Monday, December 10, 2012

சாம்பல் நிலவு


கோப்பைகளில் நிரம்பி
வழிந்தோடும் மதுவில்
நம்முடைய முகங்கள்
சிதறி உடைகின்றன

குளிர்ந்த மாமிசத்தின்
மணம் கண்டு வந்த
குருட்டு பூனை
அறைக் கதவை
விடாது தட்டிக் கொண்டிருக்கிறது

நான்
மீண்டும் கோப்பைகளை நிரப்புகிறேன்

திரவமென ஊர்ந்து வந்த
பழைய ஞாபகங்களின்
அத்தனை குற்றச்சாட்டுகளும்
போதையில் நூல்போல்
திரிந்து புழுத்த நாற்றம்
உண்டு பண்ணுகின்றன
O
ஆடைகள் கலைந்து
நிர்வாணத்தின்
ரணமானத் தழும்புகளில்
மாறிமாறி முத்தமிட்டு கொள்கிறோம்

ஈரம் வற்றிபோன
எனது கண்களிலிருந்து
வழியும் காமத்தின் கொடுநஞ்சை
நீலம் பாரித்த உனது உதடுகளால்
உறிந்தெடுக்கிறாய்

உனது செழித்த முலைகளில்
நான் முகம் புதைக்க
என் கண்ணீரின் வெம்மை
உன் அடிவயிற்றில் படர்கிறது

உடல்களின் ரகசியங்களை திறந்து
நாம் பயணிக்கையில்
மரணத்தின் வாசம் முகர்ந்து
நடுங்குகின்றன
இரவின் தாழ்கள்
O
இருட்டிற்குள் தொலைந்து
வெகுதூரம் சென்று
மீண்டும் பேய்க்கூச்சல் ஒலிக்கும்
இருளையே கண்டடைகிறோம்

புணர்ச்சிக்கு பின் முத்தம் கொடுக்க
நீ நெருங்குகையில்
என் பலம் மட்டும் கொண்டு
உன் கண்ணத்தில் ஓங்கி அறைகிறேன்
வெறிகொண்டெழும் நீ
என் முகத்தில் எட்டி உதைக்கிறாய்

இரண்டு ராட்சஸ வனவிலங்குகள்
மூர்க்கமாய் மோதிக் கொள்ள
அவற்றிற்கு சாராயத்தை
ஊற்றிக்கொடுத்து
வேட்டையாடி சதையறுக்கிறான் கடவுள்
O
நன்றி: மலைகள்

No comments:

Post a Comment