை. இயலாமை அவனுள் புகையும் நெருப்பென தீய்ந்துக் கொண்டிருந்தது.
அவன் தன் சுயநினைவை முற்றிலுமாக இழந்துவிட்டிருந்தான்.குளக்கரையை ஒட்டியிருந்த யுகலிப்டஸ் மரத்தில்,முட்கிளைகள் சொருகிய தென்னை நார் கயிறால் அவனை ஓரிரவு முழுக்க கட்டிப் போட்டிருந்தார்கள்.முட்கள் தைத்த காயங்களில் எரிச்சலெடுத்து வாட்டியது. ஊரைத்தாண்டி தூக்கியடிக்கப்பட்டிருந்த அவன் கந்தலாக நொடிந்து போயிருந்தான். கழுத்து நரம்புகள் யாவும் சாட்டையடியில் வீங்கிப் போய் விண்ணென வலி உண்டாக்கி துடிக்க வைத்தன. வெகுவாய் சிரமப்பட்டு மெல்ல கண்களை திறந்த அவனால் தனக்கு சமீபத்தில் ஒடித்து முறிக்கப்பட்டு துண்டமாயிருந்த இசைக்கருவியை தெளிவில்லாமல் பார்க்க முடிந்தது.
அன்றிரவு அவன் எவ்வளவோ முயன்று பார்த்தும் இதுநாள் வரை அவனிசைத்துக் கொண்டிருந்த பாடலை அவனது பிரக்ஞையில் திரும்பவும் உருப்பெறச் செய்யவே முடியவில்லை.அவனது நினைவை விடுத்து அது வேறெங்கோ தொலைந்து போயிருந்தது. அவனுடைய பறவை அவன் கால்களுக்குள்ளேயே வட்டமிட்டுக் கொண்டிருக்க அவன் கண்களை மூடி தன்னுளின்றி மறைந்து போய்விட்ட தனக்கான பாடலை கண்ணீர் விடும் இதயத்தால் தேடத் துவங்கினான்.
7.
ஊர் பெண்கள் இயல்பிற்கு திரும்பிய மூன்றாம் நாள் கோயில் குளத்தில் அவனது சடலம் மிதந்துக் கொண்டிருந்தது. பிணத்தை சுற்றி சின்ன சின்ன மீன்கள் குவிந்தும் விலகியும் அலைந்துக் கொண்டிருக்க அவனுடைய பறவை தொலைதூர வானத்தில் அவனைத் தேடித்தேடி அலுத்து பின்வெயில் முற்றிய வேளையில் ஓய்ந்தொடுங்கியது.
தலையைத் திருப்பி பறவையை பார்த்துக்கொண்டிருந்த டேவிட்டின் முகத்தில் பின்னால் வந்த லாரியின் மஞ்சள் விளக்கொளி பளிச்சென்று அறையவும் அவன் தன் கண்களை குறுக்கிக் கொண்டான். வேகத்தடையின் மேலேறி பைக் குலுங்கியதில் சமநிலை குலைந்து ஹரிஷின் தோள்களை பிடித்திருந்த கைகளை அவன் விலக்க வேண்டியாகியது.எல்லாம் கண நேரம் தான். தரையில் கிடந்த பொடிக்கற்களின் மீதேறி வழுக்கி சரிந்து விழயிருந்த பைக்கை தன்னாலான மட்டும் முயன்று இழுத்து பிடித்து நிறுத்தினான் ஹரிஷ். அதற்குள்ளாக சாலையில் தலைக் குப்புற கவிழ்ந்திருந்த டேவிட் லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி இரு துண்டுகளாய் வீசியெறிப்பட்டிருந்தான்.
8.
அறைக்குள் நுழைந்த அவனது முகம் தன்னம்பிக்கையில் சிவப்பாய் ஒளிர்ந்து பிரகாசித்திருந்தது. இலையுதிர்கால பாடலின் குறிப்புகள் அவனது நினைவின் பாதையில் பயணித்து நீண்டன. கீபோர்டின் மேல் அவன் விரல்கள் படவும் முன்பு அவனது மரணத்தில் தொலைந்த காடுகளின் ஈரமும் பச்சைய வாசனையும் காற்றலைகளில் படர்ந்து விரிந்தது.தேவதைக் கதைகளில் கொலை செய்யப்பட்ட சாத்தான்கள் அவனது இசையிலிருந்து வெளிப்பட்டு அறையெங்கும் நிரம்பி ஆங்காரமாய் நடனமிட தொடங்கினார்கள்.
ஜன்னல் கம்பிகளில் கால்களை பற்றக் கொடுத்திருந்த அப்பறவை தன் பெரிய சிறகுகளை அகலமாய் விரித்தசைத்து அவனது கண்களுக்குள் நீல வானத்தை படரச் செய்தது. இரவுகளின் ஆழ்ந்த சுழிப்புகளில் இசையின் அதிர்வலைகளை ஊடுருவச் செய்தவன் பிளவுப்பட்ட தன்னுடலையும் உப்பலாகி நீரில் மிதந்த தன்னுடலையும் நரிகள் கடித்து திண்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.
O
பெருவனங்களின்
அத்தனை வேர்களிலும்
நஞ்சூற்றி என் ஞாபகங்களை
ஒரு வெற்றிடத்தில்
புதைத்து வைத்ததில்
நான் தொலைத்த
குறிப்புகளும்
என்னில் இல்லாமல் போன
நானும்
இந்த மழையில்
இந்த குளிரில்
இந்த காற்றில்
உன்னை தேடி வருகிறோம்
உன் கூடாயிருக்கும் வானத்தில்
எனக்கு திசைகள் தெரியவில்லை
என் சிறகுகள்
உதிர்ந்துக் கொண்டே இருக்கின்றன
என் குருதி வெப்பம் தணிந்து
குளிர தொடங்கி விட்டிருக்கிறது
இனி அதிகமும் அவகாசம் கிடையாது
பழிகளறியாத இசையின் பறவையே
என்னை ஆட்கொள்ள சீக்கிரமே வா....
நான் இறந்துக் கொண்டிருக்கிறேன்

O
துரோணா

நன்றி : மலைகள்



No comments:

Post a Comment