Friday, January 7, 2011

சிதிலங்கள்

உரையாடல்களின் சொற்களுக்குள்ளாக,
நான் ஒளித்து வைக்கின்றேன்.
உன் மீதான குற்றச்சாட்டுகளை,
மீண்டும் நீ கண்டெடுக்கின்றாய்,
மன்னிப்பிற்கான மற்றுமொரு சாத்தியத்தை.


சதுரங்கத்தின் கட்டங்களுக்குள்ளாக,
நான் மாற்றியமைக்கின்றேன்.
அதன் கருப்பு வெள்ளை விதிமுறைகளை,
மீண்டும் நீ கடந்துவிடுகின்றாய்,
எளிதாக மிகவும் எளிதாக.

இன்னமும் இருக்கின்றது,
கொஞ்சம் ஏமாற்றம்.
நீ சொல்லும் உலர்ந்த பொய்களை,
நம்புகின்ற அந்தக் கணத்திற்குள்ளாக.

இன்னமும் இருக்கின்றது,
கொஞ்சம் துக்கம்.
நீ சொல்லும் நட்பின் உண்மைகளை,
சந்தேகிக்கின்ற காதலின் கண்களுக்குள்ளாக.

பிரிவின் இறுதி முத்தத்தில்,
சிதறிய உமிழ் நீரினை,நான்
எங்கும் தேடிக்கொண்டிருக்கின்றேன்,
தீராக் கண்ணீரின் பெருங்கடலில்.

நான் கட்டமைக்கின்றேன்,
என் நம்பிக்கைகளின் தீர்மாணங்களை.
எதிர்பார்ப்புகளின் நிச்சயமின்மைகளென
தொடர்கின்றன,நாட்களின் நினைவுகள்.

பிறழ்வுகளெனவும் கனவுகளெனவும்,
என்னை சூழ்ந்து பரவுகின்றன,
நம் காதலின் சிதைந்த இரவுகள்.

உன் கரம் பற்றுதலின் வெப்பம்,
அங்கு எரித்துக் கொண்டிருக்கிறது,
காற்றின் பெரு வெளியை.

முடிவுபெறாத ஒரு நூற்றாண்டு கவிதையென,
ஏங்குகின்றன ,உருக்குலைந்த என் இறுதி உணர்வுகள்,
தீனமாய் அழும் ஒரு முரட்டு கிழவனைப் போல்
                                                                                                                      -துரோணா

4 comments:

Philosophy Prabhakaran said...

நல்ல கவிதை சார்... இன்டலி ஒட்டுப்பட்டை எங்கே...?

துரோணா said...

மிக்க நன்றி. இன்ட்லி ஓட்டுப்பட்டை... விரைவில்!

Raja said...

கலக்கிவிட்டீர்கள் வழக்கம்போலவே .... வாழ்த்துக்கள்...

துரோணா said...

மிக்க நன்றி ராஜா....

Post a Comment